• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் தமிழர்களை வஞ்சிக்கிறது! - தமிழ்தேசிய பேரியக்கம் கண்டனம்!

By
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களுக்கு வேலை தர மறுக்கும் என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிர்வாகம் தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறது என்றும் அதற்கு ஆட்சியில் இருந்த அரசுகள் எதிர்வினையாற்றாமல் இருப்பதாக தமிழ்தேசிய பேரியக்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழ்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கடந்த 17ம் தேதி இந்திய ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு கொள்கைத் திட்டத்தை வெளியிட்டார்.

தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் உள்ளிட்ட தமிழ்நாடு அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிலக்கரி

நிலக்கரி

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின் மின்நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்த 2018ம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு வருகிறது.

 என்.எல்.சி

என்.எல்.சி

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு திட்டத்தின்படி, சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 இலட்ச ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும், நகர பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்று என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. இவையெல்லாம் மிகமிகக் குறைவான தொகைகளாகும்.

திமுக‌

திமுக‌

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஒரு ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி ரூபாய் வரை இழப்பீடு வேண்டுமென கேட்ட திமுக இப்போது ஆளுங்கட்சியானதும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்துகொண்டு, இந்த மிகக்குறைந்த இழப்பீட்டுத் தொகை அறிவிப்பைக் கண்டிக்காமல் அமைதிகாப்பது வேதனையளிக்கிறது. மேலும், நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும் என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

 நிலம்

நிலம்

ஏற்கெனவே இதுவரை சற்றொப்ப 10,000 ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்தி வைத்துள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், அவற்றைப் பயன்படுத்தாமல் வைத்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது சுரங்கத்திற்காக 20 கி.மீ சுற்றளவில் உள்ள கொளப்பாக்கம், அரசகுழி, கோ. ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், சாத்தபாடி, தர்மநல்லூர் உள்ளிட்ட 26 கிராமங்களின் செழுமையான வேளாண் நிலங்களையும், மக்கள் வசிப்பிடங்களையும் அழித்து - 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் போவதாகத் தெரிவிக்கிறது.

சுரங்கம்

சுரங்கம்

இந்த மூன்றாவது சுரங்கத் திட்டத்திற்காக இயற்கையாக பிரிந்து ஓடிக் கொண்டுள்ள மணிமுத்தாறு மற்றும் வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளை விருத்தாசலம் அருகில் செயற்கையாக இணைக்கவும் திட்டமிடப்படுகிறது. ஆறுகளை அவற்றின் இயற்கையான பாதையிலிருந்து செயற்கையாகத் திருப்பினால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசும், நெய்வேலி நிர்வாகமும் இணைந்து இதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றன.

 வெளியேற்றம்

வெளியேற்றம்

கடந்த 1950-களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு ஈகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் இதுவரை வழங்கப்படவில்லை.

பணிகள்

பணிகள்

தமிழ்நாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரத்திற்காகப் போராடினால், வட மாநிலத்தவரைக் கொண்டு பணியை மேற்கொள்வோம் எனத் திமிராக அறிவிக்கிறது, நெய்வேலி நிர்வாகம். இந்நிலையில், புதிதாக சுரங்கம் அமைத்திட நிலம் வேண்டி நிற்கும் நிர்வாகம், நிலம் வழங்கினாலும் உங்களுக்கு வேலை தர மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்கிறது.

 நிலம்

நிலம்

நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை மறுப்பது, தமிழர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஏற்கெனவே உள்ள பணியாளர்களை நிரந்தரமாக்க மறுப்பது, பணிப்பயிற்சி (அப்ரன்டிசு) மாணவர்களுக்குப் பணி வழங்க மறுப்பது என தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், அதிமுக - திமுக என மாறினாலும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தொடர்ந்து தங்கள் பக்கம் இருப்பதால் இவ்வாறு துணிச்சலாக செயல்படுகிறது.

 அறிவிப்பு

அறிவிப்பு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே தங்கள் நிலங்களைக் கொடுத்த மக்களுக்கு இதுவரை உரிய வேலை வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படாத நிலையில், எங்கள் நிலங்களைத் தர முடியாது என கடந்த 2018ஆம் ஆண்டிலேயே நிலம் எடுப்புத் தொடர்பாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களில், இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நெய்வேலி நிறுவனம் ஒருதலைபட்சமாகக் கொள்கை அறிவிப்பை வெளியிடுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு மக்களிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது. வாழ்வாதார இழப்பு, வேலை மறுப்பு, சூழலியல் அழிப்பு போன்ற காரணங்களுக்காக இத்திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும். தமிழர்களுக்குக் கேடு விளைவிக்கும் நிறுவனத்திற்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என மக்கள் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும்.

 தமிழக அரசு

தமிழக அரசு

இல்லையெனில், கடந்தகால பா.ச.க. அடிமை அதிமுக ஆட்சியாளர்களுக்கும், இப்போதுள்ள திமுக ஆட்சியாளர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லையென மக்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கிவிடுவர். தமிழ்நாடு அரசு, உடனடியாக இச்சிக்கலில் தனது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

English summary
The Tamil Desiya Periyakkam has issued a statement condemning the NLC for refusing to provide jobs to Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X