சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 ஆண்டு கால தவறான சிறைவாசம் - பேரறிவாளனுக்கு உடனடி விடுதலை தருவதுதான் ஒரே நீதி!

Google Oneindia Tamil News

சென்னை: செய்யாத பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலை முயற்சிக் குற்றத்திற்காக 36 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சி வில்லியம்ஸ் 'இன்னொசன்ஸ் ப்ராஜக்ட்' என்ற (தவறாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும்) அமைப்பின் 20 ஆண்டு கால போராட்டத்தின் பலனாக கடந்த 2019 ஆண்டு விடுதலை பெற்றார். அரசின் பிரதிநிதியான மாவட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, லூசியானாவின் இழப்பீடு சட்டத்தின்படி வில்லியம்ஸுக்கு அதிகபட்சமாக $250,000 இழப்பீடாக வழங்கப்படுகிறது.

அண்மையில் அமெரிக்கா'ஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் போட்டியாளருக்கான ஆடிஷனில் வில்லியம்ஸ் கலந்து கொள்ள அவரது துயரக் கதையை உலகமறிந்தது. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டனை பெறும் எல்லோருமே குற்றவாளி அல்ல, நீதிமன்றத் தீர்ப்பும் பிழையானதாக மாறி ஒரு நிரபராதியின் வாழ்வையே அழிக்கக் கூடும் என்பதற்கான சமீபத்திய சிறந்த உதாரணம் இது.

Perarivalan Enters 30th Year of Imprisonment

சிறையின் இருளிலேயே செத்து மடிந்திருக்க வேண்டிய ஆர்ச்சி வில்லியம்ஸுக்கு மீட்பராகக் கிடைத்த 'இன்னொசன்ஸ் ப்ராஜக்ட்' அமைப்பைப் போல பேரறிவாளனுக்கு ஒரு நீதி அமைப்பு இங்கே கிடைக்கவில்லை. அதனால் தான், எதற்கென்றே தெரியாமல் வாங்கிக் கொடுத்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளும் திரித்து எழுதப்பட்ட அவரது வாக்குமூலமும் 29 ஆண்டுகளாக அவரை சிறையில் வதங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை தவறாக தண்டனை பெற்ற ஒரு நிரபராதி, நீதிக்கான சட்டப் போராட்டத்தை தானே நடத்திக் கொள்ளும் அவலச் சூழல் தான் இருக்கிறது. குறிப்பாக பொருளாதார பலமோ அதிகாரப் பின்னணியோ இல்லாத பின் தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள் குற்றச் சுழலில் சிக்கிக் கொண்டுவிட்டால் பொது மன்னிப்பிற்காக சாகிற வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த ஜூன் 11 அன்று முப்பதாவது ஆண்டு சிறைவாசத்தில் அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் எத்தனை காலத்திற்கு தன்னை மீட்க தானே போராடிக் கொண்டிருக்க வேண்டும் என தெரியவில்லை.

"பேரறிவாளன் விடுதலையில் மாநில அரசு சுதந்திரமாக முடிவெடுக்கலாம்" என உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து எழுவர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்து பரிந்துரையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் கடந்த 19 மாதங்கள் ஆளுநர் எந்த பதிலும் கூறாமல் கொடூர மவுனத்தைக் கடைபிடித்தார்.

பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல் நலன் குன்றிய நிலையில் அவரது தாய் அற்புதம்மாள் ஆளுநரின் மவுனத்தைக் கலைக்கும் வழி தெரியாது பரிதவித்து வந்தார். இந்த 19 மாதக் காத்திருப்பு இதுவரையிலான 29 ஆண்டு கால சிறைவாசத்தை விடவும் கொடுமையானதாக இருந்திருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விடுதலையைத் தவிர வேறு முடிவில்லை என காத்திருந்தவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில், தமிழக ஆளுநர் பதில் அளித்திருக்கிறார்.

