சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓராண்டு தலைவர் பதவி... தொண்டர்களுக்கு ஆகப் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறாரா ஸ்டாலின்?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஓடிவிட்டது. கருணாநிதிக்கு பின்பு திமுகவின் வலிமையான தலைவர் என்ற நம்பிக்கையை தொண்டர்களிடத்தில் தேர்தல் அரசியல் வெற்றிகள் மூலம் ஓராண்டில் நிலைப்படுத்தி காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த ஓராண்டு காலத்தில் ஸ்டாலின் தேர்தல் அரசியல் களத்தில் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சாதனை படைத்திருக்கிறார் என்பது மிகை அல்ல.

ஸ்டாலின் பதவியேற்ற போது, தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள், மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் முனைப்பாக இருந்தன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்டாலினையும் மையப்படுத்தியதாகவே இருந்தது.

வலிமையான கூட்டணி

வலிமையான கூட்டணி

ஸ்டாலின் தெரிவிக்கும் கருத்துகளுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் இருந்தது. லோக்சபா தேர்தலின் போது தேசிய அளவில் இத்தகைய பரந்துபட்ட ஒரு கூட்டணி அமையவில்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற சக்திகளின் கூட்டணியை உருவாக்கி இந்தியாவுக்கே வழிகாட்டியாக போற்றப்பட்டார் ஸ்டாலின்.

அமோக தேர்தல்கள் வெற்றி

அமோக தேர்தல்கள் வெற்றி

லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் பாஜகவுக்கு சாதகமான அலை வீசியது. ஆனால் அந்த பேரலையை ஸ்டாலின் உருவாக்கிய மெகா கூட்டணி தடுத்து நிறுத்தியது. திமுக கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றி அந்த கட்சியின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய சரித்திரத்திலும் இடம்பெற்றது. அதன்பின்னர் சட்டசபை இடைத்தேர்தல்கள், வேலூர் தொகுதி தேர்தல்களிலும் திமுக சூடிய வெற்றி வாகையானது ஸ்டாலின் தலைமையை அக்கட்சி தொண்டர்களிடத்தில் வலிமையாக நங்கூரமிட்டு நிற்க வைத்தது.

உதயநிதி

உதயநிதி

திமுகவின் வலிமையான இளைஞர் அணிக்கு மகன் உதயநிதியையே செயலாளராக்கி புதிய ரத்தம் பாய்ச்சியும் இருக்கிறார் ஸ்டாலின். இவை அத்தனையும் திமுக என்கிற ஓட்டு அரசியல் கட்சிக்கு மிகப் பெரும் பலம்... அந்த வகையில் ஸ்டாலின் ஓராண்டில் மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

அண்ணா, கருணாநிதி திமுக

அண்ணா, கருணாநிதி திமுக

அதேநேரத்தில் வாக்கு அரசியல் கட்சி மட்டும்தானா திமுக? அதன் பன்முகத் தன்மைகள், கடந்த கால கொள்கை பண்புகள் எல்லாம் இன்னமும் இருக்கின்றனவா? என்கிற கேள்விக்கும் விடைதேட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. அண்ணா காலத்து திமுக என்பது கல்வியில் சிறந்த அறிவாளர்களையும் கொள்கையில் உறுதி குன்றாத போராளிகளையும் கட்சி களப்பணிகளில் எஃகு கோட்டையாக நின்ற தளகர்த்தகர்களையும் கொண்டதாக இருந்தது. அண்ணாவுக்குப் பின்னர் கருணாநிதியும் இதே அணுகுமுறையைத்தான் கடைபிடித்தார்.

முளைத்த விசுவாச அரசியல்

முளைத்த விசுவாச அரசியல்

எம்ஜிஆர் புதிய கட்சி தொடங்கிய காலத்தில் இதில் சலசலப்பு வந்தது. ஆனால் வைகோவின் பிரிவுக்குப் பின்னர் ஸ்டாலினின் 'தலைமைத்துவ' அத்தியாயம் தொடங்கிய காலத்தில் திமுகவில் ‘விசுவாசம்' என்கிற புதிய அணி உருவானது. அப்போது திமுகவுக்கு அது தேவையாகவும் முதன்மையானதாகவும் இருந்தது. கட்சியின் கொடிக்கும் சின்னத்துக்குமே ஆபத்து என்கிற காலத்தில் விசுவாசமே தேவையானதாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் விசுவாசம்தான் பிரதான இடம் என்கிற நிலைக்கு முன்னேறிவிட்டது.

