மக்கள் எண்ண பிரதிபலிப்பாக.. ஸ்டெர்லைட் தடை தொடரும் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: ஓ. பன்னீர்செல்வம்
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு மே 22-ல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியது.

இதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசாணை செல்லும் என்று கூறியது. இத்தீர்ப்பை தமிழக தலைவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இந்த தீர்ப்பை வரவேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். #SterliteCase என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் தடை தொடரும் என தீர்ப்பு -பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: கமல்ஹாசன்
பண்ருட்டி வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தமது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்ற உத்தரவு ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கும், அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகளை சந்தித்த பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், இயக்கங்களுக்கும், கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
விசிக ரவிக்குமார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்ப்பை வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கியிருப்பதுபோலவே அந்த ஆலையைத் திறக்கக்கூடாது எனப் போராடியபோது போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான வழக்கிலும் உயர்நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.