நான் உங்கள் வீட்டு பிள்ளை.. மாஸாக எண்ட்ரி கொடுக்கப் போகும் சசிகலா! அதுவும் ’அவர்’ கூட சேர்ந்து..!
சென்னை : அதிமுகவில் இருந்து கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும், நாளை மறுநாள் நடக்கவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை மறுதினம் அதாவது 23ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது அக்கட்சி..
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்ததில் இருந்து தற்போது நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது அதிமுக வட்டாரங்கள்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: சென்னை நீதிமன்றம்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு
இந்த நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை இறுதி செய்யும் குழுவில் கூட்டமானது இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனி தீர்மானமானது தீர்மான குழுவால் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு
ஆனால் வழக்கம்போல இதற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதால் இன்றைய கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமியை சமாளிப்பதற்காக சசிகலாவுடன் ஓபிஎஸ் கைகோர்த்து இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதை சசிகலா தரப்பு ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் உறுதிப்படுத்திய நிலையில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு?
அதே நேரத்தில் நம்மிடம் பேசிய சில முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் சசிகலாவுடன் உறுதிதான் என்றும் தற்போது நீதிமன்றத்தில் பொதுக்குழுவை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க , ஓபிஎஸ் இபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. இதையடுத்து எடப்பாடி பொதுக்குழுவை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தாலும், ஓபிஎஸ் பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என நிச்சயம் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு
மேலும் தற்போது ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ள அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ஆவின் வைத்தியநாதன் உள்ளிட்டோர் சசிகலாவுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் ஓ .பன்னீர்செல்வம் சசிகலாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்புகளுக்கு திரைமறைவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்ததாகவும், அதிமுகவில் ஏற்பட்டு வரும் சிக்கல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே விரைவில் ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு இருக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.