உதயநிதி ஸ்டாலினுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுமா?.. மக்களை கைகாட்டி ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தை மக்கள்தான் தீர்மானிப்பார்கள், நான் அல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் நிறைந்த 97 பக்க பட்டியலை திமுக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்தோம். ஆதாரங்களுடன் நாங்கள் கொடுத்த புகார் மனுவை உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். ஊழலுக்காகவே வரும் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோற்கும்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடியில் களமிறங்கும் பழனிச்சாமி கடந்து வந்த பாதை - பயோடேட்டா

திமுக எதிர்க்கும்
தேர்தலுக்கு பிறகும் வலதுசாரிகளை திமுக எதிர்க்கும். சமூக நீதிக்காக திமுக எப்போதும் துணை நிற்கும். மத ரீதியிலான பிரிவினை, சம உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் திமுக அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அது போன்ற சக்திகளுக்கு நம் மாநிலத்தில் இடம் இல்லை. வாரிசு அரசியல் குறித்து பேச யாருக்கும் தகுதியில்லை.

அதிமுக எம்பி
லோக்சபாவில் ஒரே ஒரு அதிமுக எம்பி இருக்கிறாரே அவர் யாரு.. துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன்தானே. அவரது இன்னொரு மகன் ஜெயபிரதீப் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். பிசிசிஐயில் இருக்கிறார் அமித்ஷா மகன். இது போன் வாரிசு அரசியலுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. திமுகவில் கருத்தியல் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் நபர்களின் கடின உழைப்பை மதிக்கும்.

உதயநிதி
இன்று திமுத தலைவராக நான் இருக்கிறேன் என்றால் அதற்கு நான் 50 ஆண்டுகளாக அடிமட்ட அளவிலிருந்து பணியாற்றியுள்ளேன். உதயநிதியும் அது போல் பணியாற்ற வேண்டும். அவரது செயல்பாடுகளின் அடிப்படையில்தான் அவரது பயணம் முன்னோக்கி செல்லுமா என்பதை முடிவு செய்யும். உதயநிதியின் அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள், நான் அல்ல.

கூட்டணி கட்சி
திமுகவும் கூட்டணி கட்சிகளும் அரசியல் ரீதியாகவும் தத்துவ ரீதியிலாகவும் தமிழக மக்களுக்கு எதிரான அதிமுக பாஜக கூட்டணியை எதிர்க்க ஒன்றிணைந்துள்ளோம். இந்த ஒற்றுமை எங்கள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறச் செய்யும். எங்கள் சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஒரு வேளை அவர்கள் தங்களது சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதை நாங்கள் மதிப்போம். எங்களுடையது மெகா கூட்டணி, சிறிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க வரலாம் என்றார்.