ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இப்படி செய்யலாமா.. அப்புறம் எப்படி நம்ப முடியும்.. கோகுல இந்திரா சுளீர்!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறப்பாக ஆட்சி நடத்துவதாக கூறும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது சந்தித்தது கூட இல்லை என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video - Watch Now
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே கோரிக்கை ஒற்றைத் தலைமை தான் என்று கூறியதோடு, மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசிக் கொண்டிருக்கும் போது, சட்டவிதிகளுக்கு புறம்பாக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
அன்று இந்திரா முன் பேசிய அதே வசனம்.. இன்று மோடி முன் ஒலித்தது! ஸ்டாலின் மீது காங்கிரஸ் கோபம்?

கோகுல இந்திரா குற்றச்சாட்டு
அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறப்பாக ஆட்சி நடத்துவதாக பாராட்டு தெரிவிக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை கூட அவர் சந்தித்து கோரிக்கைகள் வைத்தது இல்லை.

ஒற்றைத் தலைமை தேவை
அதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் ஓபிஎஸ் திமுக அரசை பாராட்டுவதை தொண்டர்கள் விரும்பவில்லை. அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மீது தாக்குதல் சம்பவங்கள் நடத்தியது திமுக. அவர்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தியதும் திமுக தான். அப்படியான திமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், களத்தில் நின்று எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு இரட்டைத் தலைமை சரியாக இல்லை. ஒற்றைத் தலைமை தான் தேவையாக உள்ளது. ஓபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அன்றும், இன்றும்
ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, ஓபிஎஸ்-ஐ முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். அதற்கு, சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களோடும், மு.க.ஸ்டாலினோடும் சிரித்துக் கொண்டு இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி, சில மாதங்களுக்கு பின் மீண்டும் அதிமுகவோடு ஐக்கியமானார்.

அஸ்தமனமாகிறதா ஓபிஎஸ் அரசியல்
இப்படி திமுகவோடு நெருங்கிய உறவு வைத்துள்ளார் என்று அதிமுகவினரால் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஓபிஎஸ் அதிமுகவினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, பொதுக்குழு கூட்டத்திற்குள் வரவே ஓபிஎஸ்-ற்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கட்சி விதிகளை மீறி பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றம் சென்றது, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விட்டுக்கொடுக்காதது, திமுகவோடு நெருக்கம் என பல்வேறு காரணங்களுக்காக அதிமுகவினரால் ஓபிஎஸ் நிராகாரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன்மூலம் தமிழக அரசியலில், ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.