நிர்மலா சீதாராமன் முதல்வர் வேட்பாளர் இல்லை; தேஜகூ ஒருங்கிணைப்பு குழு முதல்வரை அறிவிக்கும்- சிடி ரவி
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிறுத்தப்படவில்லை; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக- பாஜக மோதல்
ஆனால் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தலைவர்கள் அனைவருமே முதல்வர் வேட்பாளர் தொடர்பாக இப்போதைக்கு பேசமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடமே முடிவு எடுக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

சென்னையில் சிடிரவி
இந்த நிலையில் சென்னையில் இன்று பாஜக நிகழ்ச்சிகளில் அதன் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் சிடி ரவி கூறியதாவது:

அதிமுக பெரிய கட்சி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி. எது பெரிய கட்சியோ அந்த கட்சியை சேர்ந்தவர்தான் முதல்வர் என்பதுதான் இயற்கையானது. தற்போதைய நிலையில் முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அறிவிக்கும்.
|
கூட்டணியில் வெளிப்படை தன்மை
அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் பாஜக தோழமையுடனும் வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் கூடி தேவையான முடிவுகளை எடுக்கும்.

முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமனா?
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிறுத்தப்படவில்லை. அப்படி வெளியான செய்திகள் வதந்திதான். இவ்வாறு சிடி ரவி கூறினார்.