• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

75வது பிறந்த நாள்... பவள விழா காணும் ப.சிதம்பரத்துக்கு ஸ்டாலின், திருமாவளவன், காதர்மொகிதீன் வாழ்த்து

|

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கு இன்று 75-வது பிறந்த நாள். பவள விழா காணும் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியல் ஆளுமைகளில் ஒருவராக திகழ்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ராஜீவ் காந்தி காலம் தொடங்கி மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். நிதித்துறை, உள்துறை என தமக்கான பொறுப்புகளை திறம்பட கையாண்டவர்.

ஆபரேஷன் துரைமுருகன் ஆரம்பம்... மு.க. அழகிரியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்?

75-வது பிறந்த நாள்

75-வது பிறந்த நாள்

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கடுமையாக, இடைவிடாமல் சாடி வருபவர் ப. சிதம்பரம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தமிழர், காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற விவாதங்களில் இந்த வேட்டி கட்டிய தமிழரின் பெயரும் இடம்பெறாமல் இருந்தது இல்லை.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இன்று பவள விழா காணும் ப. சிதம்பரத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வாழ்த்து செய்தி: இந்திய நாட்டின் நிதி அமைச்சராக இருந்து அரும்பணியாற்றியவரும் - சட்ட அறிஞரும், ஆழ்ந்த அரசியல் சிந்தனையாளருமான திரு. ப.சிதம்பரம் அவர்களின் 75-வது பிறந்த நாள் இன்று! இளமைக் காலம் முதல் காங்கிரஸ் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து சீரிய முறையில் செயல்பட்டு வரும் , தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ப.சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆக்கம் நிறைந்த அறிவுவழிகாட்டல் என்றென்றும் தொடரட்டும்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேராளுமைக்கு வாழ்த்து

பேராளுமைக்கு வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமது வாழ்த்து செய்தியில், இன்று பிறந்த நாள்காணும் திரு ப.சிதம்பரம் அவர்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்.சனாதனத்தை வீழ்த்தி தேசத்தைக் காக்க காங்கிரசும் அதன் பேராளுமை மிக்க தலைவர்களுள் ஒருவரான ப.சி.அவர்களும் சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து வல்லமையோடு வழிநடத்த நெஞ்சார வாழ்த்துகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

அழகிரி, இளங்கோவன் வாழ்த்து

அழகிரி, இளங்கோவன் வாழ்த்து

ப.சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தமிழக காங். தலைவரும் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மகன் ராமசுகந்தன் தமது சமூக வலைவளத்தில் ப. சிதம்பரத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

பேரா. காதர்மொகிதீன் வாழ்த்து

பேரா. காதர்மொகிதீன் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து செய்தி: தேசிய அரசியலில் தகுதிமிக்க ஒரு தனித்துவமாய் விளங்கும் அருமைச் சகோதரர் ப. சிதம்பரம் அவர்களுக்கு அகவை 75; என்றாலும் அவரின் சீரிய சிந்தனைகளும் திறன்மிக்க செயல்பாடுகளும் என்றும் இளமையானவைதான். அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் நீடூழி வாழ்ந்து, தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பங்காற்றிட வேண்டும் என அகமகிழ்ந்து ஆசிவழங்குகிறேன்; உளங்கனிந்து வாழ்த்துகிறேன்.

அண்ணாமலை பல்கலை. பேரன்

அண்ணாமலை பல்கலை. பேரன்

சென்னையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்று சிறந்த கல்வியாளராக விளங்கிய அவர், உலகப் புகழ்பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர்நிலை ஆய்வுப் பட்டத்தையும் பெற்று மிகச் சிறந்த கல்வியாளராக விளங்குபவர். அவரின் ஆங்கிலப் புலமையும், அழகிய தமிழ் நடையும் அம்மொழிகளின் ஆழத்தை மேலும் மெருகூட்டக்கூடியவையாகவே இருப்பதைக் காணலாம். இவரை 'வரலாற்றுப் பெருமைமிகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பேரப்பிள்ளை' என அழைத்தாலும் தகும். காரணம், இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கித் தோற்றுவித்த தகைமையாளர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் பேரப்பிள்ளை என்கிற சரித்திரப் பெருமிதம் திரு ப. சிதம்பரம் அவர்களுக்கு உண்டு.

