• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு!

|

சென்னை: வாலிப, வயோதிக அன்பர்களே… வேலைக்கு போகும் அம்மணிகளே.. உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி, ஒரு துக்கமான செய்தி. உங்களில் பலருக்கு கூடிய சீக்கிரமே வேலை பறிபோகப் போகிறது. உங்களில் சிலருக்கு இன்னும் இன்னும் ஊதியமும், பதவி உயர்வும் கிடைக்கப் போகிறது. நீங்கள் பலிகடா ஆகப்போகும் பலரில் ஒருவரா, முடிசூடி மகிழப் போகும் சிலரில் ஒருவரா என்பதை இதைப் படித்த பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இப்போது உலகமே நம் செல்போனில் அடங்கிவிட்டது. சுமாரா படிக்கிற நம்ம பசங்களுக்கு உள்ளூர் கணக்கு வாத்தியார்தான் வீட்டுக்கு வந்து பாடம் எடுக்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. இப்போது கம்ப்யூட்டரில் உலகிலேயே சிறந்த கணக்கு வாத்தியார்கள் ஆன்லைனில் பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். உள்ளூர் டாக்டரிடம் போய்விட்டு வந்த கையுடன், மெடிக்கல் ரிப்போர்ட்களை வைத்துக்கொண்டு லண்டனில் உள்ள நிபுணரை தொடர்புகொண்டு செகண்ட் ஒபீனியன் வாங்கி விட முடிகிறது. இதெல்லாம் ஒரு சில உதாரணங்கள்தான்.

only deep work will help you in future

இதன் மூலம் நாம் சமூகத்துக்கு சொல்ல வர்ர விஷயம் என்னன்னா.. எங்க ஊர்ல நான்தான் ஆல் இன் அழகுராஜா மெக்கானிக் என்று இனிமேல் நீங்க கெத்தா சுத்திக்கொண்டிருக்க முடியாது. உள்ளூர் மெக்கானிக்கோடு போட்டி போட்ட காலம் மலையேறி விட்டது. இனி நீங்கள் உலக அளவில் சிறந்த மெக்கானிக்காக இருந்தால்தான் உங்களுக்கு கிராக்கி இருக்கும். சப்ளை, டிமாண்ட் ஆகிய இரண்டுமே இப்போது உலகமயமாகிவிட்டது.

சரி, பயமுறுத்துனது போதும். நாங்க இப்போ என்ன செய்யணும் என்று கேட்கிறீர்களா? சிம்பிள், எதை செய்தாலும் அதில் நிபுணத்துவம் பெற முயற்சி செய்யுங்கள். அதாவது பல விஷயங்களை கையாளத் தெரிந்த ஆட்களுக்கு முன்பு அலுவலகங்களில் கிராக்கி இருந்தது.

இது இப்போது குறைய ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் தொழில்துறை நிபுணர்கள். காரணம், சின்னச் சின்னதாய் பல விஷயங்கள் செய்வதற்கு இனி மனிதர்கள் தேவையில்லை. மெஷின்கள் போதும் என்ற நிலை வேகமாக உருவாகி வருகிறது. அதாவது மாதக் கடைசியிலோ, வருடக் கடைசியிலோ ஒரு அக்கவுண்டண்ட் இரவு பகலாக கண்விழித்து சரி பார்த்துக் கொடுத்த கம்பெனி வரவு, செலவுகளை இப்போது சாஃப்ட்வேர்கள் சில பல கிளிக்குகளில் முடித்து விடுகின்றன. அப்புறம் அங்கு அந்த அக்கவுண்டண்டுக்கு என்ன வேலை? நூறு பேர் செய்யும் வேலையை மேற்பார்வை பார்க்க 10 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இனி அந்த நூறு பேரின் வேலையையும் கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்தால் அது தரத்தை மதிப்பிட்டு மார்க் போட்டுவிடும். அப்புறம் அந்த 10 மேற்பார்வையாளர்களுக்கு என்ன அவசியம்?

only deep work will help you in future

இதையே இன்னொரு கோணத்தில் பாருங்கள். எத்தனை மெஷின்கள் வந்தாலும் ஒரு ஸ்மார்ட்டான மனித மூளைக்கு இணையாக முடியாது. நீங்கள் உங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தால், இனி உங்கள் சேவையை உங்கள் நிறுவனத்தை தாண்டி உலகம் முழுவதற்கும் அளிக்க இதே தொழில்நுட்பம் கைகொடுக்கும். ஒரு சிறந்த டயட்டீஷியன் இனி ஆன்லைனில் உலகம் முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். இங்குதான் நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து ஆட்கள் உங்கள் சேவையை நாடி வர வேண்டும் என்றால், அந்த அளவிற்கு நீங்கள் தரத்தில் தன்னிகரற்றவராக இருக்க வேண்டும்.

