• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு இது தான்... அறைகூவல் விடுத்து தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

|

சென்னை: புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

Mk Stalins letter to the Dmk Cadres calling for a protest

நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை உள்ளது என்ற அரிய நிலைமையைப் பயன்படுத்தி, மக்கள் நலனிலும் அவர்தம் நல்வாழ்விலும் அக்கறை செலுத்தாமல்; ஊரடங்கு காலத்தில், ஏழை - எளிய தொழிலாளர்களை வேலையின்றி - பட்டினியால் வாடச் செய்து, ஊர் ஊராக அலையவைத்து, நூற்றுக் கணக்கானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது விவசாயிகளின் வாழ்க்கையுடன் விபரீத விளையாட்டு நடத்தும் வினோதமான மசோதாக்களை நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ளது.

நாட்டைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த மொழிபேசும் மக்களைப் பாதிப்பதாக இருந்தாலும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகக் குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற வரலாறு இப்போதும் தொடர்வதைப் பொதுமக்கள் அறிவர்.

ஊடகங்களில் விளம்பரம் செய்தால் பொய்யை உண்மையாக்கிவிடலாம் என மத்திய பா.ஜ.க. அரசு நம்புகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கொரோனா ஊரடங்கு கால அறிவிப்புகள் இவையனைத்திலும் பிரதமரும் மத்திய பா.ஜ.க அமைச்சர்களும் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளோ பொதுமக்களோ இனியும் ஏமாறத் தயாராக இல்லை.

புதிய வேளாண் சட்டங்களின் வாயிலாக, விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆகும் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் திரு. மோடி அவர்கள். ஆனால், இந்தச் சட்டங்களினால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் இழக்கப் போகிறார்கள் இந்திய விவசாயிகள் என்பதே உண்மையான, ஆனால் கசப்பான நிலவரம்.

தற்சார்புக் கொள்கை என்று வானவில் போல வண்ணவண்ணமாக வார்த்தைஜாலம் காட்டிக்கொண்டு, தன்மானத்துடன் வாழும் இந்திய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றியிருக்கும் பா.ஜ.க. அரசையும் அதற்குத் துணை போன - 'விவசாயி வேடம்'போடும் அடிமை அ.தி.மு.க. அரசையும் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் விவசாய அமைப்பினருடன் இணைந்து நின்று, செப்டம்பர் 28-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் கொரோனா கால விதிமுறைகளையும் - பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைப்பிடித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப வேண்டிய முழக்கங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றைத் துண்டறிக்கைகளாக அச்சிட்டு, விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் வழங்கி, விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளும் பா.ஜ.க. - அ.தி.மு.க. அரசின் துரோகங்களை அம்பலப்படுத்துங்கள்!

தேமுதிகவுக்கு திமுக கொடுத்த அதிர்ச்சி... உடன்படாத பேச்சுவார்த்தை... கானல் நீராகும் கூட்டணி..!

திரும்பப் பெறு... திரும்பப் பெறு...

பா.ஜ.க. அரசே... மோடி அரசே...

விவசாயிகளை வஞ்சிக்கும்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு!

ஓயமாட்டோம்... ஓயமாட்டோம்...

விவசாயிகள் நலன் காக்கும்வரை

ஓயமாட்டோம்.. ஓயமாட்டோம்..

வீழ்வது நாமாக இருப்பினும்;

வாழ்வது விவசாயிகளாக இருக்கட்டும்!

எதிரானது... எதிரானது...

பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம்

விவசாயிகளுக்கு எதிரானது; விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரானது!

எதிரானது... எதிரானது...

பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம்

மாநில உரிமைகளுக்கு எதிரானது;

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது!

அனுமதியோம்... அனுமதியோம்...

கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்திடும்

பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டத்தை

அனுமதியோம் அனுமதியோம்...

பதுக்கலுக்குப் பாதை வகுக்கும்

மோடி அரசின் சட்டத்தை

அனுமதியோம் அனுமதியோம்!

எதிர்த்திடுவோம்... எதிர்த்திடுவோம்...

நுகர்வோருக்கு எதிரான

வேளாண் சட்டத்தை எதிர்த்திடுவோம்!

ஏழை - நடுத்தர வர்க்கத்தின்

உணவுப் பாதுகாப்பை நாசமாக்கிடும்

வேளாண் சட்டத்தை எதிர்த்திடுவோம்.

ஏழை மகன் என்று சொல்லியே,

ஏழைகளை வஞ்சிப்பதா?

விவசாயி வேடதாரி எடப்பாடி

விவசாயிகளை ஏமாற்றுவதா?

தோலுரிப்போம்... தோலுரிப்போம்...

பா.ஜ.க. - அ.தி.மு.க.

கூட்டு மோசடியைத்

தோலுரிப்போம்!

ஆர்ப்பரிப்போம்... ஆர்ப்பரிப்போம்...

விவசாய நாடாம் இந்தியாவை

கார்ப்பரேட் கையில் கொடுப்பதை எதிர்த்து

ஆர்ப்பரிப்போம்.. ஆர்ப்பரிப்போம்..

வாருங்கள்... விவசாயிகளே வாருங்கள்...

உங்களுக்கான ஆர்ப்பாட்டத்திற்கு

வாருங்கள்!

வாருங்கள் மக்களே வாருங்கள்...

நம் மண்ணைக் காக்க வாருங்கள்!

- என்கிற முழக்கங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக எட்டுத் திசையும் அதிரட்டும். செப்டம்பர் 28 நடைபெறுகிற ஆர்ப்பாட்டம், விவசாயிகளின் பங்கேற்புடன் - பொதுமக்களின் ஆதரவுடன் மத்திய - மாநில அரசுகளின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தட்டும்! இந்தியாவின் தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வுத் தீ, நாடு முழுவதும் பரவட்டும்! நன்மை தராத சட்டங்களைப் பொசுக்கட்டும்! உலகத்தார்க்கு ஆணியாம் உழவர்களைப் போற்றட்டும்! விவசாயிகளின் வாழ்வு மலர்ந்து மணம் பெறட்டும்!

இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Mk Stalin's letter to the Dmk Cadres calling for a protest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X