• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்

|

சென்னை: எதிர்வரும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; தமிழர்களை, தமிழர்களின் கல்வி - வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர்! என திருச்சி முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டுள்ளார்.

இன்று (19-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

MK Stalin says that 2021 Tamilnadu elections is not just an election

தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்துக்கு முன்னிலை வகிக்கக் கூடிய கழகத்தின் முதன்மைச் செயலாளர் திருச்சியின் தீரர் கே.என்.நேரு அவர்களே!

திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் அவர்களே!

திருச்சி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி அவர்களே!

திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே!

'கலைஞரால் தமிழகம் பெற்ற பயன்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள நற்றமிழ்ப் பேச்சாளர் சகோதரி பர்வீன் சுல்தானா அவர்களே!

மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழக நிர்வாகிகளே!

சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திரப்பாண்டியன் அவர்களே! ஸ்டாலின்குமார் அவர்களே! மாநகரத்தின் செயலாளர் அன்பழகன் அவர்களே!

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பெரியசாமி அவர்களே, பரணிக்குமார் அவர்களே!

துணை அமைப்புகளான பல்வேறு அணிகளின் அமைப்பாளர்களே - துணை அமைப்பாளர்களே!

கழக நிர்வாகிகளே! பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களே!

தலைவர் கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே!

அனைவருக்கும் வணக்கம்!

நீட்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யலாமா- மு.க ஸ்டாலின்

பேசத் தொடங்குவதற்கு முன்னதாக எனக்கு ஒரு கற்பனை ஏற்பட்டது. இது கொரோனா காலமாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்த முப்பெரும் விழா எப்படி நடத்தப்பட்டு இருக்கும், மூன்று மாவட்டங்களை இணைத்து நம்முடைய நேரு அவர்கள் எத்தகைய பிரமாண்டமாக நடத்தி இருப்பார் என்பதை நான் கொஞ்சம் நினைத்துப் பார்த்தேன்.

ஒரே இடத்தில் கம்பீரமான பந்தலை எழுப்பி, இலட்சக்கணக்கானவர்களை அழகாக அமர வைத்து, மிகப் பிரமாண்டமான மேடையில் எங்களை அமர வைத்து இருப்பார் நேரு. ஆனாலும் அந்தக் கவலையே தோன்றாத வகையில் திருச்சியில் மூன்று மாவட்டக் கழகங்களும் இணைந்து பல நூறு இடங்களில் லட்சக்கணக்கானவர்களை காணொலிக் காட்சி மூலமாக இன்றைக்குக் கூட்டி இருக்கிறீர்கள். இந்த உழைப்பு சாதாரணமானது அல்ல.

தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கோடு போடச் சொன்னால் ரோடு போடுபவர்கள் என்பவர்களை நாடு அறியும்.

அதுவும் திருச்சி கோட்டம் என்பது தீரர்களின் கோட்டம் என்பதால் ரோடு போடுபவர்கள் என்பதை விட அந்த இடத்தில் மாளிகை எழுப்பிவிடக் கூடியவர்கள் என்பதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் அறிவார்கள்; நானும் அறிவேன்; நீங்களும் அறிவீர்கள்!

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகச் செயலாளராக இருந்து திருச்சியை மட்டுமல்ல, திருச்சிக் கோட்டத்தையே தி.மு.க.கோட்டையாக மாற்றிக் காட்டினார் கே.என்.நேரு.

கே.என்.நேரு என்று சொன்னால் மாநில மாநாடு; மாநில மாநாடு என்று சொன்னால் கே.என்.நேரு என்ற பெயரை தன்னுடைய கடுமையான உழைப்பால் பெற்றார்.

அவரது பணி தலைமைக் கழகத்துக்குப் பயன்பட வேண்டும், அவரது உழைப்பு மாநிலம் முழுக்கக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னைக்கு அழைத்துக் கொண்டோம்.

இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமானது நிர்வாக வசதிக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் பிரிக்கப்பட்டது.

திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், திருச்சி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக வைரமணி அவர்களும் நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

மாவட்டங்கள் என்பவை நிர்வாக வசதிக்காக உருவாக்கப்படுபவை. எத்தனை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டாலும் இதயத்தால் நீங்கள் அனைவரும் ஒரே குடும்பம், திராவிட முன்னேற்றக் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு செயல்படுபவர்கள் என்பதால்தான் இன்றைய தினம் இந்த முப்பெரும் விழாவும் ஒரே ஒன்றுபட்ட உணர்வோடு, ஒருங்கிணைந்து நடைபெற்று வருகிறது.

இந்த பரந்த உள்ளத்தோடு செயல்படும் காடுவெட்டி தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைரமணி ஆகிய மூவரையும் பாராட்டுகிறேன்.

MK Stalin says that 2021 Tamilnadu elections is not just an election

கழகத்தின் வெற்றிக் கோட்டையாக திருச்சிக் கோட்டத்தை தக்க வைக்கும் கடமையும் பொறுப்பும் உங்கள் மூவருக்கும் இருக்கிறது. அதனைச் செய்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

ஏனென்றால் திருச்சி என்பது தமிழகத்தின் மையப்பகுதி. நடுத்தூணை பலப்படுத்தினால் மொத்தக் கட்டடமும் உறுதியோடு கம்பீரமாக நிற்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லித்தரத் தேவையில்லை.

திருச்சியை 'பாடி வீடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுவார்கள். திராவிட இயக்கத்தின் தத்துவப் புத்தகங்கள் தொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட திராவிடப் பண்ணை இருந்த ஊர் இந்த திருச்சி. தமிழ்நாட்டின் தெருக்கள் தோறும் தொண்டுக்கிழமாய் வலம் வந்த தந்தை பெரியார் அவர்கள், தனது மாளிகையை அமைத்து வாழ்ந்த ஊர் இந்த திருச்சி. தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊர் திருவாரூராக இருந்தாலும் அவரைத் தலைவராகத் தந்த ஊர் திருச்சி.

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், தான் நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர். தஞ்சை மாவட்டத்தில் அவர் பிறந்திருந்தாலும் திருச்சி மாவட்டத்தில் இருந்த குளித்தலைக்கு வந்துதான் போட்டியிட்டார். குளித்தலையில் நின்று வென்றதால்தான் அவர் என்றைக்கும் யாருக்குமே குனியாமல் நிமிர்ந்து நிற்கும் தலைவராக வாழ்ந்தார்.

நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராடியதாக இருந்தாலும், தமிழுக்காகக் கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்ததாக இருந்தாலும், அவை திருச்சியில் நடந்த போராட்டங்கள்தான்.

கழகம் தொடங்கியபோது திருச்சியில் நடந்த மாவட்ட மாநாடாக இருந்தாலும், கைத்தறித் துணிகளை விற்பதாக இருந்தாலும், வீதிவீதியாகச் சென்று கழகக் கொடியை ஏற்றுவதாக இருந்தாலும், இந்தி பெயர்ப் பலகையை அழிப்பதாக இருந்தாலும் திருச்சிதான் கலைஞருக்கு ஒதுக்கப்படும்.

அந்த அளவுக்கு தலைவரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது திருச்சி. அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தத் திருச்சி.

நான் எனது வாழ்க்கையில் முதன் முதலாக கைக் குழந்தையாக எடுத்து வரப்பட்ட ஊரும் திருச்சி தான். கல்லக்குடிப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து போராட்டம் நடத்தியதற்காக கைதான தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் வைக்கப்பட்டார்கள். அப்போது நான் கைக்குழந்தை. என்னை திருச்சி சிறைக்குத்தான் தூக்கிக் கொண்டு வந்து எனது தாயார் தயாளு அம்மையார் தலைவர் கலைஞர் அவர்களிடம் காட்டினார்கள். எனவே, திருச்சி என்னுடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஊர்.

திராவிட முன்னேற்றக் கழகமாக, சமுதாய இயக்கமாக இருந்து தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் இயக்கமாக மாறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை திருச்சி மாநாட்டில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி அறிவித்தார்கள்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னால் -

அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி!

- என்ற நமது இயக்கத்திற்கான ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு திருச்சியிலேதான் தலைவர் கலைஞர் அவர்கள் வடிவமைத்துக் கொடுத்தார்கள்.

அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன்.

இன்றைய தினம் கழகத்தின் வேர்களாக இருக்கக் கூடிய தியாகிகளுக்கு - தியாகச் செம்மல்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை எனப் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இவை அனைத்தும் இணைந்ததுதான் அந்தக் காலத்தில் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம்.

அந்த ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் 'திராவிடப் பண்ணை' முத்துகிருஷ்ணன், நாகசுந்தரம், எஸ்.ஏ.ஜி.ராபி, ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, 'நாதன் பிரஸ்' பாண்டு, நம்முடைய அன்பிலார், எஸ்.கே.வடிவேலு, புதுக்கோட்டை காடுவெட்டியார், பெரியண்ணன், கே.வி.சுப்பையா, கரூர் எஸ்.வி.சாமியப்பன், பெரம்பலூர் ஜே.எஸ்.ராஜூ, அரியலூர் சே.பெருமாள் ஆறுமுகம், க.சொ.கணேசன், சிவசுப்பிரமணியம், வெற்றிகொண்டான்... ஆகிய எண்ணற்ற தளகர்த்தர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம் இது.

அந்தத் தளகர்த்தர்களின் வரிசையில் வந்த நூற்றுக்கணக்கானோர்க்கு இன்றைய தினம் பொற்கிழி வழங்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் இல்லாவிட்டால் நாம் இல்லை. நம் இயக்கம் இல்லாவிட்டால் தமிழகம் இல்லை. இவர்களைப் போற்றுவதன் மூலமாக நம்மை நாமே பாராட்டிக் கொள்கிறோம். நம்மை நாமே போற்றிக் கொள்கிறோம்.

1967-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று, தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது, "எதையும் எதிர்பாராமல் வெறும் டீ குடித்துவிட்டு தி.மு.க. தொண்டர்கள் கட்சிக்காக உழைத்தார்கள். அதுதான் அந்தக் கட்சியின் வெற்றிக்குக் காரணம்" என்று பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் சொன்னார்கள். அப்படி உழைத்த தியாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இப்படி பொற்கிழி கொடுப்பார்கள் என்பதற்காக இவர்கள் அந்தக் காலத்தில் உழைக்கவில்லை. கழகத்துக்கு உழைப்பதும், கழகத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்கு உழைப்பதும் தங்களது வாழ்வின் கடமையாக நினைத்த இந்தப் பெருமக்களைப் போற்றுவதற்குக் கடமைப்பட்டுள்ளேன்.

அதுவும் முப்பெரும் விழா என்பதே, தந்தை பெரியாரை - பேரறிஞர் அண்ணாவை - திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போற்றுகின்ற விழா.

அதனால்தான் கொரோனா பரவல் காலத்திலும் நாம் நம் கடமையில் இருந்து நழுவிடாமல் இக்கடமைகளை ஆற்றிவருகிறோம்.

ஆனால் இந்த கொரோனா காலத்திலும் விடாமல் கொள்ளையடிக்கக் கூடியவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கி இருக்கிறது.

நான் இந்த அமைச்சரவையை கிரிமினல் கேபினெட், கரெப்ஷன் கேபினெட் என்று அழைப்பதுதான் வழக்கம். ஏனென்றால் ஒரு அமைச்சரவையே ஒட்டுமொத்தமாக ஊழல் மயமாக இருக்கிறது என்றால் அது அ.தி.மு.க. அமைச்சரவைதான்.

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் இது.

இந்த அமைச்சரவைக்குத் தலைமை தாங்கும் எடப்பாடி பழனிசாமியே சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்டவர்தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால் அவருக்கு சில விஷயங்களை நான் நினைவூட்டுகிறேன்.

தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு 1,515 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருநெல்வேலி - செங்கோட்டை- கொல்லம் வரை நான்கு வழிச்சாலைக்கான திட்டத்திற்கான ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் கோட்டங்களில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.2000 கோடிக்கு திட்டப்பணிகள் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யாருக்குக் கொடுத்தார்? அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம் மற்றும் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், பினாமியான நாகராஜன் செய்யாத்துரை ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

அதாவது 4,833 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த ஒப்பந்தங்களும் தனது உறவினர்கள், பினாமிகளுக்கே கொடுத்துவிட்டார் பழனிசாமி.

