வீட்டு கேட்டை திறந்து வைத்து காத்திருந்த பன்னீர்.. ஒருவரும் வரலை.. அதிர்ந்த ஓபிஎஸ்.. என்னாச்சு?
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டில் ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது அந்த தரப்புக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் இரட்டை தலைமை வேண்டும் என பன்னீர் செல்வம் தரப்பும் விரும்புகிறார்கள். இதனால் அதிமுகவில் மோதல்கள் பெரிய அளவில் வெடித்துள்ளன.
அதிமுக பொதுக் குழுவில் ஓபிஎஸ்ஸை எடப்பாடி தரப்பு அவமதித்து அனுப்பினர். அது போல் அவரது பெயர் நமது அம்மா நாளிதழில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக் குழு மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேடைக்கு வராத ஓபிஎஸ் தரப்பு.. கெத்தாக ஆதரவாளர்களுடன் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.. என்னாச்சு?

உயர்நீதிமன்றம்
இதை தடுத்து நிறுத்த உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்தது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்துவிட்டார்கள். ஆனால் வரும் 4 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது கடந்த 23 ஆம் தேதி ஓபிஎஸ் கையெழுத்திட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

எந்த தீர்மானம்
ஆனால் எந்த தீர்மானத்தையும் அதிமுக பொதுக் குழு ஏற்கவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்டது. இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழுவை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொண்டர்கள் கூட்டம்
வழக்கமாக கடந்த 14 ஆம் தேதி முதல் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வீடுகளில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதும். அதாவது 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400 க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அது போல் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவானவர்கள்தான்.

ஓபிஎஸ் வீட்டு வாசல்
எனினும் ஓபிஎஸ் வீட்டு வாசலில் தொண்டர்கள் கூட்டமும் நிர்வாகிகள் கூட்டமும் அலை மோதும். பொதுவாக அதிகாலையிலேயே தொண்டர்கள் அவர்கள் இருவரின் வீடு முன்பும் கூடிவிடுவர். ஆனால் இன்றைய தினம் ஓபிஎஸ் வீட்டு கதவு திறந்திருந்தாலும் அவரை காண தொண்டர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி
ஓபிஎஸ் வீட்டில் மூத்த நிர்வாகிகள் கூட இல்லை. அவர் தனியாகவே இருந்தார். அதன் பின்னர் பகல் 11 மணிக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ரவீந்திரநாத் ஆகிய 4 பேரும் வந்தனர். இதன் பின்னர் ஆலோசனையை ஓபிஎஸ் தொடங்கினார். தொண்டர்களின் வருகை குறைவால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.