தெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
சென்னை: தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிவர் புயல் உருவாகி புதுச்சேரி- மரக்காணம் இடையே கரையை கடந்தது. நிவர் புயலால் கடலூர் மாவட்ட பலத்த சேதம் ஏற்பட்டது.

அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பலத்த மழையையும் கொடுத்தது. இதனை தொடர்ந்து புரேவி புயல் வங்க கடலில் உருவானது. இது இலங்கையில் கரையை கடந்துள்ளது.
இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்-கன்னியாகுமரி இடையே 2-வது முறையாக கரையை கடக்க உள்ளது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடற்பரப்பில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலாய் தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.