பொது ஊழியர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமி மீதும், இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்முடைய கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தனது புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஆர்.எஸ்.பாரதி அவர்கள்.

இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா? அந்த நீதிமன்றத் தீர்ப்பின் சில பகுதிகளை மட்டும் நான் வாசிக்கிறேன்.

இந்த டெண்டர்கள் சில குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நாகராஜன் வீடு மற்றும் பங்களாக்களில் வருமான வரித்துறை கடந்த ஜூலை 16-இல் சோதனை நடத்தியபோது ரூ.163 கோடி, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 100 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. முதலமைச்சர் மீதான புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நேர்மையான விசாரணையை நடத்தவில்லை. மேம்போக்காக அக்கறை இல்லாமல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த வழக்கை வேறு சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்றும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வெளிப்படையான - நேர்மையான - நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற காரணத்தினால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்துகிறது.

- இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தன் மீதான புகார்களை எல்லாம் சி.பி.ஐ. விசாரிக்கப் போகிறது என்று தெரிந்ததும் முதலமைச்சர் பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்?

பதவி விலகி இருக்க வேண்டும். வழக்கு விசாரணையை எதிர்கொண்டு இருக்க வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபித்துவிட்டு பதவியை அடைவேன் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன செய்தார் என்றால், உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார்.

தடை வாங்கியதால் இப்போது வரை பதவியில் நீடிக்கிறார். பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கும் அடிமையாக இருக்க பழனிசாமி சம்மதித்ததால் தான் அவர் வெளியில் இருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சரின் நிலைமை.

துணை முதலமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரை இப்போது எல்லோரும் தியாகி என்று தான் அழைக்கிறார்கள். ஏதோ அவருக்கு முதலமைச்சர் பதவி தேடி வந்துவிட்டதைப் போலவும், அதனை அவர் பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்துவிட்டதைப் போலவும் அவரை பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வே தோற்கப் போகிறது, தோற்கப் போகும் கட்சிக்கு பழனிசாமியே வேட்பாளராக இருக்கட்டும் என்று தந்திரமாக நழுவிக் கொண்டார் பன்னீர்செல்வம். அதுதான் உண்மை! அதனால், பன்னீர்செல்வம் தியாகியும் அல்ல; பழனிசாமி முதலமைச்சரும் அல்ல என்பதை நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டத்தான் போகிறது. அது வேறு விஷயம்!

அத்தகைய பன்னீர்செல்வம் மீதும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த புகாரை தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ளார்.

பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்புப் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதலில் கொடுத்தோம். அவர்கள் விசாரணை நடத்தவில்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம்.

"ஓ.பன்னீர்செல்வம் மாநில அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சட்ட விரோதமாக சொத்துக்களைக் குவித்து தனது குடும்பத்தினர், உறவினர்கள், பினாமிகள் பேரில் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். போலி நிறுவனங்களை உருவாக்கி உள்ளார்கள். சேகர் ரெட்டி மூலம் சட்ட விரோதமாக பலன் அடைந்த நபர்களின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு உத்திரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தோம்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஏன் உத்தரவிடக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். நாங்களே வழக்குப் பதிவு செய்து ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இன்னமும் இந்தப் புகார் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையில் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு முழு வேகத்தோடு விசாரணை நடத்தப்படும். இப்படிப்பட்டவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

இந்த அமைச்சரவையிலேயே அதிகமாக சம்பாதித்துக் குவித்தவர் அமைச்சர் வேலுமணி. அவர் மீது நாம் கொடுத்த புகார்களைச் சொல்ல வேண்டுமானால் அதுவே பல மணி நேரம் பிடிக்கும்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி - இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. விசாரணையை ஒழுங்காகச் செய்தீர்களா என்று உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது.

