உஷார்.. நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு "மிக கன மழை.." வானிலை மையம் வார்னிங்
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் 12 செமீ, வால்பாறை 10 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்கோனா 9, வால்பாறை தாலுகா அலுவலகம் சோலையாறு பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதிகளில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா 6, நடுவட்டம், கூடலூர் பஜார் பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ்

வானிலை அறிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5 மாவட்டங்களில் கனமழை
8ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று முதல் 8ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் 10ஆம் தேதி வரைக்கும் இலட்சத்தீவு பகுதி, கேரளா கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடலில் சூறாவளி காற்று
இன்று முதல் 10ஆம் தேதி வரைக்கும் குஜராத், மகாராஷ்டிரா கடலோரப்பகுதிகள், வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.