மலைபோல் நம்பினேனே.. ஆனால்? தாமரை கட்சியின் செயலால் புலம்பும் தர்மயுத்த தலைவன்
சென்னை: அதிமுக தலைமையை தன் வசப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்துவரும் சூழலில், அண்மை கால பாஜகவின் நடவடிக்கைகளை கண்டு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது.
சின்னம்மா சின்னம்மா என்று 2 மாதங்களாக சசிகலா தலைமையின் சொல்படி நடந்துவந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென வீருகொண்டு எழுந்துவந்து ஜெயலலிதா சமாதியில் உதிர்த்த வார்த்தைகளும் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அதிமுக மட்டுமின்றி தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டிப்போட்டது.
பிளான் பி.. பொதுக்குழு திட்டத்தில் அதிரடி மாற்றம்? ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?- எடப்பாடி டீம் பரபர!

ஓபிஎஸ் டீலிங்
சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. 6 மாதங்கள் நீண்ட இந்த மோதலின் முடிவில் கட்சி உங்களுக்கு ஆட்சி எங்களுக்கு என்ற டீலிங் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிடித்துவிட ஒரு வழியாக டெல்லியின் தலையீட்டால் தர்மயுத்தத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றுசேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸும் நியமிக்கப்பட்டனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
2021 தேர்தலின்போது மோதல் வெடித்தாலும் எடப்பாடியே முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலில் தோற்ற பிறகு எதிர்க்கட்சித் தலைவர் யார் என இருவருக்கும் போட்டி தலைதூக்கியது. இதிலும் எடப்பாடி கை ஓங்க வழக்கம்போல் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவுமே தொடர்ந்தார். ஆனால், இ.பி.எஸ். கையே கட்சியில் ஓங்கி இருந்தது.

ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் கடந்த மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடர்பான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சு எழுந்துது கைகலப்பு வரை சென்று மோதல் உச்சமடைய, பொதுக்குழுவே வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்த 26 ஆம் தேதி வெளியான தீர்ப்பில் வழக்கம்போல் தோல்வியே விடையாக கிடைக்க மேல்முறையீடு செய்த புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு தீர்ப்பு பெற்றதால் பொதுக்குழுவையே ஒத்திவைத்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

அடுத்த பொதுக்குழு
மீண்டும் 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்துவிட்டு வானகரம் பொதுக்குழு முடிந்ததிலிருந்து இன்று வரை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு இடையே மோதல் வலுத்து வருகின்றன. பொதுக்குழு முடிந்த கையோடு டெல்லி சென்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன் பின்னர் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க பல முறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லியை நம்பிய ஓபிஎஸ்
இந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் துவண்டுவிடாமல் இருக்க டெல்லியை கைகாட்டி ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் கொடுத்து வந்ததாக பேச்சுக்கள் அடிபட்டன. "பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் கேட்டுகொண்டதாலேயே இரட்டைத் தலைமைக்கு ஒப்புக்கொண்டேன். அவர்கள் கைவிட மாட்டார்கள்" என்று தனது ஆதரவார்களிடம் அவர் கூறி வந்தாராம்.

காக்க வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் நேற்று பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முன்னுரிமை அளித்த பாஜக, அதன் பின்னர் வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காமல் அவருக்கு முன்பாக அன்புமணி ராமதாஸை மேடைக்கு அழைத்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாஜக தலைமையும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே ஆதரவாக இருப்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.