• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எப்படியாவது இந்தியைத் திணிக்க.. இப்படித் துடிக்கிறதே மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்

|
  ஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு!-வீடியோ

  சென்னை: அண்ணா வழியில் அன்னைத் தமிழை காப்போம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  இதுகுறித்து அவர் எழுதியுள்ள மடலில் கூறுகையில் காஞ்சி தந்த புத்தன், தென்னாட்டுக் காந்தி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன், தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 111ம் பிறந்தநாள், செப்டம்பர் 15.

  நம் தலைவர் கலைஞரின் தலைவர் - தனிப் பெரும் ஆசான் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் சிந்தனைகளும் செயல்களும் எந்த நாளும் தமிழ் மண்ணுக்கு ஏற்றமிகு ஒளிதரும் என்பதால்தான், அண்ணா துயிலுமிடத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தார் தலைவர் கலைஞர். அவரைவிட அழகாகப் பேரறிஞர் பெருந்தகையை இலக்கியமாக்கியவர் ஏற்றி வணங்கியோர் எவரேனும் இவ்வையகத்தில் உண்டோ!

  மாநிலத்து அமைச்சர்

  மாநிலத்து அமைச்சர்

  "தலைவரென்பார்.. தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார், அருமொழிக்காவல் என்பார், அரசியல்வாதி என்பார்; அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து அன்பாலே ‘அண்ணா' என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை பெயரும் தந்தார்" என்று பேரறிஞரைப் போற்றி முத்தமிழறிஞர் எழுதிய வரிகளில் எத்தனை எழில் கோலமிட்டுக் கொஞ்சுகிறது சீரிளமைத் தமிழ்!

  அண்ணாவின் குரல்

  அண்ணாவின் குரல்

  அந்தத் தமிழின் மேன்மைக்கும், தமிழரின் வாழ்வுக்கும் தன் இறுதிமூச்சுவரை அயராமல் குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. 1962ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது, இந்தியத் துணைக்கண்டம் அதுவரை கேட்டிராத உரிமைக்குரலைக் கேட்டது. அந்தக் குரல், திராவிட இனத்தின் குரல், தமிழ் எனும் மூத்த மொழியின் குரல், தன்னைப் போன்ற மாநில மொழிகள் அனைத்திற்குமான குரல். அதுதான் அண்ணாவின் குரல்.

  உரைவீச்சு

  உரைவீச்சு

  "I belong to the Dravidian Stock" என்ற அண்ணாவின் நாடாளுமன்ற உரை, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. "நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன். நான் என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதிலே பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ மராட்டியருக்கோ குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னதுபோல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்" என்ற பேரறிஞர் உரைவீச்சு புதிய சிந்தனையைக் கிளறியது.

  இந்தியா

  இந்தியா

  அரை நூற்றாண்டுக்கும் மேலாக அந்த சிந்தனைதான் இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளிலும் வளர்ந்து வலுப்பெற்று வருகிறது. அதுதான் மாநில உரிமைகளைப் பாதுகாத்து, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் கட்டிக் காத்து வருகிறது.

  பொருத்தம்

  பொருத்தம்

  நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா கேட்டார், "தென்னகத்திலிருந்து, குறிப்பாகத் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதையும் கேள்வி கேட்பதையும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம். அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா?" என்ற அண்ணாவின் கூர்மையான கேள்வி, இன்று வரை பொருத்தமாக இருக்கிறதே!

  இந்தி மொழி

  இந்தி மொழி

  "எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி?" என அன்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கேட்டார். இன்றோ, எப்பக்கத்திலிருந்தாவது எப்படியாவது இந்தியைத் திணித்துவிட முடியாதா என்று மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு பலவித முயற்சிகளைச் செய்து நுழைக்கப் பார்க்கிறது. ரயில்வே துறையில் சுற்றறிக்கைகள் உத்தரவுகள் ஆகியவை மாநில மொழியில் வெளியிடப்பட மாட்டா என்றும், இந்தி - ஆங்கிலத்தில்தான் வெளியிடப்படும் என்றும், ஓர் அறிவிப்பு வந்தவுடன், தி.மு.கழகம் உடனடியாக அதனை எதிர்த்துக் களமிறங்கியது.