நம்ம ஊர் பாஷையில் சொல்வதானால், இனி அகல உழுது பலன் இல்லை, ஆழ உழுது பழக வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் Deep Work என்கிறார்கள். நீங்கள் செய்யும் வேலையில் மூழ்கிவிட வேண்டுமாம். வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என பல வகைகளிலும் நமது கவனம் சிதறிவிடுவதால், ஒன்றில் மூழ்கி முழுமனதையும் அர்ப்பணித்து வேலை செய்வது என்ற பழக்கமே இப்போதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டதாம். Calculator வந்துவிட்டதால் வாய்ப்பாடுகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, Google வந்துவிட்டதால் எந்த தகவலையுமே ஞாபகத்தில் வைத்திருக்கத் தேவையில்லை என்றாகிவிட்டது. இதனால் மூளையின் ஞாபக சக்தியும், சிந்திக்கும் ஆற்றலும் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுகிறதாம். பின்னர், திறன் குறைவான மூளையில் இருந்து எப்படி அற்புதமான யோசனைகள் தோன்ற முடியும்?

only deep work will help you in future

மனிதர்கள் தனியாக, மனதை ஒருமுகப்படுத்தி வேலை செய்யும்போதுதான் அவர்களின் மூளை கூர்மையாக வேலை செய்யுமாம். பிரபல ஆங்கில நூலாசிரியர் மார்க் ட்வெயின், தனது உலகப்புகழ் பெற்ற The Adventures of Tom Sawyer புத்தகத்தை தனது நியூயார்க் பண்ணை வீட்டில் இருந்தபோதுதான் எழுதினாராம். அவரது பண்ணை வீட்டில் பிரதான வீட்டில் இருந்து தூரத்தில் ஒரு சிறிய ஷெட் போட்டு வைத்திருந்தாராம். அங்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமர்ந்து தான் அந்த அற்புதமான நூலை எழுதினாராம். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டால், அவர் வீட்டில் இருந்து கொம்பு போன்ற ஒரு வாத்தியத்தை முழங்குவார்களாம். அந்த சத்தம் கேட்டதும் தான் மனுஷன் டாம்சாயரின் உலகில் இருந்து வெளியில் வருவாராம். இந்த அர்ப்பணிப்புதான் அந்த நூலை காலம் கடந்தும் பேசப்படும் கிளாசிக்காக மாற்றியிருக்கிறது.

யாரோ புத்தக ஆசிரியர் கதை எல்லாம் சொல்லாதீங்க பாஸ், நாங்க டெக்கி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அப்டேட்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லும் ஐடி இளைஞர்களுக்காக இன்னொரு உதாரணம். உங்கள் துறையின் பிதாமகன், மைக்ரோசாஃப்ட் ஓனர் பில் கேட்ஸ், ஆண்டுக்கு இரண்டு முறை தனியாக ஏரிக்கரையோரமாக ஒரு காட்டேஜ் பக்கம் போய்விடுவாராம். இதுக்கு அவர் “Think Weeks” என்று பெயர் வைத்திருக்கிறார். இப்படி காட்டேஜ் பக்கம் போய்விட்டால், அப்புறம் அவருக்கும், வெளி உலகிற்கும் எந்த தொடர்பும் இருக்காதாம். புத்தகம் படிப்பது, மனதில் தோன்றும் ஐடியாக்களை நோட்டில் எழுதி வைப்பதுதான் அந்த சமயத்தில் அவர் செய்யும் வேலைகள். அவரின் மிகச் சிறந்த யோசனைகள் எல்லாம் இதுபோன்ற சமயத்தில்தான் தோன்றின என்கிறார்கள்.

only deep work will help you in future

நீங்கள் படைப்பாளி என்றால் உங்களின் ஆகச்சிறந்த ஒரு படைப்பு போதும், உங்களை புகழின் உச்சிக்கு இட்டுச் செல்ல. ஆயிரம் சுமாரான படைப்புகள் ஒரு அற்புதமான படைப்புக்கு அருகில் கூட வர முடியாது. நம்ம திருவள்ளுவரை எடுத்துக்கங்க. திருக்குறள் என்ற ஒரே ஒரு நூல். அதில் உள்ள ஆழமான, அறிவுப்பூர்வமான, அனைவருக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளுக்காக உலகப் பொதுமறையாக கொண்டாடப் படுகிறது. அந்த காலத்திலேயே ட்விட்டர் மாதிரி சுருக்கமா நறுக்குனு எழுதினதால தான், தலை இன்னைக்கும் கன்னியாகுமரியில தலைநிமிர்ந்து மெகா சைஸ்ல நிக்கிறாரு.

ஆகவே, நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும், அதில் இன்னும் இன்னும் ஆழமாக செல்ல ஆரம்பியுங்கள். தரத்தில் யாரும் உங்களுக்கு நிகராக முடியாது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே இருந்தால், இனி வரும் காலம் உங்களுக்கு பொற்காலம்தான் பாஸ். ஆபிசுக்கு வந்தோம் அன்னைக்கு கொடுத்த வேலையை செஞ்சிட்டு, நடையை கட்டினோம் என்றால் சீக்கிரமாக ஒரேயடியாக நடையைக் கட்ட வேண்டி வந்துவிடும். பார்த்து சூதானமா நடந்துக்கங்க.

-கௌதம்

English summary
In future only Deepworks will be counted and un skilled youths may lose their future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X