தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தூக்கிவாரிப்போடும் பின்னணி- அம்பலப்படுத்தும் முத்துநகர் படுகொலை படம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக உருவாக்கப்பட்ட புலனாய்வு திரைப்படமான முத்துநகர் படுகொலை இன்று வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடியில் தொழிலதிபர் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை இயங்கி வந்தது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான் திருடல விட்ருங்க! ஸ்டேசனில் பெண்ணை அடித்து துன்புறுத்திய பெண் போலீஸ்! தூத்துக்குடி அதிர்ச்சி..!

துப்பாக்கிச்சூடு
இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். தேசியளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100 வது நாளான மே 22 2018 அன்று ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2 பெண்கள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது.

அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உறவினர்கள், போராட்டக்குழுவினர், தூத்துக்குடி மக்கள், நேரடி சாட்சிகள், மறைமுக சாட்சிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் இறுதி அறிக்கை கடந்த புதன்கிழமை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

முத்துநகர் படுகொலை ஆவணப்படம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக "முத்துநகர் படுகொலை" என்ற பெயரில் பல்வேறு உண்மைகளையும் ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது.

இன்று வெளியீடு
ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாக வைத்து மெரினா புரட்சி என்ற பெயரில் ஆவணப்படம் இயக்கியவர் எம்.எஸ்.ராஜ். இவரது "முத்துநகர் படுகொலை" புலனாய்வு படம் Tamils OTT மற்றும் விமியோ ஆகிய ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து 22 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் இந்த திரைப்படம் அதுகுறித்து பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.