"இது இந்தி அரசல்ல.. இந்திய அரசு".. வெளியேற சொன்ன ஆயுஷ் அதிகாரிக்கு கொட்டு வைத்து கமல் ட்வீட்!
சென்னை: "இது இந்தி அரசல்ல, இந்திய அரசு" என்று ஆயுஷ் அமைச்சக செயலருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் அனைத்து மாநில அரசு துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது.
இந்த யோகா மருத்துவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நடந்தது.. இதில் இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்... தமிழகத்தை சேர்ந்த 37 பேர் இதில் பங்கேற்றனர்.
அதிகார தோரணையில் எஸ்ஐ அடிச்சுட்டாரு.. சாகப்போறேன்.. சிவனடியார் மரண வாக்குமூலம்

ஆங்கிலம்
அப்பொழுது மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா ஹிந்தியில் பேச்சை ஆரம்பித்தார்.. இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர்... ஆனால் ராஜேஷ் கொடேஜா, "நான் முழுவதும் இந்தியில்தான் பேச போகிறேன்... எனக்கு இங்கிலீஷ் சரளமாக பேச வராது... அதனால் இதை எதிர்பார்ப்பவர்கள் இங்கிருந்து சென்றுவிடலாம்" என்றார்.

சர்ச்சை
இதை கேட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து சென்ற யோகா பயிற்றுநர்கள் ஷாக் ஆனார்கள்.. ஏற்கனவே இந்த டிரெயினிங் முழுக்க ஹிந்தியிலேயே நடந்ததால் தங்களுக்கு எதுவுமே புரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர்கள், அமைச்சக செயலாளரே இப்படி சொன்னதும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இது சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.. ஆந்திரா, தெலங்கானா, கேரள மாநில மருத்துவர்களும் இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.

கமல் ட்வீட்
பாமக நிறுவனர் ராமதாஸும், திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. "ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை... அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல.. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு" என்று பதிவிட்டுள்ளார்.

வரவேற்பு
"ஹிந்தி படிச்சால்தான் இந்தியனா இருக்கனும்னா அந்த ஹிந்தியே எங்களுக்கு தேவையில்லை" என்று ஏற்கனவே ஆவேச கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், கமலின் இந்த ட்வீட் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது.

அரசியல்
அந்தந்த மாநில அரசு பணிகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே பணிகள் வழங்குவதும், அந்தந்த மாநிலத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் கூட அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே பணிகள் வழங்குவதும் தான் தேச ஒற்றுமையை வலுக்கும் என்ற பொதுவான கருத்துக்கள் எழுந்து வந்தாலும், இந்த ஹிந்தியை வைத்து இன்னும் எவ்வளவுதான் அரசியல் பண்ணப்படும்?!