Perarivalan Enters 30th Year of Imprisonment

அதாவது ராஜீவ் கொலை வழக்கில் பரந்துபட்ட சதியை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு (Multi Displinary Monitoring Agency- MDMA) அதன் அறிக்கையை சமர்ப்பித்தப் பிறகே, எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுப்பார் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த 20.03.2020 அன்று அறிவிக்க பேரறிவாளன் குடும்பத்தாரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே அது அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. நீதியை இழுத்தடிக்கும் இந்த செயல் நியாயமே இல்லாதது என எழுவர் விடுதலையை எதிர்நோக்கியிருக்கும் எல்லோருமே உணர்கிறார்கள்.

பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் அறிக்கை மீது ஆளுநருக்கு திடீரென அக்கறை வந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான். ராஜீவ் கொலை வழக்கை ஆழமாக கவனித்து வருகிறவர்களுக்கு இந்த பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிந்திருக்கும். ஏனெனில் தண்டிக்கப்பட்ட எழுவரை கடந்து இவ்வழக்கை உண்மையான 'பெரிய' குற்றவாளிகளிடம் நகர்த்திச் செல்ல பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவால் மட்டுமே முடியும். ஆனால் சுமார் 20 ஆண்டுகளாக இந்த குழு விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கடமையைச் செய்யவில்லை. இப்பின்னணியில், இக்குழுவின் அறிக்கை குறித்து, ஆளுநருக்கு இப்போது வந்திருக்கும் ஆர்வம், தன்னை நிரபராதி என நிரூபிக்க ஒவ்வொரு கணப் பொழுதும் போராடி வரும் பேரறிவாளனுக்கு வெகு முன்னரே வந்ததில் ஆச்சரியமில்லை.

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை "தடா" சிறப்பு நீதிமன்றத்திலும் பின்னர் 2015 இல் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இப்போது ஆளுநர் கேட்டிருக்கும் அதே பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை கேட்டு மனுத் தாக்கல் செய்தார் பேரறிவாளன். உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க மறுக்கவே உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதுவரை மூடிய உரைகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில், தடா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இந்த பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகள், அதன் பிறகுதான் நீதிபதிகளால் திறந்து பார்க்கப்பட்டன. பெரும்பாலும் வெற்று அறிக்கைகளாகவும் வெளிநாட்டு பயணங்களாகவுமே அவை இருந்தது கண்டு, நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஒரு முன்னாள் பிரதமரின் கொலை சதியை சிபிஐ கண்டறியும் லட்சணம் இதுதான் என அப்போது அம்பலப்பட்டது. சிபிஐ, ரா மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகளை உள்ளடக்கிய இந்த எம்டிஎம்ஏ அமைப்பு வெளிநாட்டு சதியை விசாரிக்கிறேன் பேர்வழி என்று மக்களின் வரிப்பணத்தை 20 ஆண்டுகளாக வீணடித்து வந்தது தான் மிச்சம். ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதிகளை அதிருப்திக்குள்ளாக்கிய அந்த அறிக்கையை பார்த்துவிட்டு தான் எழுவரின் விடுதலையில் முடிவெடுப்பேன் என ஆளுநர் சொல்வது துயரத்திலும் நகைப்பை வரவழைக்கிறது.

ஆளுநர் எம்.டி.எம்.ஏ அறிக்கையை கேட்டிருக்கும் இந்த சூழலில், 29 ஆண்டு காலமாக சிபிஐ உள்ளிட்ட இந்திய விசாரணை அமைப்புகள் இவ்வழக்கில் செய்த குளறுபடிகளையும் உண்மையானக் குற்றவாளிகள் பிடிபட்டுவிடாதவாறு வேண்டுமென்றே மறைக்கப்பட்ட முக்கியமான விஷயங்களையும் நினைவுபடுத்த அது வாய்ப்பேற்படுத்தித் தந்திருக்கிறது.

நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசியல் தலைவர்கள், தீவிரவாத அமைப்பினர், சர்வதேச வியாபாரிகள் என முக்கியமான நபர்கள் யாருமே கைது செய்யப்படாமல், அக்கொலையால் எந்த பெரிய அரசியல் லாபங்களையும் அடைய சாத்தியமற்ற சாமானியர்களுக்கு மரண தண்டனை விதித்ததில் தொடங்குகிறது இவ்வழக்கின் அத்தனை அநீதிகளும். வெளிநாட்டு சதியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை கொலை நடந்து முப்பதாண்டுகள் கழித்து ஆளுநர் கேட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கில் பரந்துபட்ட சதித் திட்டங்களை ஆய்வு செய்த ஜெயின் கமிஷன் அறிக்கையிலும் என்ன இருக்கிறது என்பது குறித்தும் யாராவது பேசினால் நன்றாக இருக்கும்.

