சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிசி பிரிவு இடஒதுக்கீடு... மேல்முறையீடு கூடாது... ராமதாஸ் கோரிக்கை!!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு 3 மாதம் வரை காத்திருக்காமல் உடனடியாக தமிழக அரசுடன் கலந்து பேசி குழுவை அமைக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

OBC Reservation: Central government should not appeal says PMK founder Ramadoss

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீட்டின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சமூகநீதிக்கான பா.ம.கவின் சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போது, அதில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்தும், அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தார்.

ஓபிசி இட ஒதுக்கீடு.. தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. ம.நீ.ம கமல்ஹாசன் வேண்டுகோள்! ஓபிசி இட ஒதுக்கீடு.. தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. ம.நீ.ம கமல்ஹாசன் வேண்டுகோள்!

அதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற கட்சிகள் 50% இட ஒதுக்கீடு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், அனைத்து தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ''மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம்'' என்று ஆணையிட்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மூன்று மாதங்களுக்குள் அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நடப்பாண்டில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டத்தின்படியே அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க முடியும். அதன்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடியும். சட்டரீதியிலான இந்த உண்மை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகத் தெரியும் என்பதால் தான் அந்தக் கோரிக்கையுடன் முதலில் உச்சநீதிமன்றத்தையும், பின்னர் உயர்நீதிமன்றத்தையும் அணுகியது.

தமிழக அரசும், பிற கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தால், ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி உடனடியாக 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அந்த இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால், இப்போது தமிழக அரசும், பிற கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்ததால் இட ஒதுக்கீடு கிடைப்பது குறைந்தது 3 மாதங்களாவது தாமதம் ஆகும். அவ்வாறின்றி உடனடியாக இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, மத்திய அரசு 3 மாதம் வரை காத்திருக்காமல் உடனடியாக தமிழக அரசுடன் கலந்து பேசி குழுவை அமைக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது

இவ்வாறு பாமக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
OBC Reservation: Central government should not appeal says PMK founder Ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X