அதிமுக அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றம்! மாவட்டச் செயலாளர்கள் அதிரடி!
சென்னை: அதிமுக அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை அகற்றி அவருக்கு அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் மாவட்டச் செயலாளர்கள்.
ஓபிஎஸ் படத்தை கட்சி அலுவலகத்தில் இருந்து அகற்றி இந்த நிகழ்வுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித் தேவன்.
அதிமுக தலைமைக்கழகத்திலும் அதிரடி மாற்றங்கள் விரைவில் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய 'பன்னீர்’ ரோஜா மாலை! பெஞ்சமினை பஞ்சராக்கிய எடப்பாடி! ’அண்ணன்’ கோச்சுப்பாரு.. அடடே ஆச்சரியகுறி!

ஓபிஎஸ் படம்
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகங்களில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அதிமுகவில் எழுந்துள்ள அதிகாரச் சண்டையில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நிற்பதால் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் கட்சி அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டு வருகின்றன.

ஆதரவு இல்லை
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தலைகீழாக நின்றாலும் இனி தங்களது ஆதரவு அவருக்கு கிடைக்காது என்பதை இப்படி சிம்பாளிக்காக கூறியிருக்கின்றனர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள். அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என விரும்பும் அவர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமி படத்தை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆதரவு
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் என்று பார்த்தால் திருச்சி மாநகர் வெல்லமண்டி நடராஜன், தஞ்சை தெற்கு வைத்திலிங்கம், பெரம்பலூர் குன்னம் ராமச்சந்திரன், தேனி சையது கான் என விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவுக்கு 4 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் அலுவலகங்களில் இபிஎஸ் படங்கள் எதுவும் இதுவரை அக்கற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிகழ்வு
மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் அப்புறப்படுத்தியிருப்பது இரு தரப்பினர் இடையே மேலும் கசப்புணர்வை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இதனிடையே ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவில் கிளைமேக்ஸ் காட்சி அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.