ஏனெனில் கடந்த 07.03.1998 இல் 9 தொகுதிகளாக சமர்ப்பிக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை குறைந்தபட்சம் மூன்று முக்கியமான அம்சங்களில் கூடுதல் விசாரணையை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. சிபிஐ திட்டமிட்டு கோட்டைவிட்ட இந்த மூன்று அம்சங்களுமே உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றும் உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதை நீதியின் மேல் பிடிப்பு கொண்ட யாராலும் மறுக்க முடியாது. அவை:

1) ராஜீவ் காந்தி கொலையில் சாமியார் சந்திராசாமிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறியதோடு படுகொலை நடந்த நாளில் சந்திராசாமி எங்கே இருந்தார், அவர் யார் யாருடன் பேசினார் என்ற தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தொலைந்து போனதாகவும், வயர்லெஸ் போனில் அவர் யாருடன் பேசினார் என்ற விவரங்களும் இல்லை எனவும் ஜெயின் கமிஷன் குற்றஞ்சாட்டியது. சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்த சந்திராசாமியை சிபிஐ விசாரிக்க வேண்டுமென ஜெயின் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் 2017 இல் சந்திராசாமி இறக்கிற வரை அவரை விசாரணை வளையத்திற்குள் சிபிஐ கொண்டு வரவே இல்லை.

2) ஜெயின் கமிஷன் சந்தேகத்திற்கிடமான நபர்கள் என குறிப்பிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. வெளிநாட்டு சதி என்ற பரந்த நோக்கில் இந்த விசாரணையை நகரவிடாமல் இது தடுத்தது.

3) ராஜீவ் காந்தியை கொல்ல கொலையாளி தாணு அணிந்திருந்த பெல்ட் பாம் எங்கே, எப்படி, யாரால் தயாரிக்கப்பட்டது என சிபிஐ விசாரிக்கவே இல்லை., கொழும்புவை சேர்ந்த நிக்சன் (எ) சுரேன் சிபிஐயிடம் சேகர் என்பவர் தான் சென்னையில் வைத்து பெல்ட் பாமை தயாரித்ததாக வாக்குமூலம் அளித்திருந்த போதும் இது குறித்து சிபிஐ மற்றும் எஸ்ஐடி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்கிறது ஜெயின் கமிஷன் அறிக்கை. இலங்கை அரசின் பிடிக்குள் இருக்கும் நிக்சன் (எ) சுரேனை ஏன் எம்.டி.எம்.ஏ விசாரிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது. "பரந்துபட்ட சதி மீதான வெளிச்சம் பாயத்தக்க வகையில் வெடிகுண்டின் மூலம் மற்றும் அதன் தயாரிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. ஒருவேளை விசாரணை அவ்வாறு நடத்தப்பட்டிருந்தால் இந்த சதியில் ஈடுபட்ட மொத்த நபர்கள் பற்றிய விபரமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்"என நீதிபதி எம்.சி. ஜெயின் தனது அறிக்கையை நிறைவு செய்தார்.

