• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்

|
  தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின் -வீடியோ

  சென்னை: இந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் செப்டம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான் என தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது: "முப்பெரும் விழாவினை வெற்றிகரமாகவும் புதுமையாகவும் நடத்தி முடித்திட உணர்வுப் பூர்வமாக ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவதற்கு முன்பே, களத்திற்கு அழைக்கின்ற கடிதத்தினை எழுதுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.கழகம் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் மனம் மயங்கிடும் இயக்கமல்ல, மக்களின் நலன் காக்கும் அறப்போர்க் களத்தில் எப்போதும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்த இயக்கம்.

  இந்த நாள் (செப்டம்பர் 17) நமக்கு இரட்டிப்பு பெருமைமிக்க நாள். ஆம்.. செப்டம்பர் 17தான் இந்த இனத்திற்கு மானமும் அறிவுமே அசைக்கமுடியாத - அழிக்க இயலாத நிரந்தர அழகு வாய்ந்த சொத்து என்பதை நினைவூட்டி - ஒளிகாட்டி வழிதந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள். இதே (செப்டம்பர் 17) நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தமிழக மக்களுக்கான சீர்திருத்தப் பேரியக்கத்தை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நாள்.

  இந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா!

  1949ம் ஆண்டு தொடங்கப்பட்டது

  1949ம் ஆண்டு தொடங்கப்பட்டது

  1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் சென்னை மண்ணடி - பவளக்காரத் தெருவில் 7-ம் எண் இல்லத்தில் தனது தம்பிமார்களுடன் நடத்திய நெடுநேர ஆலோசனைகளுக்குப்பின், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய இயக்கம் தொடங்கப்படுவதை பேரறிஞர் அண்ணா அறிவித்தார். தனது வாழ்வில் கண்டதும் கொண்டதுமான ஒரே தலைவர் தந்தை பெரியாருக்காக தி.மு.கழகத்தின் தலைவர் நாற்காலி காலியாகவே இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

  திக கொள்கையே எங்கள் கொள்கை

  திக கொள்கையே எங்கள் கொள்கை

  மறுநாள், செப்டம்பர் 18 அன்று சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா திடலில் கொட்டும் மழையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளமெனக் கூடியிருந்த மக்கள் பெருந்திரள் நோக்கி உரையாற்றிய பேரறிஞர் அண்ணா, "சமுதாயத்துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத்துறையிலே சமதர்மக் குறிக்கோள். அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல. கொள்கை ஒன்றே, கோட்பாடும் ஒன்றே, திட்டமும் வேறு அல்ல என்ற நிலை வந்தே தீரும்" என முழங்கினார்.

  இது பெரியார் மண்

  இது பெரியார் மண்

  18 ஆண்டுகாலம் பலவித நெருக்கடிகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே இயக்கத்தை வளர்த்து, 1967ல் தி.மு.கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது ஆட்சியை, பெரியாருக்குக் காணிக்கை என்றார். வெறும் சொல்லால் அல்ல, செயல்களால்! அந்தப் பேரறிஞரின் அன்புத் தம்பியாம் நம் அருமைத் தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கழகத்தைக் கட்டிக்காத்து, நெருப்பாறுகளைக் கடந்து, கோடானுகோடி உடன்பிறப்புகளின் உற்ற துணையுடன் அரை நூற்றாண்டு காலம் தலைமைப் பொறுப்பேற்று, தமிழ்ச் சமுதாயம் ஈடேற, பெரியாரின் பெருங்கனவுகளை நிறைவேற்றினார். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையும் நிறைவேற்றி, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அமைத்து ‘இது பெரியார் மண்' என்பதை உலகத்திற்கு உறுதிப்படுத்தினார்.

  அமித்ஷா தெரிவித்த கருத்து

  அமித்ஷா தெரிவித்த கருத்து

  தந்தை பெரியார் பிறந்தநாளில் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்று 70ஆம் அகவை. அகம் மகிழ்ந்து கொண்டாட வாருங்கள் என உங்களில் ஒருவனான நான் அழைக்கவில்லை. அறப்போர்க்களம் காண வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன். அன்னைத் தமிழைக் காப்பதுதான் நமக்குப் பெருமகிழ்ச்சி. அதற்கான போராட்டமே நமக்குத் திருவிழா. அத்தகைய திருவிழாவை நாம் கொண்டாடவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி திவாஸ்' என்கிற இந்தி நாளினையொட்டி தெரிவித்த கருத்துதான் நம்மைக் கிளர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.

  ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும்

  ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும்

  "இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும். இந்திதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கக் கூடியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் பேசுவோரை இரண்டாம்தரக் குடிமக்களாக்குவது. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் அடையாளத்தைத் தகர்த்து, நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடியது. இந்தி என்கிற ஆதிக்க அணுகுண்டு கொண்டு, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆபத்தை உருவாக்கிவிடாதீர்கள் என்பதுதான் நமது கோரிக்கை.

  இந்தி ஆதிக்கத்தை விரட்டுவோம்

  இந்தி ஆதிக்கத்தை விரட்டுவோம்

  நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதே நேரத்தில் எந்த மொழியும் நம் உயிருக்கும் மேலான தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்குமேயானால், அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுமல்ல. 1938ல் முதன் முதலில் தொடங்கிய இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர், பெரியார் எனும் பெருந்தலைவரை நமக்கு வழங்கியது. பேரறிஞர் அண்ணா என்கிற மகத்தான சிந்தனையாளரை அடையாளம் காட்டியது. பள்ளிச்சிறுவனாக கையில் தமிழ்க்கொடி ஏந்தி திருவாரூர் வீதிகளில் முழக்கமிட்டுச் சென்ற முத்தமிழறிஞர் கலைஞரை அடையாளம் காட்டியது. நடராசன் - தாளமுத்து எனும் கொள்கை மறவர்களின் உயிர்த் தியாகத்தால் தமிழர்களின் நெஞ்செமல்லாம் உணர்வு நெருப்பு பற்றியது. அது இந்தி ஆதிக்கத்தை விரட்டியடித்தது.

   விரட்டப்பட்டது இந்தி ஆதிக்கம்

  விரட்டப்பட்டது இந்தி ஆதிக்கம்

  அன்று தொடங்கிய போராட்டம் அதன்பிறகு, இந்தி ஆதிக்கம் எந்த வழியாக உள்ளே நுழைய முயன்றாலும் அதனைத் துரத்தியது. முன்வாசல், பின்வாசல், திட்டிவாசல் என பல வழிகளிலும் நுழைய முயன்ற இந்தி ஆதிக்கத்தை ஓட ஓட விரட்டியது திராவிட இயக்கம். 1965ல் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்கிற மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து, தமிழ்நாட்டின் இளைஞர்களும் மாணவர்களும் போர்க்கோலம் பூண்ட மாபெரும் வரலாற்றினை எவராலும் மறைத்திட இயலாது.

   இந்திக்காக உயிர்நீத்தனர்

  இந்திக்காக உயிர்நீத்தனர்

  கீழப்பழுவூர் சின்னச்சாமி தொடங்கி பல இளைஞர்கள் ஆதிக்க இந்தியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்க தங்கள் தேக்கு மரத் தேகத்திற்கு தீவைத்துக் கொண்டு உயிர்க்கொடை வழங்கினார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை இராசேந்திரன், காவல்துறையின் துப்பாக்கி முனைக்கு தன் மார்பு காட்டி, தோட்டாக்களை நெஞ்சில் ஏந்தி, தமிழன்னைக்கு உயிரை ஈந்தார். இன்னும் கோவையிலே, பொள்ளாச்சியிலே, மதுக்கரையிலே துணை ராணுவத்தின் தோட்டாக்களால் துளையிடப்பட்டு இன்னுயிர் வழங்கிய இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம்.

  தமிழ் செம்மொழி

  தமிழ் செம்மொழி

  இந்தத் தியாக வரலாற்றை நெஞ்சிலே ஏந்திய இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம், 1967ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், இந்தி ஆதிக்கத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார் அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா. அந்தக் கொள்கையைக் காத்து, தமிழுக்கு அரண் அமைத்ததுடன், இந்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, தமிழன்னைக்கு அணிகலன் சூட்டியவர் தலைவர் கலைஞர்.

  அமித்ஷாவின் கருத்து

  அமித்ஷாவின் கருத்து

  தமிழ் காக்க திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அந்தந்த மக்கள் பேசக்கூடிய தாய்மொழிகளையும் பாதுகாத்தன. இந்தி ஆதிக்கத்திலிருந்து பல மொழிகளை மீட்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்தின. இந்தியாவின் சிறப்புமிகு அடையாளமான பன்முகத்தன்மைக்கு வலு சேர்த்தன. இவை அத்தனையையும் பாழாக்கும் விதத்தில், இந்தியாவின் ஒற்றை அடையாளம் இந்தி மொழியே என்கிற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அமைந்துள்ளது.