நினைவில் இருக்கும் மொழிபெயர்ப்பு

நினைவில் இருக்கும் மொழிபெயர்ப்பு

தன் இளமைப் பருவத்திலேயே பொது வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டு, அதன் தொடர்ச்சியாக அரசியல் தளத்திலும் மிக மிக நிதானத்துடன் கால்பதித்தார். காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை கோட்பாடுகளில் மிகுந்த பற்றுள்ளவராகவும், ஆழப் பிடிப்புள்ளவராகவும், தேசிய அளவில் அந்த இயக்கத் தலைவர்களின் கவனத்தை நன்கு ஈர்ப்பவராகவும் அயராது பணியாற்றியவர். காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைந்திருந்தபோது அது நிலைத்து நிற்க இயலாமல் போனது. 'அன்னை இந்திரா அம்மையார் தலைமையில்தான் நிலையான ஆட்சியைத்தர இயலும்' என தேசத்தின் முதல் குரலாக, நாட்டின் தென்கோடி தமிழகத்திலிருந்து உரக்க ஒலித்தவர் கருணாநிதி அதைத் தொடர்ந்து, அன்னை இந்திரா காந்தி அவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து, "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" என அன்பொழுக வாழ்த்தி, அன்றைய தேர்தல் பிரச்சாரத்தை சென்னை சீரணி அரங்கில் தொடங்கிவைத்தபோது இந்திரா அம்மையாரின் ஆங்கில உரையை மிகச் சிறப்பாகவும் செழுமையாகவும் தமிழில் மொழிபெயர்த்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு தமிழக அரசியலில் என்றென்றும் நினைவு கூறத்தக்க ஒன்று.

7 முறை எம்.பி சிதம்பரம்

7 முறை எம்.பி சிதம்பரம்

1984 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகி, 1985இல் ராஜீவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகத்துறை பொறுப்பேற்று நாட்டின் ஏற்றுமதி- இறக்குமதி கொள்கையில் சீர்மிகு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். தொடர்ந்து அமையப்பெற்ற ஆட்சிகளில் நிதி, உள்துறை, சட்டம், பொது நிர்வாகம் என பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராகத் திறம்பட பணியாற்றியவர். ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போதும் மாநிலங்களவையில் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் வலம் வருபவர். நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, விளக்கம் தருகிறபோதெல்லாம் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றுகிற கலாச்சாரப் பெருமையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியவர்.

லிபரான் கமிஷன்- சிதம்பரம் பேச்சு

லிபரான் கமிஷன்- சிதம்பரம் பேச்சு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணி குறித்து விசாரித்த லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு உள்துறைப் பொறுப்பை ஏற்றிருந்த ப. சிதம்பரம், இரு அவைகளிலும் ஆற்றிய உரை வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. பொதுவாக அவரின் எல்லா உரைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிறப்பான கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவே அமையும் என்பதை இன்றளவும் கண்டு வருகிறோம். அது மட்டுமின்றி, நாட்டின் நிதிநிலை குறித்து எப்போதும், யார் பேசினாலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைத் தொடர்ந்து, திரு ப. சிதம்பரம் அவர்களைத் தொடாமல் அந்தப் பேச்சு முடிவதில்லை. அந்த அளவுக்கு மத்திய நிதியமைச்சர் என்றால் தனக்கென ஒரு தனியான இடத்தை வரலாற்றில் உருவாக்கிக் கொண்ட பொருளாதார வல்லுனராகத் திகழ்பவர்.

மதசார்பின்மையில் உறுதி

மதசார்பின்மையில் உறுதி

மத்தியில் உள்துறை அமைச்சராக இருந்தபோது, தீவிரவாதத்திற்கு எதிராக அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் மிக மிக அறிவுப்பூர்வமானவையாகவும், அர்த்தமுடையனவாகவும் இருந்ததை மறந்திடவியலாது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய அவரின் பலதரப்பட்ட உரைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. 'நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூக மற்றும் சிறுபான்மை சமுதாய மக்கள் அனைவரும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் பெற வேண்டும்' என்ற நன்னோக்கத்தை தாம் பொறுப்பு வகித்த எல்லா துறைகளிலும் செயல்வடிவமாக்கிக் காட்டியவர். மதச்சார்பின்மைக் கொள்கையிலும், சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதிலும், அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிப்பதிலும், இந்திய இறையாண்மையைப் போற்றுவதிலும் என்றைக்கும் அவர் சமரசம் செய்து கொண்டதே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு தேசத்தின் கலாச்சாரப் பெருமையை உயர்த்திப் பிடிப்பவர். அவர் அரசியல் தளத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் பயணித்து, மென்மேலும் உயர்ந்து, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து நற்பணி ஆற்றிட பல்லாண்டுகள் நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பேரா. காதர்மொகிதீன் தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK President MK Stalin, VCK President Thirumavalavan wishes Former Union Minsiter P Chidambaram on his 75th Birth day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X