ஜெயக்குமார் ஆதரவாளரை ரத்தம் வர தாக்கிய சம்பவம்.. ஓபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளி மீது வழக்குப்பதிவு!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளில் ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெயக்குமாரின் ஆதரவாளரை தாக்கியதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈனபிறவி..அதிமுக உங்க அப்பன் வீட்டு சொத்தா? முட்டிபோட்டு முதல்வரான எடப்பாடி! போஸ்டரால் பரபர பரமக்குடி

அதிமுக தலைமை அலுவலகத்தில்
அதிமுகவில் நிலவி வரும் கடுமையான குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த 18ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதையொட்டி, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகளவில் அங்கு திரண்டிருந்தனர்.

ரத்தக் காயம்
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கொந்தளிப்பில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஜெயக்குமார் வந்தபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஜெயக்குமார் ஆதரவாளரான பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து (59) என்பவரை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சிலர், நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா எனக் கேட்டு தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மாரிமுத்து ரத்தக் காயமடைந்தார்.

புகார்
இதையடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மாரிமுத்து. அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முடித்து கடந்த 25ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையம் வந்த மாரிமுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தார். மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
அதன்படி, அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக கூடி கலகம் செய்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளிம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.