220-வது முறையாக வேட்பு மனு தாக்கல்.. தோல்விகள் பரிசாக கிடைத்தும்.. அசராத தேர்தல் மன்னன் பத்மராஜன்..!
சென்னை: தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் பத்மராஜன் என்பவர் 220-வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதுவரை ரூ.50 லட்சத்திற்கும் மேல் வைப்புத் தொகை மற்றும் தேர்தல் பணிகளுக்காக அவர் செலவிட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்விகளை மட்டுமே ருசித்து வரும் அவர், இதுவரை ஒருமுறை கூட சலிப்படையாமல் வேட்பு மனுதாக்கல் செய்வது கவனிக்கத்தக்கது.
206-வது முறையாக தேர்தலில் போட்டி...! அசராத தேர்தல் மன்னன் பத்மராஜன்

சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் டயர்களை ரீ பட்டன் செய்யும் தொழில் செய்து வருகிறார். அரசியலில் இவருக்கு ஆர்வம் இருந்தாலும் இதுவரை எந்தவொரு கட்சியிலும் அவர் இணைந்து செயல்பட்டதில்லை. தனிக்காட்டு ராஜாவாக தானே ராஜா தானே மந்திரி என்கிற வகையில், சுயேச்சையாகவே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். கடந்த 1988-ம் ஆண்டு தொடங்கிய அவரது தேர்தல் பயணம் இன்று வரை தொடர்கிறது.

33 ஆண்டுகள்
இந்த இடைப்பட்ட 33 ஆண்டுகாலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தொடங்கி எம்.எல்.ஏ. , எம்.பி., ராஜ்யசபா எம்.பி., குடியரசுத தலைவர் தேர்தல் வரை அனைத்துப் பதவிகளுக்கான தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இவர் செலுத்திய வைப்புத் தொகை மட்டுமே ரூ.50 லட்சத்தை கடக்கும். கே.ஆர். நாராயாணன் முதல் ராம்நாத் கோவிந்த் வரை இதுவரை 5 குடியரசுத் தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டவர் இவர்.

தேசியத் தலைவர்கள்
இதன் மூலம் தேசியத் தலைவர்கள் பலரை புருவம் உயர்த்த வைத்ததோடு அவர்களை சிரிக்கவும் வைத்திருக்கிறார். வெற்றிபெற மாட்டோம் எனத் தெரிந்தும் தேர்தலில் போட்டியிட்டு கையில் வைத்திருக்கும் காசை கரைக்கும் இவர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்டோபர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

புதுச்சேரி
புதுச்சேரியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் இவர், லிம்கா மற்றும் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார். பார்ப்பதற்கு வேடிக்கையானவராக இருந்தாலும் கூட இவர் போன்ற நபர்கள் மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இக்கால இளம் தலைமுறையினருக்கு ஏற்படுகிறது. ஒரு தோல்விக்கே துண்டைக் காணோம் துணியை காணோம் என அரசியலில் இருந்து ஓடி ஒளிபவர்களுக்கு மத்தியில் தேர்தல் மன்னன் பத்மராஜனின் இந்த விடாமுயற்சி பலரையும் சிந்திக்க வைக்கிறது.