சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை கொரோனா நிலவரம்.. மிக மிக அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.. ஸ்டாலின் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் வீடுவீடாகப் பரிசோதனை செய்து, சென்னையின் ஐந்து மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச் சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த் தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 பேர் என்றால், அதில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுவும் இராயபுரம் மண்டலத்தில் 3224 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2093 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2029 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2014 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1798 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மிக மிக அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

ஷாக்.. தமிழகத்தில் முதல் முறை.. 17 வயது சிறுமி, 25 வயது பெண் கொரோனாவால் பலி! காரணம் என்ன தெரியுமா? ஷாக்.. தமிழகத்தில் முதல் முறை.. 17 வயது சிறுமி, 25 வயது பெண் கொரோனாவால் பலி! காரணம் என்ன தெரியுமா?

பெரிய மாநிலங்களை விட அதிகம்

பெரிய மாநிலங்களை விட அதிகம்

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட, சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதை அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை. கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட இராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது மிக மிக அதிகம் என்பதையும் தமிழக அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை. 'கொரோனாவை மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்திவிட்டோம்,' என்றும், 'பலியானவர் எண்ணிக்கை குறைவு' என்றும் தனக்குத் தானே மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, சென்னையில் ஐந்து மண்டலங்கள் முழுமையாக கொரோனா மண்டலங்களாக மாறிவிட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

லட்சத்தை தாண்டுமோ என்று அச்சம்

லட்சத்தை தாண்டுமோ என்று அச்சம்

அதுவும் சென்னையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் மருத்துவ நிபுணர்கள் சொல்வதைப் போல, லட்சத்தைத் தாண்டிச் செல்லுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் பாதி அளவைத்தான் அரசு சொல்கிறது என்று ஊடகங்கள் இப்போது எழுதத் தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் மிகக் கூடுதல் என்றும், ஆனால் மிகக் குறைவாகத்தான் கணக்கில் காட்டப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன.

பதில் தேவை

பதில் தேவை

உரிய சோதனைகள் உடனடியாகச் செய்யப்படுவது இல்லை; சோதனை முடிவுகள் உடனே சொல்லப்படுவதில்லை; மரணங்கள் அனைத்தும் ஐந்து நாட்கள் கழித்துத்தான் அறிவிக்கப்படுகின்றன; கொரோனா மரணங்களாக இல்லாமல் வேறு நோய்கள் சொல்லப்படுகின்றன - இப்படி பல்வேறு சந்தேகங்களை மக்கள் எழுப்பி வருகிறார்கள். இவை எதற்கும் முதலமைச்சரோ, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ உரிய பதிலைச் சொல்வது இல்லை. தினமும் பாசிட்டிவ் ஆனோர் எண்ணிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு கடமை முடிந்ததாகச் சென்று விடுகிறார்கள்.

மருத்துவ துறை போராடும் நிலைமை

மருத்துவ துறை போராடும் நிலைமை

இதனிடையே, தமிழ்நாடு அரசு டாக்டர்கள், நர்சுகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து நாளை ஒருநாள் அடையாளப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றும் மகத்தான பணியில் இருக்கும் மருத்துவத் துறையினரையும் போராடும் நிலைமையிலேயே அரசு வைத்திருப்பது வேதனை தருவதாகும். கூட்டமைப்பினரை அழைத்து உடனடியாக அரசு பேசவேண்டும். அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும்.

கோயம்பேடு, டாஸ்மாக்

கோயம்பேடு, டாஸ்மாக்

கடந்த நான்கு நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தைத் தாண்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் 144 போட்டுள்ளதாகவும் சொல்லப்படும் சென்னையில் வாகனப் போக்குவரத்து என்பது, நெரிசல் மிகுந்ததாக உள்ளது என்றால் இதுதான் ஊரடங்கும், 144 தடையும் அமலில் இருக்கும் லட்சணமா? கோயம்பேடு காய்கறி அங்காடியைத் திறந்துவிட்டும், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டும் கொரோனா பரவலுக்கு மறைமுகக் காரணமாக இருந்த தமிழக அரசு, இப்போது சென்னையைத் திறந்து விட்டு, அடுத்த கொரோனா பாய்ச்சலுக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

அரண் அமைக்க வேண்டும்

அரண் அமைக்க வேண்டும்

ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களையும் கடுமையான அரண் அமைத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, 'கொரோனா இல்லாத சென்னை'யாகக் காட்டுவதற்கு அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடுவீடாகச் செய்ய வேண்டும். இப்பகுதியைச் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும். அப்பகுதிக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்க வேண்டும். சென்னையின் ஐந்து மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச்சிந்தனையை யும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
DMK Chief MK Stalin says Tamilnadu government should be open in corona virus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X