இந்த 2 பேருக்காக போராடும் ஓபிஎஸ்.. அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிப்பதில் இதனால்தான் தாமதம்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் இதுவரை அ.தி.மு.க, காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் ராஜ்யசபா சீட் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படாததாலேயே வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறார்.
தென் தமிழகத்தில் தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு கட்டாயம் எம்.பி சீட் வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் தெரிவிக்காததால் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
யார்?" title="ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது- அதிமுக வேட்பாளர்கள்யார்?" />ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது- அதிமுக வேட்பாளர்கள்யார்?

ராஜ்யசபா தேர்தல்
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உளள 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து
தமிழகத்தில், 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடையும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 6 இடங்களில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு அடிப்படையில் திமுக 4, அதிமுக 2 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.
தி.மு.க சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இன்னொரு சீட் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸில்
காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ள 1 சீட்டிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ப.சிதம்பரமே இந்த ரேஸில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள காங்கிரஸ் மற்றும், அ.தி.மு.க கட்சிகளின் ராஜ்யசபா வேட்பாளர்கள் விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அதிமுக
அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராஜ்யசபாவுக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அக்கட்சியில் நிலவும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பு மோதலால் அவருக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செம்மலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் சாய்ஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோகுல இந்திரா, பொன்னையன் உள்ளிட்டோரும் கடுமையாக மூவ் செய்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.

ஆளுக்கு ஒன்று
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருக்கும் நிலையில் இரண்டு எம்.பி சீட்களுமே அவரது ஆதரவாளர்களுக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பின் எதிர்ப்பால் இப்போது ஆளுக்கு ஒன்று என பிரித்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தனது பலத்தை நிறுவுவதற்கு இதைவிட்டால் வேறு வாய்ப்பில்லை எனக் கணக்குப் போட்டுள்ளார். எடப்பாடியின் ஆதிக்கத்தை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.

தென் தமிழகம்
இதனால் தென் தமிழகத்தில் ஒருவருக்கு கட்டாயம் சீட் கொடுக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார். ஆனால், அப்படியென்றால் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரும், ஐ.டி.விங் செயலாளருமான் ராஜ் சத்யனுக்கு கொடுக்கலாமா என ஆரம்பித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ராஜன் செல்லப்பா தரப்பினருக்கும் நல்ல உறவு இல்லாததால் இதை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
தென் தமிழகத்தில் நான் சொல்பவருக்கு சீட் கொடுக்க வேண்டும். அவர்கள் என்னை நம்பி கட்சியில் இருப்பவர்கள். அவர்களின் நம்பிக்கையைக் குலைக்க முடியாது. உங்கள் இஷ்டப்படிதான் கட்சி நடக்கும் என்றால் நடத்திக் கொள்ளுங்கள் எனக் கொஞ்சம் காட்டமாகவே பேசியுள்ளாராம் ஓ.பி.எஸ்.

ஓபிஎஸ் விருப்பம்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமியின் மனைவி கிருத்திகா முனியசாமி அல்லது திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்பது விருப்பமாம்.
இவர்கள் இருவரில் கிருத்திகா முனியசாமி எம்.பி என பேச்சு கிளம்பியதுமே முன்னாள் எம்.எல்.ஏ சதன் பிரபாகர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூசகமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் கட்சிக்குள் சலசலப்பு நிலவுகிறது.

இன்று அறிவிப்பு
ஜெயலலிதா இருக்கும்போது வேட்பாளர்கள் தேர்வில் அதிரடியாகச் செயல்படுவார். அடிமட்டத் தொண்டர்களுக்கு திடீர் வாய்ப்புகள் வழங்கப்படும். கட்சிகளில் முதலாவதாகவும் வேட்பாளரை அறிவிப்பார். ஆனால் இப்போது வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாதது அதிமுக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இரு தலைமையும் மோதல் போக்கை கைவிட்டு ஒரு சுமூகமான முடிவுக்கு வரவேண்டும் என்பதே அக்கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. எம்.பி சீட் பேச்சுவார்த்தை விரைவில் முடிந்து இன்றோ, நாளையோ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்கிறது ராயப்பேட்டை வட்டாரம்.