கச்சத் தீவு மீட்பு, தமிழுக்கு இந்திக்கு இணையான அங்கீகாரம் தேவை! மோடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
சென்னை : தமிழக மீனவ மக்களின் கோரிக்கையான கச்சத்தீவு மீட்பு, மாணவர்கள், பொதுமக்களின் கோரிக்கையான நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு அனுமதி ஆகிய கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிலுவையை விடுவிக்க வேண்டும், தமிழை வழக்காடு மொழியாக்க அனுமதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு நேரடியாக வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ் நிலையானது! சென்னை டூ கனடா, மதுரை டூ மலேசியா, நாமக்கல் டூ நியூயார்க் - எதுகையில் புகழ்ந்த மோடி
ஒரே மேடையில் முதல்முறையாக பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்ற நிலையில், மேடையில் வைத்தே முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார் ஸ்டாலின்.

தமிழ் மொழி
பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் உலகச் செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்தோடும், உயிர்ப்போடும் திகழும் தமிழ் மொழியை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

கச்சத்தீவு
மீனவ சமுதாய மக்களுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க உகந்த நேரம் இது என நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். கருணாநிதி சொன்னதுபோல உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம். கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் நலன் போன்றவற்றில் ஒன்றிய அரசு தமிழக மக்களுக்கு உரிமைகளை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நீட் விலக்கு
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார் ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடி மேடையில் இருந்தபோது நேரடியாக நீட் கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தபோது ஆளுநரும் மேடையில் இருந்தார்.

ஜி.எஸ்.டி இழப்பீடு
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ.14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களின் நிதி நிலைமை சீரடையாத நிலையில் ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை ஜூன் மாதத்திற்குப் பின்னரும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார் ஸ்டாலின்.