• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராஜாவை கொடூரமாகத் தாக்கி கைது செய்த சிங்கள இனவெறி அரசின் கோர வன்முறைச்செயல் அரசப் பயங்கரவாதத்தின் உச்சம் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.

இலங்கையில் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராஜா இலங்கை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்

பின்னர், சில மணி நேரம் கழித்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான் அறிக்கை

சீமான் அறிக்கை

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தியாகத்தீபம் அண்ணன் திலீபன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், ஈகைச்சுடர் ஏற்ற முயன்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் கஜேந்திரன் செல்வராஜாவை சிங்கள காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அரசியல் தலைவரது சனநாயகப்பூர்வச் செயல்பாட்டையே அனுமதியாது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கைப்பார்க்கும் சிங்கள இனவெறி அரசின் கோரச்செயல்கள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

கண்டனம்

கண்டனம்

உண்ணா நோன்பிருந்து ஊனை உருக்கி, உயிரை ஒளியாக்கி இனவிடுதலைக்கு வெளிச்சம் காட்டிய உன்னதப் போராளி, அறவழிப் போராட்டத்தின் அழிக்கமுடியாத வரலாற்றுப் பெருங்குறியீடாக உலகத்தமிழர் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஈகைப்பேரொளி அண்ணன் திலீபனின் நினைவைப் போற்றும் விதமாக, தனது குடும்பத்தினருடன் சுடர் வணக்கம் செய்ததற்காகச் சகோதரர் கஜேந்திரன் செல்வராஜா மீது அரச வன்முறையை ஏவிவிட்டுக் கைதுசெய்து அவமதித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களை உள்ளம் கொதிக்கச் செய்திருக்கிறது.

சிங்கள அரசு

சிங்கள அரசு

இறந்துபோன முன்னோரையும், மூத்தோரையும் போற்றித்தொழுதல் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தமிழர்களது பண்பாட்டு மரபு. அத்தகைய மெய்யியல் கோட்பாடுகளையும், அறவழிச்செயல்பாடுகளையுமே சிங்கள இனவெறி அரசு தடைவிதித்து முடக்குமென்றால், இதனைப் போல அரசப் பயங்கரவாதம் வேறுண்டா? தாய் மண்ணின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிரை ஈகமாக ஈந்த முன்னோர்களுக்கு அமைதியான முறையில் நினைவு வணக்கம் செலுத்துவதைக்கூட அனுமதிக்காத சிங்கள இனவெறி அரசின் செயல்பாடு கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

இனவெறி தாக்குதல்

இனவெறி தாக்குதல்

இரண்டு லட்சம் தமிழர்கள் மொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்ட இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலை நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர் என்கிற காரணத்தால் இனவெறி தாக்குதல்களை வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டிய இழிநிலை அந்நிலத்தில் நிலவுகிறதென்றால், அம்மண்ணில் வாழும் எளிய தமிழர்களின் நிலை என்னவென்பதை உலக நாடுகள் இனியேனும் சிந்திக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

ஆகவே, இனிமேலாவது, ‘ஒற்றை இலங்கைக்குள் ஒருமித்துத் தீர்வு' என்கிற வறட்டு வாதத்தைக் கைவிட்டு, தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்குப் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளவும், தனித்தமிழீழ நாட்டிற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பன்னாட்டுச் சமூகத்திடம் கோருகிறேன். மேலும், சொந்த நாட்டு மக்கள் பிரதிநிதி மீது கொடிய அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ள இலங்கை அரசின் கொடுங்கோல் போக்கிற்குத் தனது கடுமையான கண்டனத்தை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
Lankan Tamil MP arrest in Sri Lanka. ntk Seeman's latest statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X