தகித்த நயினார்.. பட்டென பறந்து வந்த ஓபிஎஸ் அறிக்கை.. இந்த முக்கிய விஷயத்தை நோட் பண்ணீங்களா?
சென்னை: அதிமுகவினர் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்திருந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவியின் மரணம் குறித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மாணவியின் மரணம் குறித்து முக்கியமான சில கருத்துக்களை ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் அவருக்கு கொடுத்த மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் அந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் தொல்லை கொடுத்ததாகவும், ஹாஸ்டல் வளாகத்தை சுத்தம் செய்ய சொன்னதாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இது வேறு சில கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யாருன்னு பார்த்தீங்களா.. தெருவில் டிராக்டர் ஓட்டிக் கொண்டே வந்த நயினார் நாகேந்திரன்.. வியந்த நெல்லை

பாஜக போராட்டம்
இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி நேற்று பாஜக சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தஞ்சை பள்ளி மாணவியின் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், தமிழ்நாட்டில் உடனடியாக மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

நயினார் பேச்சு
இந்த போராட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று குறிப்பிட்டார்.

ஏன் இப்படி சொன்னார்
தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் அதிமுகவின் இரண்டு தலைவர்களும் பெரிதாக கருத்து கூறவில்லை. பாஜக மட்டுமே இதை பற்றி பேசி வந்த நிலையில்தான் அதிமுக எதுவும் பேசாமல் தவிர்த்து வந்தது. இதை பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக இப்படி மௌனமாக இருந்ததை விரும்பாமல் பாஜகவின் நயினார் இப்படி விமர்சனம் வைத்ததாக கூறப்படுகிறது. நயினார் இப்படி தகிப்பாக பேசியதும் உடனே தஞ்சை பள்ளி மாணவியின் மரணம் குறித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை
ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சூழ்நிலையில், அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17-வயது சிறுமி தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் விடுதிக் காப்பாளர் அளித்த துன்புறுத்தலால் மனஉளைச்சல் ஏற்பட்டு களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் எனக்கு அளித்துள்ளதோடு தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி
பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால் அதைத் துணிவுடன் பெற்றோர்களிடத்திலோ அல்லது பள்ளி நிர்வாகத்திடமோ தெரிவித்து அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டுமே தவிர, இதுபோன்று உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்றும், எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாணவ, மாணவியரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவி இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை வீட்டிற்கு அனுப்பாமல் கணக்குகளை பராமரிக்கச் சொன்னதாகவும், படிப்பதைக் காரணம் காட்டி மறுத்தால் திட்டுவார் என்றும், விடுதியில் ஏதாவது பொருள் காணாமல் போனாலும் அதற்கு தான்தான் காரணம் என்று கூறி திட்டுவார் என்றும், தன்னுடைய தற்கொலைக்கு விடுதிக் காப்பாளர்தான் காரணம் என்றும் கூறியுள்ளதாக செய்தி வந்துள்ளது.

வீடியோ
அதே சமயத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருடைய உறவினர் விசாரித்தபோது மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக அந்த மாணவி குறிப்பிட்டதாகவும், இதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் ஒருதரப்பு கூறுகிறது. ஆனால், அரசுத் தரப்போ மாணவியின் தற்கொலைக்கும், மத மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறது. மற்றொரு தரப்பு கழிவறைகளை சுத்தம் செய்தல், விடுதிகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை பள்ளி நிர்வாகம் அளித்ததே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று கூறுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் மாணவி இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. மேற்படி சிறுமியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது., என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டு இருக்கிறார்.

நயினார் ஓபிஎஸ்
நயினார் கோபமாக பேசிய சில மணி நேரங்களில் ஓபிஎஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் மாணவியின் மரணத்திற்கு மதம் மாற்றம்தான் காரணம் என்று பாஜக போல அடித்து சொல்வதை ஓபிஎஸ் சொல்லவில்லை. மதம் மாற்றம்தான் மாணவியின் மரணத்திற்கு காரணம் என்று சொல்லாமல் அவர் தவிர்த்து இருக்கிறார். அதேபோல் வார்டன் திட்டியதால்தான் மாணவி மரணம் என்பதையும் ஓபிஎஸ் உறுதியாக சொல்லவில்லை. இரண்டு புகார்களும் வைக்கப்படுகிறது.. எப்படி இருந்தாலும் பள்ளி நிர்வாகம் மீதுதான் குற்றம் என்பது போல அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ஓபிஎஸ். இரண்டு பக்கமும் சாயாமல் மிகவும் நாசூக்காக அறிக்கை வெளியிட்டு உள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் அறிக்கை சொல்வது என்ன?
மாணவிக்கு மத மாற்ற அழுத்தம் கொடுத்ததாக ஒரு தரப்பு சொல்கிறது, வேலை கொடுத்து வார்டன் அழுத்தம் கொடுத்ததாக இன்னொரு தரப்பு சொல்கிறது.. ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும் மாணவி இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்பது உறுதியாகிறது என்று ஓபிஎஸ் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் பாஜகவின் கருத்துக்கு நேரடியாக ஆதரவு அளிக்காமல் நாசூக்காக பதில் அளித்துள்ளார். மாணவியின் மரண விவகாரம் மிகவும் சிக்கலானது என்பதால் இப்படி கவனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து வேறு யாரும் இதை பற்றி கருத்து தெரிவிக்காத நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.