அதே புகார் குறித்து வேறு விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட முடியுமா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எல்லா டெண்டர்களையும் தனது பினாமிகளுக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் வேலுமணி என்ற புகார் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

குட்கா வழக்கு அனைவருக்கும் தெரியும். குட்கா முறைகேடு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்று கழகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஜெ.அன்பழகன் வழக்குத் தொடர்ந்திருந்தார். சி.பி.ஐ. தரப்பு விசாரணை கூடவே கூடாது என அரசுத் தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் கடும் வாதங்கள் வைக்கப்பட்டன.

இதைக்கேட்ட நீதிபதிகள் அமர்வு, "நீங்கள் 3 பேரும் சி.பி.ஐ. விசாரணையை எதிர்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி இன்னும் ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது" என்று கருத்துத் தெரிவித்தனர்.

"இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பது ஏன்? சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு தகுந்த ஒத்துழைப்பை ஏன் வழங்கக்கூடாது?" என்றும் கேள்வி எழுப்பினர். வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் நடந்தது.

''இந்த விவகாரத்தில் அனைத்து அரசுத்துறை மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பதுதான் முறையாக இருக்கும்" என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படி சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியவர்தான் இன்றைக்கு அமைச்சராக இருக்கிறார்.

முதலமைச்சரின் பினாமியான செய்யாத்துரை வீட்டில் கோடிக்கணக்கான பணமும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கான பணமும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

''பிற மாநில நிறுவனங்களை டெண்டரில் பங்கேற்க விடாமல் செய்யவும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டரை ஒதுக்கும் வகையிலும் புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாகவும், டெண்டர் விதிகளின்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். அதை மீறும் வகையில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும்" மனுதாரர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி துரைசாமி, விதிகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்டத்தின் கீழ் புதிய டெண்டர் கோர அரசுக்கு அனுமதியளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இலவச வேட்டி - சேலை திட்டத்தில் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது. இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை உரிய விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேட்டி, சேலை நெய்வதற்குப் பயன்படுத்தப்படும் நூலை ஏன் தரப் பரிசோதனை செய்யவில்லை என்பது குறித்து தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் கொள்முதலுக்கான டெண்டரைத் திறக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முட்டை கொள்முதல் டெண்டரில் மாநில அளவில் கோரப்பட்ட டெண்டர் முறையை மாற்றி மண்டல அளவில் கோரும் முறையை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து, கோழிப் பண்ணைகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்கள், சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரையும், அதுதொடர்பான அரசாணையையும் ரத்து செய்து உத்தரவு போட்டார்.

மின்துறை கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

- இப்படி முதலமைச்சர் தொடங்கி அனைத்துத் துறை அமைச்சர்களும் ஊழல் புகாரில் சிக்கிய அரசாங்கம்தான் இந்த அ.தி.மு.க. அரசாங்கம்.

இந்த கொள்ளைக் கூட்டம் விரைவில் விரட்டப்பட இருக்கிறது. தங்களது கொள்ளையை மறைக்கவே 'நானும் விவசாயி' என்று நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

இத்தகைய ஊழல்கள், முறைகேடுகள், கொள்ளைகளில் மூழ்கிக் கிடப்பதால்தான் மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாட்டுக்கான அனைத்து உரிமைகளையும் அடகு வைக்கிறது எடப்பாடி அரசு. ஏனென்றால் அவர்களது கழுத்து, மத்திய அரசாங்கத்தின் கையில் சிக்கி உள்ளது.

தமிழுக்காக, தமிழர்க்காக, தமிழ்நாட்டுக்காக அ.தி.மு.க. அரசு பேச ஆரம்பித்தால் ஊழல் வழக்குகளைக் கொண்டு வந்து இவர்களை முடக்கிவிடுவார்கள். அதனால்தான் அ.தி.மு.க. பயந்து போய்க் கிடக்கிறது.

இவர்களிடம் உண்மை இருந்தால் - நேர்மை இருந்தால் - மத்திய அரசிடம் உரிமைக்காகப் போராட முடியும். ஆனால் அவர்களால் முடியாது. ஏனென்றால் ஊழல் மூட்டைகளை எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சுமந்து செல்வதால் நித்தமும் பயத்தில் இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எந்தக் காலத்திலும் அஞ்சியது இல்லை.

1976-ஆம் ஆண்டை விட வேறு உதாரணம் வேண்டுமா?

