தமிழகத்தில் பரவ தொடங்கிய ஓமிக்ரான் BA.4.. அறிகுறிகள் என்னென்ன? மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா
சென்னை: தமிழகத்தில் வேகமாகப் பரவும் ஓமிக்ரான் BA.4 பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்த வகை கொரோனா குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமிக்ரான் கொரோனா முதலில் கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, அதிகப்படியான நபர்களுக்கு மிக வேகமாகப் பரவியது.
ஓமிக்ரான் வைரசின் வேரியண்ட்கள் தான் இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்க இந்த ஓமிக்ரான் BA.4 வகை கொரோனாவே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
வடகொரியாவில் படுவேகத்தில் பரவும் ஓமிக்ரான்.. 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு தொற்று

ஓமிக்ரான்
உலகின் பல நாடுகளில் பரவிய இந்த ஓமிக்ரான் BA.4 தற்போது தமிழ்நாட்டிலும் புகுந்துள்ளது. செங்கல்பட்டு நாவலூர் பகுதியில் ஒருவருக்கு BA.4 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க இந்த ஓமிக்ரான் BA.4 வகை பாதிப்பே முக்கிய காரணமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முதலில் எங்கே
ஓமிக்ரான் கொரோனாவை போலவே இந்த ஓமிக்ரான் BA.4 வகையும் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கடந்த ஜனவரி 10ஆம் தேதி கண்டறியப்பட்டது. அங்கு இப்போது உறுதி செய்யப்படும் கேஸ்களில் சுமார் 35% வைரஸ் பாதிப்பு இந்த BA.5 வகையாகும். பிரிட்டனில் இப்போது வைரஸ் பரவலுக்குக் காரணமாக உள்ள ஓமிக்ரான் BA.2 வேரியண்டை போலவே BA.4 மற்றும் BA.5 வேரியண்ட்களிலும் புரோத ஸ்பைக்கில் மாற்றம் ஏற்படுகிறது.

என்ன மாற்றம்
இந்த புரோத ஸ்பைக் மூலம் தான் வைரஸ்கள் மனித செல்களில் தன்னை இணைத்துக் கொள்ளும். BA.4 மற்றும் BA.5 ஓமிக்ரான் வகைகளில் புரோத ஸ்பைக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வேக்சின்கள் இந்த புரோத ஸ்பைக்கை அழிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது உருமாற்றம் அடையும்போது, வேக்சின்கள் பலன் அளிக்க முடியாத சூழலும் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கவலைக்குரிய வகை
இந்த ஓமிக்ரான் BA.4 வகை கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை குறைவாக நடைபெறுவதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. உறுதி செய்யப்பட்டவர்களை விட உண்மையான வழக்குகள் மிக அதிகமாக இருக்கும். ஏற்கனவே, BA.4 ஓமிக்ரானை உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய நோய்த் தடுப்பு மையம் கவலைக்குரிய கொரோனா வகைகளாக அறிவித்துள்ளன.

அறிகுறிகள்
ஒமிக்ரான் BA.4 நோய் ஏற்படுவோருக்குச் சளி ஏற்படுவதே முக்கிய அறிகுறியாக உள்ளது. சளி, சுவாச பிரச்சினை, மூக்கு அடைப்பு, இருமல், உடல் வலி, சோர்வு ஆகிய முக்கிய அறிகுறிகளாக உள்ளது. ஓமிக்ரானால் பாதிக்கப்படும் பெரும்பாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வைரஸ் பாதிப்பே ஏற்படுகிறது. சுவை மற்றும் வாசனை இழப்பு குறைவாகவே ஏற்படுகிறது.

முக்கியம்
இந்த வகை கொரோனா முந்தைய வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் என்றாலும் கூட, இவை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதேநேரம் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவது இது கடைசி முறையாக இருக்காது. இந்த வகை தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் வரும் காலத்தில் உருவாகும் புதிய உருமாறிய கொரோனாவும் இதேபோல இருக்கும் என உறுதியாகக் கூற முடியாது. எனவே, கண்காணிப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.