அதிமுக பொதுக்குழுவில் அவமானம்- தொண்டர்களிடம் நீதி கேட்டு ஓபிஎஸ் சுற்று பயணம்- இன்று அறிவிப்பு?
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் தாம் அவமானப்படுத்தப்பட்டதற்கு தொண்டர்களிடம் நீதி கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் கடந்த 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற இப்பொதுக் குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றவும் ஒப்புதல் தரப்படவில்லை.
விரைவில் அதிமுக பொதுச் செயலாளராவார் ஓபிஎஸ்.. தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம்.. கோவை செல்வராஜ்

ஓபிஎஸ்-க்கு எதிர்ப்பு
அத்துடன் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் உருண்டைகள் வீசப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வேனின் டயரும் பஞ்சராக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெல்லி டூ சென்னை
இந்நிலையில் டெல்லி சென்ற ஓபிஎஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு, வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டும் அம்முயற்சி பலன் தரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நேற்று இரவு சென்னை திரும்பிய ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஓபிஎஸ் பயணம்
இதனைத் தொடர்ந்து தாம் பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்டதற்கு நீதி கேட்டும், அதிமுகவை ஒற்றைத் தலைமை மூலம் ஈபிஎஸ் கைப்பற்றுவதைத் தடுக்கவும் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக தொண்டர்களிடம் நீதி கேட்கும் இந்த பயணம் மூலம் தமது பலத்தை நிரூபிக்கவும் ஓபிஎஸ் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

சசிகலா, ஓபிஎஸ் பயணம்
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் அதிகரித்துள்ள, அக்கட்சியே இரண்டாக பிளவுபடும் நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் தாமே என உரிமை கோரும் சசிகலா இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். புரட்சி பயணம் என்ற பெயரில் சசிகலா இன்று பிற்பகல் முதல் பயணத்தை தொடங்கும் நிலையில் ஓபிஎஸ்ஸும் சுற்றுப் பயணம் செல்வதாக அறிவிக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.