வடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி
சென்னை: வடசென்னையில் பல்வேறு வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கொருக்குப்பேட்டை கேஎம்எஸ் டிப்போ, மீனாம்பாள் நகர் ஜே ஜே நகரில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கால் முட்டி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறி நேற்ற மாலை முதல் நள்ளிரவில் சென்னையை ஒட்டி கரையை கடந்தது. இதனால் நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

கனமழையால் வடசென்னை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கொருக்குப்பேட்டை கே எம் எஸ் டிப்போ மீனாம்பாள் நகர் ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.

இதேபோல் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே முட்டை அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். இதேபோன்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ரோட்டில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியது.

நேற்று நள்ளிரவு புயல் கரையை கடந்த போது கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகமிக கனமழை பெய்தது. சென்னையில் ஓரளவே மழை பெய்தது. ஒருவேளை சென்னையில் 20 செமீக்கு அதிகமான மழை பெய்திருந்தால், நிலைமை மோசமாகி இருக்கும். இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெரிய அளவில் மழை இல்லை. இதனால் புயலின் ஆபத்தில் இருந்து சென்னை தப்பியது.
புயலும் கரையை கடந்தது.. நாமும் இனி பார்டரை கிராஸ் செய்யலாம்.. நண்பகல் முதல் பேருந்துகள் இயக்கம்