சட்டசபை தேர்தலில் என் பங்கு இருக்கும்... புதிய கட்சி பற்றி போகப் போகத் தெரியும் - மு.க. அழகிரி
சென்னை: மத்திய முன்னாள் அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரி எந்த முடிவையும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்றும் கூறியுள்ளார் மு.க அழகிரி.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக இடையே கமல், ரஜினியும் ஆளுக்கு ஒரு பக்கம் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அழகிரியும் அவ்வப்போது பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மதுரையை மையமாகக் கொண்டு அரசியல் செய்து வந்த மு.க அழகிரி கடந்த சில ஆண்டுகாலமாகவே அமைதியாக இருந்து வந்தார். இப்போது மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளார்.
மு.க அழகிரி பாஜகவில் இணையப்போவதாக தகவல் சமீபத்தில் வெளியானது. பாஜக மாநில தலைவர் எல். முருகனும் எங்கள் கட்சியில் அழகிரி இணைந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார். அழகிரி அதை அப்போது மறுக்கவில்லை. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தான் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல் வதந்தியே என்று கூறினார்.
வரும் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும். எந்த செயலாக இருந்தாலும் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று கூறிய அழகிரி புதிய கட்சி தொடங்குவது பற்றி போகப் போகத் தெரியும் என்று தெரியும்.

மு.க.அழகிரி விரைவில் மாற்றுக் கட்சியில் இணைய உள்ளார் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருந்த நிலையில் இன்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் மு.க. அழகிரி. சட்டசபை தேர்தலில் அழகிரியின் பங்கு என்னவாக இருக்கும் திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பாரா? அல்லது புதிய கட்சியை தொடங்கி திமுகவிற்கு எதிராக செயல்படுவாரா? அழகிரியால் திமுகவிற்கு சாதகமாக அமையுமா? பாதகமா அமையுமா என்று போக போக தெரியும்.