சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, முத்தலாக், என்.ஐ.ஏ. கைவிட நாம் தமிழர் கட்சி பொதுக்குழு வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    120-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களை கைப்பற்றிய நாம் தமிழர் கட்சி: சீமான் பெருமிதம் - வீடியோ

    சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

    சென்னை வேலப்பன் சாவடி கே.வி.என். திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் அடிநாதமாக விளங்கும் மதச்சார்பின்மை எனும் மகத்தான கோட்பாட்டினை அடியோடு தகர்த்து, நாடு முழுமைக்கும் வாழும் இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்டிருக்கிற குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை (CAA) நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. இச்சட்டத்திருத்தம் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பன்முகத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கும் கொடுஞ்சட்டமெனக் கண்டிக்கிறது. இதன் நீட்சியாக இருக்கிற, தேசியக் குடிமக்கள் பதிவேட்டை (NRC) ஒருபோதும் கொண்டு வரக்கூடாது எனவும், குடியுரிமைச் சட்டத்திருத்தத்தையும், இசுலாமியப் பெண்களின் நலனென்று பெயரில் கொண்டு வரப்பட்டு திணிக்கப்பட்டிருக்கிற முத்தலாக் மசோதாவையும், மாநில அதிகாரத்தின் வரம்புக்குள் தலையிடும் ஆட்தூக்கிச் சட்டமான தேசியப் புலனாய்வு முகாமையையும் (NIA) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். எனவும் இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

    பாராளுமன்றத்தில் தேசியப் புலனாய்வு முகாமைக்கு ஆதரவாக வாக்களித்த திமுகவும், குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவும் மாநிலத் தன்னாட்சியுரிமையை மத்திய அரசின் காலடியில் அடகு வைத்துவிட்டத் துரோகக்கட்சிகள் என நாம் தமிழர் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இந்தியா என்பது ஓர் ஒன்றியம். இங்கு மாநிலங்கள் எனப்படுவைத் தேசிய இனங்களின் தாயகம்; தேசம். அத்தேசங்களுக்கு மத்திய அரசிற்கு இணையான அதிகாரப் பகிர்வளித்து சமனியத் தனியரசை நிறுவுவதன் மூலமே கூட்டாட்சித்தத்துவம் பேணிக்காக்கப்பட்டு நாட்டின் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்படும்.

    நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுநீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

    இறையாண்மை கேள்விக்குள்ளாகும்

    இறையாண்மை கேள்விக்குள்ளாகும்

    அதனை விடுத்து, ‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!', ‘ஒரே நாடு! ஒரே சட்டம்!', ‘ஒரே நாடு! ஒரே தேர்வு', ‘ஒரே நாடு! ஒரே தீர்ப்பாயம்!, ‘ஒரே நாடு! ஒரே பொதுவிநியோகம்' என நீளும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஒருமுகமாக்கலும், ஒற்றைமயப்படுத்தி இந்தியாவை இந்து நாடாக்கக் கட்டமைக்க முயலும் அபாயகரமானப்போக்கும் இந்நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் பேராபத்து என நாம் தமிழர் கட்சி பேரறிவிப்பு செய்கிறது. இதனைத் தெளிந்துணராது, அதிகாரக்குவிப்பிலும், மாநிலங்களின் தன்னுரிமை மறுப்பிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் இந்நாட்டின் இறையாண்மையே கேள்விக்குள்ளாகும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை செய்கிறது.

    பொருளாதார நிலை

    பொருளாதார நிலை

    ‘தனியார் மயம்! தாராளமயம்! உலகமயம்!' எனும் பொருளாதாரக் கொள்கையின் விளைவாலும், பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற மிகத்தவறான முடிவுகளாலும் நாடு பொருளாதாரத்தில் அடைந்திருக்கும் மிகப்பெரும் வீழ்ச்சி மிகப்பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காது சென்றிருப்பதன் மூலம் வெங்காயம், பூண்டு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

