ஸ்டாலின் பெயரை சொன்ன முருகன்.. அடுத்த வார்த்தை சொல்ல முடியாத அளவு எழுந்த கோஷம்! வியந்து பார்த்த மோடி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வில் முதலமைச்சரின் பெயரை சொன்னவுடன் கரகோஷங்களால் அரங்கம் நிறைந்ததால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.
அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பிரதமர் மோடி வருகை
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காவி உடை அணிந்த கலைஞர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகலி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்றனர்.

எல்.முருகன் வரவேற்புரை
இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் எழுந்து நின்று தமிழ்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் வரவேற்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சொன்னபோது லேசான கரகோஷம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

ஸ்டாலின் பெயரை கேட்டவுடன்...
ஆளுநர் ஆர்.என்.ரவியை சாமானியர்களின் ஆளுநர் என எல்.முருகன் சொன்னபோது அங்கு ஓரளவுக்கு கை தட்டல் இருந்தது. அதன் பின்னர் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்களை வருக வருக என வரவேற்று..." என்று எல்.முருகன் சொல்லி முடிப்பதற்குள், அரங்கம் எங்கும் கரகோஷம் ஒலிக்கத் தொடங்கியது. எல்.முருகன் தனது வரவேற்புரையை தொடர முடியாத அளவுக்கு கரகோஷங்களை முதலமைச்சரின் பெயரை கேட்டவுடன் விழாவில் பங்கேற்றவர்கள் எழுப்பினர். இதனால், சிறிது நேரம் பேசாமல் அரங்கையே விழித்துப் பார்த்தார் எல்.முருகன். பல விநாடிகள் கழித்துதான் அடுத்த வார்த்தையை அவரால் பேச முடிந்தது. பிரதமர் மோடி இந்த நிகழ்வை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். பாகுபலி திரைப்படத்தில் பாகுபலி பாகுபலி என கோஷமிடும் மக்களை பார்த்தது போல இருந்தது என திமுகவினர் சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வை சிலாகித்து வருகிறார்கள்.