அதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்
சென்னை: அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே என்று சசிகலாவின் விடுதலைக்கு ஆதரவாக அவரை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய அதிமுக நிர்வாகியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நீக்கி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகியுள்ளார். சசிகலா சிறைக்கு சென்றவுடன் அவருடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அதிமுக தலைமை அறிவித்தது. இதனையடுத்து சசிகலாவிற்கு ஆதரவாக பேச பலரும் தயக்கம் காட்டினர்.

சசிகலாவிற்கு ஆதரவானவர்கள் டிடிவி தினகரனுடன் இணைந்து அரசியல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் சசிகலாவிற்கு ஆதரவாக பேசிய கோகுல இந்திராவை உடனடியாகக் கண்டித்தார் அமைச்சர் ஜெயக்குமார். சசிகலா வந்தாலும் எந்த கவலையும் இல்லை அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா சசிகலா விடுதலையையொட்டி, "அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வாழ்க.. வாழ்க" என்று போஸ்டர் அடித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணிய ராஜா, திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று கூறியுள்ளனர்.
நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி
இதன்மூலம் அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவிற்கு ஆதரவாக பேசினாலோ, செயல்பட்டாலோ உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர். அதிமுகவில் இருக்கும் பலரும் சசிகலாவின் வருகையை ஆவலோடு பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
சசிகலா ரிலீஸ் ஆன உடனேயே கட்சியை மீட்போம் என்று பேட்டி கொடுத்துள்ளார் டிடிவி தினகரன். அதிமுக பொதுச்செயலாளரே சசிகலாவை வாழ்த்தி போஸ்டர் அடித்த நிர்வாகியை உடனடியாக கட்சியை விட்டு நீக்கி, யாராக இருந்தாலும் கட்சியில் நீடிக்க முடியாது என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர் ஓபிஎஸ்,இபிஎஸ். எந்த சூழ்நிலையிலும் சசிகலாவிற்கு கட்சிக்குள் இடமில்லை என்று தொண்டர்களுக்கு உணர்த்தியுள்ளனர்.