    பொதுத்துறை நிறுவனங்கள்

    பொதுத்துறை நிறுவனங்கள்

    வரலாற்றில் இதுவரையில்லாத அளவுக்கு வேலையின்மையும், உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியும், பொருளாதாரத் தேக்கமும் இருக்கிற தற்காலச்சூழலில் அதனை சரிசெய்ய எவ்வித முன்நகர்வுகளையும் செய்யாத மத்தியில் ஆளும் மோடி அரசு அதனைத் திசைதிருப்ப புதிய சிக்கல்களைத் தோற்றுவித்து, நாட்டு மக்களைத் துண்டாடத் துணிகிறது. இத்தோடு, சுதந்திர இந்தியாவின் கோயில்கள் என வர்ணிக்கப்பட்டப் பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாய் தனியாருக்குத் தாரைவார்த்து, நாட்டின் எல்லாத்துறைகளையும் தனியார்வசமாக்கத் துடிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகாரப்போக்கும், தவறானப் பொருளாதார முடிவுகளும் தொடர்ந்தால் அது நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடும். ஆகவே, பொருளாதார நிபுணர்களை அழைத்து ஆலோசித்து நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    போராட்டங்களில் வன்முறை

    போராட்டங்களில் வன்முறை

    குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களிலும், டெல்லியிலும், தமிழகத்திலுமென எனப் பற்றிப் படர்ந்தப் போராட்டங்களில் பங்கேற்று உரிமைக்காகக் குரலெழுப்பிய மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் மீது கொடுந்தாக்குதலை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட பாஜக அரசின் அரசப்பயங்கரவாதத்தை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 29 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலைசெய்யக் கோரி தமிழகச் சட்டமன்றத்தில் 161வது சட்டப்பிரிவின்படி தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டுக்கு மேலாகியும் அதற்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. தமிழக மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அமைச்சரவையின் முடிவை, மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் புறந்தள்ளுவது என்பது மாநிலத் தன்னாட்சிக்கு எதிரானது; மக்களாட்சித் தத்துவத்தைக் குலைப்பதாகும்.

    7 தமிழர் விடுதலை

    7 தமிழர் விடுதலை

    ஆகவே, எழுவர் விடுதலை என்று சுருங்கப்பாராது மாநிலத்தின் தன்னுரிமைக்கானப் போராட்டம் என்ற பரந்த பார்வையோடு மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தம் தந்து சட்டப்போராட்டம் செய்து தமிழக அரசு எழுவர் விடுதலையை உடனடியாகச் சாத்தியப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. தமிழகத்திலுள்ள சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம்களை மூட வேண்டும் எனவும், சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, இன ஒதுக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தாயகத்தமிழகத்தை நம்பி வரும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களைத் தார்மீக அறத்தின் அடிப்படையில் இந்நாட்டின் குடிமக்களாக ஏற்று அவர்களுக்குக் குடியுரிமை வழங்கச் சட்டமியற்ற வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    ஈழப் பொது வாக்கெடுப்பு

    ஈழப் பொது வாக்கெடுப்பு

    சிங்கள இனவாத அரசும், இந்தியப் பேரரசும் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு ஈழ நிலத்தில் நிகழ்த்திய இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் அதற்குரிய எவ்வித நீதியும் கிடைக்கப்பெறவில்லை. தமிழினப் படுகொலையை முன்நின்று நடத்திய மகிந்தா ராஜபக்சேவும், கோத்தபய ராஜபக்சேவும் இலங்கையின் அதிகாரபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் அவ்வினப்படுகொலைக்கு நீதிகேட்டு நிற்கிறார்கள். எட்டுகோடித் தமிழர்களின் குரலாக தமிழகச் சட்டமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடையையும், பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும் கோரியது. ஆகவே, தமிழர்களின் அக்கோரிக்கையை ஏற்று இலங்கை மீது ஒரு தலையீடற்ற பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணை அமைக்கவும், சிங்களர்களோடு இணைந்து வாழ்வது இனி சாத்தியமேயில்லை என்கிற நிலையில் தள்ளப்பட்டிருக்கிற தமிழர்களுக்குத் தமிழீழமே நிரந்தரத்தீர்வு என்பதால் தனிநாடு அமைக்க ஈழத்தில் வாழும் தமிழர்களிடம், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தவும் மத்திய அரசு சர்வதேச அழுத்தம் தர வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    தமிழகத்துக்கு நீட் விலக்கு

    தமிழகத்துக்கு நீட் விலக்கு

    சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரான நீட் எனும் ஒற்றைத்தகுதித் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றியத் தீர்மானத்தை ஏற்று தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்குதர மத்திய அரசு முன்வர வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், கல்வி நிலையங்களை காவிமயப்படுத்துவதும், பாடத்திட்டங்களில் இந்துத்துவா கருத்துகளை உட்புகுத்துவதுமான மத்திய அரசின் செயல்களை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    திட்டங்களை கைவிடுக