பாக்கியராஜின் கொபசெதான் ராஜகுரு

பாக்கியராஜின் கொபசெதான் ராஜகுரு

இதன்விளைவாகத்தான் கொள்கையாளர்கள், களப்பணியாளர்கள் என்பவர்கள் இப்போதைய ஸ்டாலின் திமுகவில் இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்கின்றனர். இந்த விசுவாசம் எந்த அளவுக்கு போய்விட்டது என நினைத்து பாருங்கள்.. நடிகர் பாக்கியராஜ் ஒரு கட்சி தொடங்கினார். அந்த கட்சிக்கும் கொள்கை இருப்பதாக நினைத்து அதன் கொபசெவாக இருந்த ஒருவர்தான் இப்போதைக்கு ஸ்டாலின் திமுகவின் ராஜகுரு. அவர் மட்டுமல்ல.. எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுகவில் இருந்து காலவெள்ளத்தில் கரைஒதுங்கியவர்கள்தான் இப்போதைய திமுகவின் 2-ம் கட்ட விசுவாவசமிக்க தலைவர்கள். அதாவது அண்ணாவின் திமுக காணாமல் போய் எம்ஜிஆரின் அண்ணா திமுக தலைவர்கள் நிரம்பிய கட்சியாக மாறிவிட்டது.

பிரசார மாய்மாலம்

பிரசார மாய்மாலம்

அத்துடன் ஓராண்டு காலத்தில் உதயநிதி எனும் புதிய ‘இளைஞர் சக்தி' திமுகவில் பிரதான இடம்பெற்றிருக்கிறது. இதனால் ஏற்பட்ட விளைவுகள், கட்சிக்கும் மக்களுக்கும் பிரதான பிணைப்பாக இருந்த சொற்பொழிவாளர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளனர். ஏனெனில் இவர்கள்தான் தேர்தல் களத்திலும் இன்ன பிற களங்களிலும் பிரசார பீரங்கிகளாக திகழ்ந்தவர்கள். ஆனால் இப்போது மேடைகள் போட்டு பிரசாரம் செய்வதை கைவிடும் நிலைக்கு போய்விட்டது திமுக. அப்படி நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஸ்டாலினும் உதயநிதியும் பங்கேற்றால் போதும். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கூட தேவையில்லை என்கிற நிலைக்கு புதிய பாதையில் பயணிக்கிறது. இதை வேலூர் தேர்தல் பாதை எடுத்துக் காட்டியும் இருக்கிறது.

கார்ப்பரேட்டுகள் முடிவுகள்

கார்ப்பரேட்டுகள் முடிவுகள்

அண்ணா சொன்னதைப் போல மக்களிடம் செல் என்பதாக இன்றைய திமுக வியூகம் அவ்வப்போது வகுக்கப்படுகிறது. இந்த வியூகத்தை கட்சியின் தளபதிகள், ஆற்றல் மிக்கவர்கள் வகுத்து தருவது இல்லை. கார்ப்பரேட் சக்திகள்தான் அண்ணாவின் மக்களிடம் செல் முழக்கத்தைக் கூட முன்வைக்கிற நிலைமைக்கு திமுக சென்றிருக்கிறது.

தொண்டர்களை சந்திக்கும் ஸ்டாலின்

தொண்டர்களை சந்திக்கும் ஸ்டாலின்

கருணாநிதி காலத்தில் கட்சி தொண்டர்களை, நிர்வாகிகளை சந்திக்கும் வழக்கம் இருந்தது. இன்றும் ஸ்டாலினும் தொண்டர்களை நாள்தோறும் சந்தித்து படம் எடுக்கிறார். சளைக்காமல் 500 பேர் முதல் 1,000 பேர் அவருடன் படம் எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

காணாமல் போன குமுறல் வெளி

காணாமல் போன குமுறல் வெளி

அன்று கருணாநிதியை நிர்வாகிகள் சந்தித்தால், கல்வியாளர்கள் சந்தித்தால், உள்ளூர் கட்சி விவகாரங்கள், உலக விவகாரங்கள், துறைசார் விவரங்கள் குறித்து தகவல்களைப் பெறுவதில் முனைப்பு காட்டுவார். இன்று தம்மை சந்திக்க வரும் யாராக இருந்தாலும் எந்த துறையில் இருந்தாலும் ‘நன்றி.. நன்றி' என்று சொல்லி அனுப்பி வைப்பதில்தான் குறியாக இருக்கிறார் ஸ்டாலின். அதேபோல் சீக்கிரம் சீக்கிரம் என ‘ஜரிகண்டி ஜரிகண்டி 'பாணியையே அறிவாலயமும் கடைபிடிக்கிறது. தலைவரை சந்தித்தேன்.. போட்டோ எடுத்தேன் என்பதுடன் கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவு நிற்கிறது... கட்சி விவகாரங்கள் பற்றி பேசுவதற்கான குமுறல்களை கொட்டுவதற்கான 'வெளி' திமுகவில் மாயமாகிப் போய்விட்டது. தொண்டர்களிடத்தில் ஆகப் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கும் ஸ்டாலின் தலைமை திமுகவின் அடிநாதமான கொள்கைப் பயணத்தில் முரசு கொட்டாது போனால் எல்லாம் தலைகீழாகவே நடந்தேறும்!

English summary
DMK President MK MK Stalin has completed an eventful year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X