பிரதமர் முன் ”ஒன்றிய அரசு” என பலமுறை சொன்ன ஸ்டாலின்.. சொன்னபோதெல்லாம் அரங்கத்தில் ஆரவாரம், கோஷம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ஒன்றிய அரசு" என்று சொல்லும்போதெல்லாம் அரங்கமே கரகோஷங்களால் அதிர்ந்தது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.
ஸ்டாலின் பெயரை சொன்ன முருகன்.. அடுத்த வார்த்தை சொல்ல முடியாத அளவு எழுந்த கோஷம்! வியந்து பார்த்த மோடி
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பிரதமர் மோடி வருகை
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காவி உடை அணிந்த கலைஞர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகளி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்றனர்.

ஒன்றிய அரசு
இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது பல இடங்களில் "ஒன்றிய" என்ற வார்த்தையை அழுத்திச் சொல்லும்போதெல்லாம் அரங்கில் இருந்தவர்கள் ஆராவாரம் செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்" என்று சொல்லும்போதும் "ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.." என மு.க.ஸ்டாலின் பேசும்போதும் அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.

எல்.முருகன் வரவேற்புரை
முன்னதாக, வரவேற்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சொன்னபோது லேசான கரகோஷம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியை சாமானியர்களின் ஆளுநர் என எல்.முருகன் சொன்னபோது அங்கு யாரும் சத்தம் எழுப்பவில்லை. அதன் பின்னர் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்களை வருக வருக என வரவேற்று..." என்று எல்.முருகன் சொல்லி முடிப்பதற்குள், அரங்கம் எங்கும் கரகோஷம் ஒலிக்கத் தொடங்கியது. எல்.முருகன் தனது வரவேற்புரையை தொடர முடியாத அளவுக்கு கரகோஷங்களை முதலமைச்சரின் பெயரை கேட்டவுடன் விழாவில் பங்கேற்றவர்கள் எழுப்பினர். இதனால், சிறிது நேரம் பேசாமல் அரங்கையே விழித்துப் பார்த்தார் எல்.முருகன்.