ஆட்சியா? கொள்கையா? என்று வந்தபோது பதவி பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை, என்று கொள்கையைக் காத்து நின்றவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டதுமே, மறுநாளே மாபெரும் கூட்டத்தைக் கூட்டி இது ஜனநாயகத்துக்குச் சாவுமணி அடிக்கும் செயல் என்று சொல்லும் துணிச்சல் முதலமைச்சர் கலைஞருக்கு இருந்தது.

இதே போன்ற சூழ்நிலை தான் 1991-ஆம் ஆண்டும் ஏற்பட்டது.

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக இருந்தார், விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்று காரணம் காட்டித்தான் 1991-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது.

1989, 1990 காலக்கட்டத்தில் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்தார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த பாலசிங்கம் அவர்களும் யோகி அவர்களும் பல முறை முதலமைச்சர் கலைஞரைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார்கள்.

அன்றைய தினம் ஈழத்தில் ஏராளமான போராளி அமைப்புகள் இருந்தன. பிளாட்,, ஈராஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் இப்படி எத்தனையோ அமைப்புகள் இருந்தன. அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாக முதலமைச்சர் கலைஞரை வந்து சந்தித்தார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கோரிக்கைகளை மற்ற அமைப்புகளும் - மற்ற அமைப்பினரின் கோரிக்கையை விடுதலைப்புலிகளும் சொல்லி ஒரு ஒற்றுமையை உருவாக்க முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பாடுபட்டார்கள்.

இந்தத் தகவல்களை அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும், அடுத்து பிரதமராக வந்த வி.பி.சிங் அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அமைதியை ஏற்படுத்த முயற்சித்தார்கள். திடீரென்று வி.பி.சிங் அவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டதும் நிலைமை மாறியது.

சந்திரசேகர் அவர்கள் பிரதமர் ஆனார்கள். சந்திரசேகர் மூலமாக ஆட்சிக் கலைப்புக்கு நெருக்கடி கொடுத்தார் ஜெயலலிதா. எனவே அன்றைய பிரதமர் சந்திரசேகர், தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார்.

''சந்திரசேகர், தன்னுடைய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள, என்னுடைய நாற்காலியைப் பறித்துள்ளார். அவருக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அறிக்கை விடும் துணிச்சல் நம்முடைய தலைவர் கலைஞருக்கு இருந்தது.

இதை எல்லாம் நான் குறிப்பிட்டு சொல்வதற்குக் காரணம், இந்தத் துணிச்சலில், தைரியத்தில் ஒரு சதவிகிதம் கூட இல்லாத எடப்பாடி கூட்டத்திடம் இன்றைக்கு தமிழக ஆட்சி சிக்கி இருக்கிறது.

தமிழகக் கோட்டையை எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றுகிறோமோ அவ்வளவு இருக்கிற உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

புதிய கல்விக் கொள்கையால் கல்வி உரிமை பறிபோய்விட்டது.

நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.

மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.

குடியுரிமைச் சட்டத்தால் சிறுபான்மையினர் உரிமை சீக்கிரம் பறிபோகப் போகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தைத் திருட முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசுப் பணிகள் அனைத்திலும் வெளிமாநிலத்தவரைக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். இந்தப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களது விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றன.

தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு உரிமையை எந்த வகையிலாவது தடுத்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்விக் கூடங்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கான எல்லாத் தந்திரங்களையும் செய்கிறார்கள்.

இவை அனைத்தையும் தடுத்தாக வேண்டிய கடமையும் பொறுப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோள்களில் தான் சுமத்தப்பட்டு இருக்கிறது.

இந்த உரிமைகளை போராடியும் வாதாடியும் பெற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் - எங்கும் எதிலும் தமிழர் உரிமைகளை, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்.

இது தந்தை பெரியார் அவர்கள் நமக்கு இட்ட கட்டளை!

பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு இட்ட உத்தரவு!

தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குள் விதைத்த விதை!

நடக்க இருக்கிற தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்துக்காக தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களைக் காக்கும் பெரும் போர். தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர். இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

 
 
 
English summary
MK Stalin says that 2021 Tamilnadu elections is not just an election, its saving tamil people from the war.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X