தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் அதே நேரத்தில் ஐசியுவில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,52,348 ஆக உயர்ந்துள்ளது. இதில் 814 பேர் ஐசியுவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,562 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 23,888 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 23,443 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.. ஓமிக்ரானை தடுக்க முடியாமல் திணறிய வேக்சின்கள்.. இஸ்ரேல் பரபர ஆய்வு!
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,87,254ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு விகிதம் 16.7 சதவீதமாக உள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று
சென்னையில் 8305 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2143 பேருக்கும், கோவையில் 2228 பேருக்கும், திருவள்ளூரில் 854 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 687 பேருக்கும், கன்னியாகுமரியில் 830 பேருக்கும், மதுரையில் 643 பேருக்கும், திருப்பூரில் 517 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் நோயாளிகள்
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,038 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,61,171 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 15,036 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,89,045 ஆக உயர்ந்துள்ளது.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில் ஐசியுவில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை கோவை சேலம் மதுரை வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அதிகம் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

814 பேர் ஐசியுவில் சிகிச்சை
தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் மொத்தம் 8340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் 366 கொரோனா நோயாளிகள் ஐ சியுவில் இருந்தனர். ஜனவரி 17ஆம் தேதியன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 1,52,348 ஆக உயர்ந்துள்ளது. இதில் 814 பேர் ஐசியு வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 9829 ஐசியு படுக்கைகளில் 8.2% படுக்கைகள் தற்போது உபயோகத்தில் உள்ளன.

அதிகரிக்கும் நோயாளிகள்
இதில் சென்னையில் தான் அதிக நோயாளிகள் உள்ளனர். மொத்தம் உள்ள 814 நோயாளிகளில் தலைநகர் சென்னையில் நேற்று வரை 291 பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 72 நோயாளிகளும் சேலத்தில் 68 பேரும் ஐசியுவில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 51 பேரும் மதுரை மாவட்டத்தில் 49 நோயாளிகளும் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4013 பேருக்கு ஆக்சிஜன் வசதி
இதே போன்று ஜனவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோர் எண்ணிக்கை 1392 ஆக இருந்தது. ஜனவரி 17ம் தேதி கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்து 4013 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 40757 ஆக்சிஜன் படுக்கைகளில் 9.8% தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இதில் சென்னையில் 1407 பேர், கோவையில் 499 பேர், மதுரையில் 291 பேர், வேலூரில் 193 பேர், சேலத்தில் 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு
கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசியபோது சென்னை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடமின்றி படுக்கைகள் நிரம்பி வழிந்தன. நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அது போல ஒரு நிலமை வராது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறியிருந்தாலும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் முன் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.