தேசிய மருத்துவர்கள் தினம்..உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து
சென்னை: தேசிய மருத்துவர் தினம் என்பது மருத்துவர்களின் பங்கு மற்றும் சேவை செய்வதில் உள்ள பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிடவும், அவர்களின் செயல்பாடுகளையும், கடமைகளையும் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிதான் சந்திர ராய்
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் 1882-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர், பிதான் சந்திர ராய். இவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அதுவும் ஒரே சமயத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எம்.ஆர்.சி.எஸ். ஆகிய படிப்புகளை, இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களில் படித்து சாதனை படைத்தவர். பிதான் சந்திர ராய் சிறந்த மருத்துவராக புகழ் பெற்றவராக இருந்தார்.

மேற்குவங்க முதலமைச்சர்
இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றியவர். 1948ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை, 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். இவருக்கு பிப்ரவரி 4, 1961 அன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 80 ஆண்டு காலம் இந்த மண்ணுலகில் வாழ்ந்த பிதான் சந்திர ராய், தன்னுடைய பிறந்த தினத்திலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ ஆலோசகர்
ஜாதவ்பூர் டி.பி. போன்ற மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதான், கமலா நேரு நினைவு மருத்துவமனை, விக்டோரியா நிறுவனம் (கல்லூரி), சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சித்தரஞ்சன் சேவா சதான் ஆகியவற்றை நிறுவுவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். இந்திய மருத்துவக் கண்டத்தின் முதல் மருத்துவ ஆலோசகர் என்றும் பிதான் சந்திர ராய் அழைக்கப்பட்டார். இவரது நினைவாக ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய #DoctorsDay பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!' என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video - Watch Now

ஓபிஎஸ் வாழ்த்து
அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், உயிர்காக்கும் உன்னதமான மருத்துவ தொழிலை, தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதி சேவை மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவ தினமான இந்நாளில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.