"வெடிகுண்டு வைச்சு இருக்கேன்!" போதையில் முதல்வர் வீட்டிற்கே வெடிகுண்டு மிரட்டல்.. தூக்கிய போலீசார்
சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் உள்ள முன்னணி பிரபலங்கள் வீட்டிற்குப் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இதில் சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்யும் போலீசார் சில சமயங்களில் கைது நடவடிக்கை எடுக்கிறார்கள். சில சமயம் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்கள்.

இதனிடையே நேற்று நள்ளிரவு நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதையடுத்து உடனடியாக அலர்ட் ஆன போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் முதல்வர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டலும் போலி எனத் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் என்பது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கிய ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, இதேபோல நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் கஞ்சா போதையில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துக் குறிப்பிடத்தக்கது.