இரவு முழுக்க தாங்க முடியவில்லை.. நிவர் வருவதற்கு முன்பே இந்த நிலையா.. ஆடிப்போன சென்னை!
சென்னை: சென்னையில் தற்போது கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல பல இடங்களில் இதனால் அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளது.
தமிழகத்தை நாளை நிவர் புயல் தாக்க உள்ளது. வங்கக்கடல் அருகே இந்த புயல் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தை நோக்கி 50 கிமீ வேகத்தில் இந்த புயல் வந்து கொண்டு இருக்கிறது.
சென்னையில் இருந்து சுமார் 400 கிமீ தூரத்தில் இந்த புயல் தற்போது நிலை கொண்டு வலுப்பெற்று வருகிறது.
இதெல்லாம் டீசர்தான்.. அந்த 12 மணி நேரங்கள்தான் மிக முக்கியம்.. நிவர் வருவதற்கு முன்.. என்ன நடக்கும்?

வலிமை
இந்த புயல் தற்போது வலிமையான புயலாக உள்ளது. இன்று மாலை இந்த புயல் தீவிர புயலாக உருவெடுக்கும். அதன்பின் அதிதீவிர புயலாக மாறும். நாளை இந்த புயல் கரையை கடக்கும் போது அதிதீவிர புயலாக உருவெடுக்கும்.

மழை
நாளை இந்த புயல் கரையை கடக்கும் போது 120 கிமீ வேகம் வரை காற்று வீசும். இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரைக்காலை விட மாமல்லபுரத்திற்கு அருகில்தான் அதிகம் இருக்கிறது. இதனால் இங்குதான் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இரவு
நேற்று இரவு முழுக்க இதனால் கடுமையான மழை சென்னையில் பெய்தது. சென்னையில் இருக்கும் எல்லா ஏரியாவிலும் நேற்று தீவிரமான கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் விடாமல் கனமழை பெய்து வருகிறது.

2015
2015ல் சென்னையில் வெள்ளம் வந்த போது இரவு முழுக்க எப்படி மழை பெய்ததோ அந்த அளவிற்கு நேற்று மழை பெய்தது. சென்னையில் பல்வேறு சாலைகளில் தற்போது ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. அதேபோல் சென்னையில் பல சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
சென்னையில் இந்த புயல் காரணமாக இனியும் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. இப்போது பெய்த மழை போதாதென்று நாளை முழுக்கவும், அதற்கு மறுநாளும் சென்னையில் தீவிரமாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்து இருக்கிறது. இதனால் சென்னையின் நிலை இன்னும் மோசமாகலாம் என்று அச்சம் எழுகிறது.

மக்கள்
சென்னையில் வசிக்கும் நெட்டிசன்கள் பலர்.. இரவு முழுக்க மழை தாங்க முடியவில்லை. இப்போதே மழை காரணமாக நிலைமை மோசமாகிவிட்டது. பல இடங்களில் மின்சாரம் இல்லை என்று மக்கள் கூறியுள்ளனர். சென்னையில் மழை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டள்ளது.