நம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமையில்லை! தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சு
சென்னை: நம்பர்-1 முதலமைச்சர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலை வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். எனக்கு முருகன் மீது பாசம் உண்டு என்று மு.க ஸ்டாலின் சொன்னது பூச்சி முருகனை மட்டுமல்ல என்று உணர்ந்து தொண்டர்கள் எழுப்பிய கரவொலி அடங்க பல மணி நேரமானது.
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வாரியத் தலைவருமான பூச்சி எஸ். முருகன் இல்லத் திருமணத்தைத் தலைமை ஏற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ரோஜா நடனமாடியதாக வீடியோ.. மார்ஃபிங் செய்த 3 பேரை லபக்கிய போலீஸ்
இந்தத் திருமணம் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா தொற்று நோய் நாடு முழுதும் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி நடந்துகொண்டிருக்கிறது. இதுவே கொரோனா காலமாக இல்லாதிருந்தால் அறிவாலயத்தில் இடமே இல்லை என்ற அளவுக்கு கூட்டம் திரண்டிருக்கும் என்று கூறினார்.

நாடகம்
பூச்சி முருகனின் தந்தையார் மறைந்த சிவசூரியன் அவர்கள் தலைவர் கலைஞரிடத்திலே நெருக்கமாக இருந்தார். அவரது திருமணத்தை அண்ணா தலைமை தாங்கி நடத்தி வைக்க கலைஞர் முன்னிலை வகித்தார். சிவசூரியன் திரைப்படத்தில் மட்டுமல்ல கழகத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார். 'நானே அறிவாளி' என்ற நாடகம், தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன் அவரே அந்நாடகத்தில் நடித்தார். அவர் ஆட்சிக்கு வந்த பின் அந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் சிவசூரியன் நடித்தார்.

நாரதராக நடித்த ஸ்டாலின்
தமிழகம் முழுதும் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் அண்ணாவின் நண்பர் சி.வி. ராஜகோபால் நாரதர் வேடத்தில் நடித்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் நடிக்க இயலாமல் போன நிலையில் நாரதர் வேடத்தில் நான் தான் நடித்தேன். பூச்சிமுருகனின் தந்தையாரோடு நான் இணைந்து நடித்திருக்கிறேன்" என்று பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார் ஸ்டாலின்.

நச்சுப்பூச்சிகளை ஒழிக்கும் முருகன்
எல்லாரும் அவரை பூச்சி முருகன் என்று அழைப்பார்கள். சிலர் பூச்சி என்று அழைப்பார்கள். விஷப் பூச்சிகளை, நச்சுப் பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்க பணியாற்றிவருகிறார் பூச்சி முருகன். நான் எப்போதும் அவரை முருகன் என்றுதான் அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு என்று சொன்னார். அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பல முருகன் கோவில்களில் குட முழுக்கு நடைபெற்றதை நினைவு படுத்தினார் மு.க ஸ்டாலின்.

நம்பர் 1 தமிழ்நாடு
நம்முடைய அன்பிற்குரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேசுகிறபோது, இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி, ஒப்பிட்டுச் சொல்லி, அதில் முதல் முதலமைச்சராக - நம்பர்1 முதல்வராக இன்றைக்கு ஸ்டாலின் இருக்கிறார் என்று பெருமையோடு சொன்னார். என்னை பொறுத்தவரை நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலை வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
என்றும் கூறினார்.

நாட்டிற்குத் தொண்டர்களாக
மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், "வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக" வாழுங்கள்.. வாழுங்கள் என்று வாழ்த்தி பேசினார்.