  இந்துத்வா கொள்கை

  இந்துத்வா கொள்கை

  இதனை அவரது கருத்தாகப் பார்க்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்கள் இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் அது அவர்களை இயக்குகின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம். ஒரே தேசம் - ஒரே தேர்தல் -ஒரே ரேஷன் - ஒரே மொழி - ஒரே மதம் என்கிற இந்துத்வா கொள்கையின் படிப்படியான செயல்பாடுகளின் வெளிப்பாடுதான் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து.

  பாசிசத்தனத்தின் வெளிப்பாடு

  பாசிசத்தனத்தின் வெளிப்பாடு

  2014ல் மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்தே இந்தி - சமஸ்கிருத திணிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து தொல்லை தருகிறது. ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் ஆக்கியவர்கள், அதன்பிறகு சமஸ்கிருத வாரத்திற்கு அதி முக்கியத்துவம் அளித்தனர். ஐ.ஏ.எஸ் தேர்வுகள் தொடங்கி ரயில்வே - வங்கி - அஞ்சல் துறைகளுக்கான தேர்வுகளில் இந்தியே முதன்மை பெற்றது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்கள் - அறிவிப்பு பலகைகள், விமானப் பயண டிக்கெட்டுகள் என அனைத்திலும் இந்தியைத் திணித்தது பா.ஜ.க. அரசு. ஒவ்வொரு அறிவிப்பின் உள்நோக்கத்தையும் உணர்ந்துகொண்டு உடனடியாகக் களமிறங்கி, அவற்றில் பலவற்றைத் திரும்பப் பெறச் செய்ததில் தி.மு.கழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இத்தனைக்குப் பிறகும், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை நிலைநாட்ட பா.ஜ.க. அரசு துடிப்பது பாசிசத்தனத்தின் வெளிப்பாடாகும்.

  இந்தி திணிப்புக்கு எதிராக

  இந்தி திணிப்புக்கு எதிராக

  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் இந்தக் கொள்கைகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும் என்பதை உணர்ந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். தமிழுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்களின் தாய்மொழிகளுக்கும் ஆபத்தை உருவாக்குகின்ற இந்தக் கொடூரத்தை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதனால்தான், நேற்று (செப்டம்பர் 16) கழகத் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற உயர்நிலை செயல்த்திட்டக் கூட்டத்தில், மத்திய அரசின் இந்தித் திணிப்பையும் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

   மாவட்ட தலைநகரங்களில்

  மாவட்ட தலைநகரங்களில்

  கழகம் உதயமான நாளில் கொண்டாட்டத்திற்கு அழைக்கவில்லை. செப்டம்பர் 20ல் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அழைக்கிறேன். இது நமக்கான போராட்டமல்ல. நம் உயிரினும் மேலான தமிழ் மொழி காக்கும் போராட்டம். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த உணர்வினை வெளிப்படுத்தும் போராட்டம். தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் செப்டம்பர் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். அதுபோலவே ஒவ்வொரு வருவாய் மாவட்டத் தலைநகர்களிலும் எழுச்சிமிகு போராட்டத்தை அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட கழக மாவட்ட நிர்வாகிகள் நடத்துகின்றனர்.

  மக்கள் எழுச்சி

  மக்கள் எழுச்சி

  மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகர - பேரூர் -பகுதி - வட்ட - ஊராட்சி உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகளும் துணை அமைப்புகளான அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திரளாகப் பங்கேற்பதுடன், இது தமிழ் காக்கும் போராட்டம் என்பதால் தங்கள் பகுதியில் உள்ள உணர்வுமிக்க தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திட வேண்டும். இளைஞர்கள் - மாணவர்கள் - மகளிர் - ஆன்மிகச் சிந்தனை கொண்டோர் - பொதுநல அக்கறையுடையோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் மக்கள் எழுச்சியாக அமையவேண்டும்.

  தமிழன் தாழவும் மாட்டான்

  தமிழன் தாழவும் மாட்டான்

  தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான்; யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு உணர்த்தும் வகையில் அணிவகுப்போம். இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப்போம். அய்யா பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வழியில் அன்னைத் தமிழைக் காத்திடுவோம்.

  வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!" இவ்வாறு கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  dmk leader mk stalin said dmk will protest statewide against hindi imposition at september 20th
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more