  அறிவிப்பு

  அறிவிப்பு

  மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் திரு.ஆர்.எஸ்.பாரதி மற்றும் கழக நிர்வாகிகள் உடனடியாக தெற்கு ரயில்வே அலுவலகம் முன் கழகத்தின் இருவண்ணக் கொடிகள் தாங்கிப் போராட்டம் நடத்தி, பொது மேலாளரை சந்தித்து, இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திடச் செய்தேன். இதையடுத்து, என்னுடன் அலைபேசியில் உரையாடிய தெற்கு ரயில்வே பொதுமேலாளர், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார்; அப்படியே ரத்து செய்யப்பட்டது.

  வெற்றி

  வெற்றி

  ஏராளமான பயணிகளின் உயிர் சுமக்கும் ரயில்வே துறையில் கட்டளைகள் - உத்தரவுகள் மாநில மொழியில் பரிமாறப்பட மாட்டாது என்றால், அது இந்தி மேலாதிக்கம் மட்டுமல்ல, அந்த மேலாதிக்கத்தினால் தமிழர்கள் உள்ளிட்ட மாநில மொழி பேசுவோரின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் கொடுஞ்செயலாகும். எனவேதான், கழகம் உடனடியாகப் போராடி அந்த அறிக்கையைத் திரும்பப் பெற வைத்தது. இது பேரறிஞர் அண்ணா வழியில் - அவர்தம் அன்புத் தம்பி தலைவர் கலைஞர் வழியில் - கழகம் மேற்கொண்ட முயற்சியால் தமிழுக்குக் கிடைத்த வெற்றி!

  பணி அமைப்பு

  பணி அமைப்பு

  அதுபோலவே, அஞ்சல் துறையில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு இடமில்லை என்றும் இந்தி - ஆங்கிலம் மட்டுமே இருக்கும் என்றும் அத்துறை அறிவித்தபோது, அதனை எதிர்த்துக் களமிறங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் காரணமாக, அந்தத் தேர்வு கைவிடப்பட்டு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுடன் தேர்வு நடத்தப்பட்டு, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெறவும், எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட சிலரே பறித்துக் கொள்ளும் குறைபாடு நீங்கவும் கழகத்தின் பணி அமைந்தது.

  ஓயவில்லை

  ஓயவில்லை

  துறைதோறும் தமிழ் செழிக்க வேண்டும் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் விருப்பம். அதற்காகத்தான் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையிலே சிறப்பாக நடத்தினார். அவரைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்திடச் செய்தார். அதுமட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெறவேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டுக் காத்திருக்கிறது. எனினும், நம்முடைய முயற்சிகள் ஓய்ந்திடவில்லை; இனியும் ஓயாது.

  தமிழின் உரிமைகள்

  தமிழின் உரிமைகள்

  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டபோது, அந்தப் பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை எனத் தெரிந்தவுடன், உடனடியாகத் தமிழிலும் தீர்ப்புகளை வெளியிட ஆவன செய்ய வேண்டும் என உங்களில் ஒருவனான நான், தமிழ்நாட்டு மக்களின் சார்பில் குரல் கொடுத்தேன். தி.மு.கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து கழகத்தின் சார்பிலான மனுவையும் அளித்தார். அதன்காரணமாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழில் வெளியிடப்பட்டது. தி.மு.கழகத்தின் முயற்சியினால், தமிழுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி இது. நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தி.மு.கழகத்தின் உறுப்பினர்கள் தமிழின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்.

  இயக்கம் திமுக

  இயக்கம் திமுக

  ஒரு சில நாட்களுக்கு முன்பு, ரயில்வேயில் பொதுபோட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை என்றும், இந்தியிலும் - ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தினால் போதும் என்றும், அறிவிப்பு வெளியானவுடனேயே போர்க்கோலம் பூண்ட இயக்கம் தி.மு.கழகம்.

