செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. அபாயத்தை உணராமல் கரைகளில் செல்பி எடுத்த மக்கள்!.. விரட்டிய போலீஸ்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்தவுடன் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் செல்பி எடுத்ததை அடுத்து அவர்களை போலீஸார் விரட்டினர். நீர் திறப்பை பார்வையிட சாரை சாரையாக மக்கள் படையெடுத்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னைக்கு நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நிவர் புயலுக்கு முன்பே நீர் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நிவர் புயலால் நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21.55 அடியை தாண்டியது. இதன் முழு கொள்ளளவான 24 அடியை விரைவில் எட்டும் என்பதால் ஏரியைத் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

பொதுப் பணித் துறை
ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாலும் பொதுப் பணித் துறை அறிவிப்பாலும் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட ஏராளமான மக்கள் வந்தனர். இதனால் அங்கிருந்த போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர். எனினும் ஆபத்தை உணராமல் குழந்தை, குட்டிகளுடன் மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

மதகுகள்
இந்த நிலையில் நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டவுடன் மதகுகளில் அழகாக பாய்ந்தோடியது. ஏரிக்குள் அழுத்தத்தால் அழுந்திக் கொண்டிருந்த தண்ணீர் திறக்கப்பட்டவுடன் ரம்மியமாக பாய்ந்தது.

மக்கள் குவிப்பு
இந்த ஏரி திறப்பை லைவாக பார்வையிடவும் மக்கள் குவிந்தனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தும் பணியில் இருந்தனர். எனினும் போலீஸாரின் தடையை மீறி சைக்கிள் கேப்புகளில் எப்படியோ நுழைந்த மக்கள் செம்பரம்பாக்கம் வந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செல்பி
அனுமதியின்றி வந்ததோடு அங்கு நின்று கொண்டு செல்பி எடுத்த வண்ணம் இருந்தனர். இதுகுறித்து அங்கு வந்தவர்கள் கூறுகையில் 2015-க்கு பிறகு தற்போதுதான் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கிறார்கள். அதை பார்வையிட வந்தோம். இதெல்லாம் பார்ப்பது ஜாலியாக இருக்கிறது என்கிறார்கள். செம்பரம்பாக்கம் அருகே வசிப்பவர்கள் சில கரைகளில் இறங்கி ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீருடன் நின்று செல்பி எடுத்தனர். வீடியோ எடுத்தனர்.