• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

விவசாயிகள் போராட்டம்... நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணை நிற்கும்... சீமான் அறிவிப்பு..!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணை நிற்கும் என சீமான் அறிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற வேண்டி துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் வரலாற்றுப்பெருங்கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நான் முதல்வராக வரவில்லை.. விவசாயிகளை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்! மாஸ் பேச்சு!நான் முதல்வராக வரவில்லை.. விவசாயிகளை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்! மாஸ் பேச்சு!

விவசாய சங்கம்

விவசாய சங்கம்

உழவர் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்து பத்து நாட்களுக்கும் மேலாக டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போரினை முன்னெடுத்து வருவது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விவசாயச்சங்கங்கள் நாளை முன்னெடுக்கவிருக்கும் நாடு தழுவிய பொது அடைப்புப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

கொடுங்கோன்மை

கொடுங்கோன்மை

அவர்களது பக்கமிருக்கும் நியாயத்தையும், தார்மீகத்தையும் உணர்ந்து அப்போராட்டத்தின் நோக்கம் வெற்றிபெற துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் வரலாற்றுப்பெருங்கடமையாகும். உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அமைதி வழியில் மண்ணின் உரிமைக்காக அல்லும் பகலும் அயராது போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது போற்றுதலுக்குரியது. அதேநேரத்தில், கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது ஈவு இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது.

அலட்சியம்

அலட்சியம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இப்புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளைப் பெருநிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் கொடிய சதித்திட்டமின்றி வேறில்லை. இதை எதிர்த்துத்தான், வேளாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு உழவர்கள் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். ஆனால், வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல், அலட்சியம் செய்வதுடன் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும்.

போராட்டக் களம்

போராட்டக் களம்

இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், சனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறையினரும் டெல்லி போராட்டக் களத்தில் நேரடியாகப் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

முழு அடைப்பு

முழு அடைப்பு

ஆகவே, இத்தருணத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் நாடு தழுவிய அளவில் உழவர் பெருமக்கள் நாளை முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும் எனவும், அவர்களின் நியாயமான போராட்டம் வெல்ல இறுதிவரை துணை நிற்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Naam thamizhar party coordinator Seeman support Delhi chalo farmers protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X