    திட்டங்களை கைவிடுக

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், உயர் மின்னழுத்தக்கோபுரம் அமைத்தல், அணு உலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ உலை, எட்டுவழிச்சாலை என இம்மண்ணையும், அதன் வளத்தையும் பாதிக்கக்கூடியப் பேரழிவுத்திட்டங்கள் யாவற்றையும் மக்களின் உணர்வுகளை மதித்து திரும்பப் பெற வேண்டும் எனவும், அக்கொடியத் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் யாவற்றையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    டி.என்.பி.எஸ்.சி

    டி.என்.பி.எஸ்.சி

    தமிழக இளைஞர்களின் பொருளியல் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வடநாட்டவர்களும், வெளிநாட்டவரும் பங்கேற்க வழிவகை செய்திருக்கும் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பிலும், மத்திய அரசின் பணியிடங்களிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கச் சட்டமியற்றிச் செயலாக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    புதுவைக்கு அங்கீகாரம்

    புதுவைக்கு அங்கீகாரம்

    தமிழர்களின் இன்னொரு தாய் நிலமாக இருக்கிற புதுச்சேரிக்கு மாநில அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனும் தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அதற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி கோருகிறது. . கஜா புயலால் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கிற காவிரிப்படுகையை மீட்டுருவாக்கம் செய்யவும், அந்நிலப்பரப்புகளில் விவசாயத்தை வளர்த்தெடுக்கவும் காவிரிப்படுகை மாவட்டங்களை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக' அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசை இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    நெல்லை கண்ணன் வழக்கு

    நெல்லை கண்ணன் வழக்கு

    தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மீது பொய் வழக்கைப் புனைந்து சிறைப்படுத்தியது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நிகழ்ந்த பேரவமானம் என நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது அருந்தவப்பயனென வாழ்ந்த தமிழ்ப்பேரறிஞர் நெல்லை கண்ணன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக தமிழக அரசை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    தேர்தலில் வாக்குச் சீட்டு

    தேர்தலில் வாக்குச் சீட்டு

    சனநாயகத் திருவிழாவான தேர்தல் முறையில் எவ்வித ஐயமும் ஏற்படாதிருக்க, மக்களின் நம்பகத்தன்மை சிதைவுறாது நீடிக்க தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையிலே நடத்த வேண்டும் எனவும், வாக்குப்பணம் கொடுப்போரையும், பெறுவோரையும் சிறைப்படுத்துகிற வகையிலும், குற்றமிழைக்கும் வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்து தேர்தலில் பங்கேற்க முடியாது தடுக்கிற வகையிலும் உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    பொதுமக்களுக்கு நன்றி

    உள்ளாட்சித்தேர்தலை மூன்றாண்டு காலம் நடத்தாது காலந்தாழ்த்திய அதிமுக அரசு, தற்போது இரண்டு கட்டமாக அதனைப் பிரித்துத் தேவையற்றப் பொருட்செலவையும், பணிச்சுமையையும் ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாது தேர்தலில் அதிகார அத்துமீறலும், மிகப்பெரும் முறைகேடும் செய்து சனநாயகப்படுகொலையை அரங்கேற்றியிருக்கிறது. அதற்குத் தமிழகத் தேர்தல் ஆணையமும் துணைபோனது வன்மையாகக் கண்டனத்திற்குரியது. ஆளும் அரசின் இடையூறுக்கும், தொடர் குழப்பங்களுக்கும் மத்தியிலும் தேர்தலை நடத்த இரவு பகலாக உழைத்திட்ட அரசு ஊழியர்களின் உழைப்பு அபரிமிதமானது. இத்தேர்தல் களத்தில், இருபெரும் திராவிடக்கட்சிகளாலும் பணம் தண்ணீராக வாரி இறைக்கப்பட்டப்போதும் அதற்கு விலைபோகாது இனமான உணர்வுடன் மாற்று அரசியலுக்காய் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்திட்ட தாய்த்தமிழ்ச்சொந்தங்கள் அனைவருக்கும் இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு நாம் தமிழர் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    English summary
    Naam Thamizhar Party General Council had urged that the Centre should withdraw the CAA and NRC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X