தமிழகத்தில் பரவியது புது வகை கொரோனா.. ஒருவருக்கு பாதிப்பு உறுதி.. ஆபத்தா? மா.சுப்ரமணியன் விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் BA.4 கொரோனா வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். புதிய வகை கொரோனா அதிகம் பரவ வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகைப் புரட்டிப் போட்டது இந்த ஒற்றை வார்த்தை தான். வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை கொரோனாவால் அனைத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
மற்றொரு கொரோனா அலையை ஏற்படுத்த புதிய வகை கொரோனா வைரஸ் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள தென்னாப்பிரிக்க ஆய்வாளர்கள், தற்போது பரவும் BA.4 மற்றும் BA.5 ஆகிய உருமாறிய கொரோனா வகைகளே கூட அடுத்த அலை ஏற்படக் காரணமாக அமைய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். BA.4 மற்றும் BA.5 என்பது 3ஆவது கொரோனா அலை ஏற்படக் காரணமாக அமைந்த உருமாறிய ஓமிக்ரான் கொரோனாவின் உட்பிரிவாகும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் சூரியன்...தண்ணியை குறைத்து தண்ணீரை அதிகமாக குடியுங்கள் - மா.சுப்ரமணியன் அட்வைஸ்

இந்தியாவில் BA4 வைரஸ்
உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனாவான BA4 வகை வைரஸ் இந்தியாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஐதராபாத் திரும்பிய ஒருவருக்கு புதிய ஒமிக்ரான் தொற்று கண்டறிப்பட்டது. மரபணு கண்காணிப்பு திட்டத்தின் மூலம் கொரோனா வைரஸின் BA.4 வகை கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு ஹைதராபாத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒமிக்ரான் BA 4
இதுபற்றி இந்திய சார்ஸ்-கோவி-2 மரபியல் கூட்டமைப்பு உறுதி செய்து வெளியிட்டுள்ள செய்தியில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்த நபர் ஒருவருக்கு இந்த பிஏ.4 வகை கொரோனாவானது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு அறிகுறிகள் இல்லை. அவரிடம் இருந்து கடந்த 9ந்தேதி மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறியும் பணி முன்பே தொடங்கி விட்டது என தெரிவித்து உள்ளது. இந்த புதிய வகை கொரோனாவை அடையாளம் காணும் பணியும் மரபணு ஆய்வகங்களில் நடந்து வருகின்றன. இதுபற்றி INSACOG அமைப்பு வருகிற திங்கட்கிழமை மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிடும்.

மா.சுப்ரமணியன் பேட்டி
இதனிடையே தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் BA4 பரவியது கண்டறியப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். அந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டது இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. இருப்பினும் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் எந்த மாதிரியான கொரோனா பாதிப்பு என்பதை ஆராய மரபனு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்படுகிறது.

நாவலூரில் பிஏ 4 வைரஸ் பாதிப்பு
நாவலூரில் தாய், மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இது எந்த வகையான கொரோனா தொற்று என மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்தனர். அதில் தாய்க்கு பிஏ 2 வகை ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும், மகளுக்கு பிஏ 4 வகை ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உருமாறிய ஒமிக்ரான்
ஒமிக்ரான் தொற்றை பொறுத்தவரை ஏழு வகையாக உருமாறியுள்ளது. இதில் பிஏ 4 வகை என்பது இந்தியாவில் வேறெங்கும் பதிவாகவில்லை. மற்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு இருக்கிறதா என்பதை ஒன்றிய அரசு தான் உறுதி செய்ய வேண்டும். தொற்று பாதிப்பு உறுதியான தாய், மகள் இருவருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாக எந்த பயண வரலாறும் இல்லை. இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை, நலமுடன் உள்ளனர். தற்போது இருவருக்கும் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது.

அறிகுறிகள்
இந்த வகையான தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும், தொண்டை வலி, சளி, காய்ச்சல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலேயே தாக்கம் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றன. அவர்களுக்கு பாதிப்பு இல்லை. எனவே உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.