சென்னையில் கொடுமை: நீட் தேர்வு பயம்.. அரசு பள்ளியில் படித்த.. ஆட்டோ ஓட்டுநர் மகன் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் பயிற்சி மேற்கொண்ட மாணவர் தோல்வி பயம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞரின் பெயர் தனுஷ் என்பதாகும். சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் என்பவரின் மகனாவார். பிரதாப்பின் மனைவி ஜெயந்தி இட்லி வியாபாரம் பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது மகனான தனுஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த கல்வியாண்டில் நீட் தேர்வில் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் 159 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காமல் போயுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய பணம் இல்லாத காரணத்தினால் மீண்டும் நீட் தேர்விற்காக பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் தனுஷ் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
வீட்டின் ஏழ்மை காரணமாக தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இருப்பினும் சொந்த முயற்சியில் வீட்டில் இருந்து கொண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷ் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சகோதரரிடம் ஆங்கிலத்தில் அனைத்தும் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக கூறி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்ட் மூலமாக தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் படிக்க முடியாத காரணத்தினாலும், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் தெரிவித்து வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

தமிழகத்திற்கு நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு தோல்வி பயத்தால் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.