  போராட்ட களம்

  போராட்ட களம்

  ஆம்.. இது பேரறிஞர் அண்ணா வகுத்த நெறியில், தலைவர் கலைஞரின் வழியில் செயல்படுகிற இயக்கம். கழகத் தலைவர் என்ற முறையில், இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்திற்குத் தூபம் போட வேண்டாம் என மத்திய அரசை எச்சரித்து அறிக்கை வெளியிட்டதுடன், போராட்டக் களமும் கண்டதினால், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

  திமுகவுக்கு கிடைத்த வெற்றி

  திமுகவுக்கு கிடைத்த வெற்றி

  தி.மு.க இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது என்பதை நாம் சொல்வதைவிட, நடுநிலைப் பார்வை கொண்ட ஏடுகள் சொல்லும்போது அதன் உண்மைத்தன்மை நன்கு விளங்கும். 12-9-2019 தேதியிட்ட தினத்தந்தி நாளேட்டின் தலையங்கம், ‘இது தி.மு.க.,வால் கிடைத்த வெற்றி' என்றே தலைப்பிடப்பட்டு, பின்வரும் செய்தி இடம்பெற்றுள்ளது.

  தமிழ் தெரியாத அதிகாரிகள்

  தமிழ் தெரியாத அதிகாரிகள்

  "ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கான துறை சார்ந்த பொதுப்போட்டித் தேர்வை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தினால் போதும் என்ற உத்தரவு தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏற்கனவே, தமிழ் தெரியாமல் பணிக்கு வந்தவர்களே மீண்டும் தமிழ் தெரியாமலேயே பதவி உயர்வும் பெறும் நிலை என்பது தலை மேல் இடி விழுந்தது போல் இருந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். வெறும் அறிக்கையோடு நிறுத்திவிடாமல் தெற்கு ரெயில்வே அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் அன்புச் சகோதரி கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி பொது மேலாளரிடம் ஒரு கோரிக்கை மனுவையும் கொடுக்கச் செய்தார். இந்த எதிர்ப்பு அலைகளைக் கண்ட ரெயில்வே நிர்வாகம் அடுத்த 2 நாட்களில் துறை சார்ந்த பொதுப்போட்டித் தேர்வை தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் எழுதலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

  விருப்பு வெறுப்பின்றி

  விருப்பு வெறுப்பின்றி

  வினாத்தாள்களும் மாநில மொழிகளில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது நிச்சயமாக தி.மு.க.வுக்கும் குறிப்பாக அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை" என்று தினத்தந்தி தனது குரலாக, தலையங்கத்தில் விருப்பு வெறுப்பின்றிப் பதிவு செய்துள்ளது.

  வெற்றி

  வெற்றி

  தி.மு.க.,வின் தலைவர் என்ற முறையில் நான் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றாலும், இது நானே பெற்ற வெற்றி என்று ஒருபோதும் நினைத்திடமாட்டேன். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் - முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்து வளர்த்த இயக்கம், அவர்கள் காட்டிய வழிநின்று அன்னைத் தமிழ் காக்க நாம் ஒன்றிணைந்து எடுத்த உறுதியான முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி.

  மொழி

  மொழி

  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா, "நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதால் வங்காளிக்கோ மராட்டியருக்கோ குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல" என்றாரே அதனை நிரூபிப்பதுபோல, தமிழ் மொழி காக்க நாம் நடத்திய போராட்டம் வங்காளம், மராட்டியம், குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் வெற்றியைத் தந்திருக்கிறது.

  வாய்மை

  வாய்மை

  இந்தியா பயணிக்க வேண்டிய பாதையை அன்றே டெல்லிக்கு சுட்டிக்காட்டியவர் பேரறிஞர் அண்ணா. அந்தப் பாதையிலிருந்து ஆட்சியாளர்கள் விலகினால் அது தமிழுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கேடு விளைவித்துவிடும். அதனால்தான், தமிழ் மொழியைக் காக்க அண்ணா வகுத்துத் தந்த வழியில் வாய்மையுடன் நடைபோடுகிறோம்; போராடுகிறோம்.

  சூளுரைப்போம்

  சூளுரைப்போம்

  வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற தலைவர் கலைஞரின் வைரவரிகளை நெஞ்சில் ஏந்தி, அன்னைத் தமிழ் காக்கும் பணிகளை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து ஆற்றிடுவோம். அதில் பெறுகின்ற வெற்றிகளை பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் காணிக்கையாக்கிடுவோம் என அவர் பிறந்தநாளில் சூளுரையேற்போம்! அன்னைத் தமிழ் வாழ்க! அண்ணா வாழ்க! என்று அந்த மடலில் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  DMK President MK Stalin writes to DMK cadres to stop Hindi imposition after Amitshah's tweet about One Nation, One Language.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more