Perarivalan Enters 30th Year of Imprisonment

வெடிகுண்டை தயாரித்தவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக 'எதற்கென்றே தெரியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்தவரை முதன்மை குற்றவாளியாக்குவது தான் இந்திய புலனாய்வுத் துறையின் நியாயமாக இருக்கிறது. பேரறிவாளனை 29 ஆண்டு காலம் சிறையில் தள்ளியது இரண்டு 9 வோல்ட் பேட்டரிகள் தான். வேறெந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் வெறும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை மட்டுமே வைத்து ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ கூறியது. இது குறித்து பேரறிவாளன் 14.08.1991 மற்றும் 15.08.1991 ஆகிய நாட்களில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகச் சொல்லித் தான் அவரை முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக்கி தண்டனை பெற்றுத் தந்தது சிபிஐ. "தனது ஒப்புதல் வாக்குமூலம் திரிக்கப்பட்ட ஒன்று'' என்பதை பேரறிவாளன் ஆரம்பம் முதலே கூறி வந்திருக்கிறார். பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் இது குறித்து அவர் புகார் அளித்த மனுக்கள் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் மத்திய புலனாய்வுத் துறையில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து குற்றம்சாட்டப்பட்ட 17 பேரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்த விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2013 அதிர்ச்சிகரமான ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை ஊடகங்களில் அளித்தார். அது, "பேரறிவாளனின் வாக்குமூலத்தை வரிக்கு வரி நான் பதிவு செய்யவில்லை. பேட்டரிகளை எதற்காக வாங்கிக் கொடுத்தேன் என தெரியாது; அது ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு தான் என்பதுவும் எனக்குத் தெரியாது" என்று அவர் சொன்னதை நான் பதிவு செய்யவில்லை என்று கூறினார். தனது வாக்குமூலத்தை பிரமானப் பத்திரமாக கடந்த 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்தார். காவல்துறையில் மிக உயரிய பதவியான டிஜிபி அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தான் தவறிழைத்துவிட்டதாக சொல்லி பிரமான பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வது இதற்கு முன்னர் நமது நீதி அமைப்பு கண்டிராத ஒன்று. ஆனால் அது தகுதியானத் தாக்கத்தை உண்டாக்கவில்லை. அதாவது அதன் பின்னரும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படவில்லை.

ராஜீவ் கொலையில் உள்ள சதிக் குற்றத்தை நிரூபிக்க சிபிஐ சமர்பித்த ஒரே ஆதாரம் வி.தியாகராஜன் தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்த 17 பேரின் ஒப்புதல் வாக்குமூலங்கள். அதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. காரணம், சிபிஐ வேறு எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

இவ்வழக்கில் 26 பேர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டதில் 17 பேரிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. வாக்குமூலம் இல்லாத 9 பேர் நிரபராதிகளாக விடுதலை ஆனார்கள். தற்போது முடிவில்லாத தண்டனையை அனுபவித்து வரும் எழுவருக்கு எதிராக உள்ள ஒரே சாட்சியம் அவர்களது வாக்குமூலங்கள் மட்டுமே. மனித உரிமைகளுக்கு எதிரான கருப்புச் சட்டம் என வர்ணிக்கப்பட்ட தடா சட்டம் 1995 ஆம் ஆண்டு மத்திய அரசால் கைவிடப்பட்டது. 1999ஆம் ஆண்டு பேரறிவாளன் உட்பட 26 பேர் மீதும் பதிவு செய்யப்பட்ட தடா வழக்குகளிலிருந்து அனைவரையும் உச்சநீதிமன்றம் விடுவித்தது. வேதனையான வேடிக்கை என்னவென்றால் தடா சட்டமே கைவிடப்பட்டப் பிறகும் அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களையும் அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட கொடூர தண்டனையையும் மட்டும் உயிரோடு வைத்திருக்கிறார்கள்.

தடாவில் இருந்து விடுதலை எனில் தடா வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு பிற குற்றங்களில் தண்டனை அளிக்க முடியாது என பிலால் அகமது காலூ வழக்கில் 1997 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 1999 இல் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றமே அதை மீறியது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் 2017 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், "தடா சட்டமே இல்லாத போது அச்சட்டத்தில் பதிவான வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை என்பது சட்டத்திற்கு புறம்பானது" எனக் குறிப்பிட்டார்.

"தியாகராஜனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆயுள் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்" என்று அரசியல் சாசனம் உறுப்பு 161ன்படி பேரறிவாளன் ஆளுநரிடம் 30.12.2015 அன்று மனு அளித்தார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் திரும்பப் பெறவேண்டுமென 2017 இல் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சிபிஐ/எம்டிஎம்ஏ விசாரணையின் இறுதி முடிவுகள் வருகிற வரை தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுதலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போதெல்லாம் அதற்கு யாரும் மதிப்பளிக்கவில்லை. உச்சநீதிமன்றம், 'மாநில அரசு சுதந்திரமாக முடிவெடுக்கலாம்' என்று கூறி, தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்து, பேரறிவாளன் விடுதலை ஆகிவிடுவார் என - அநீதியின் அலைகழிப்பிலிருந்து கரையேறிவிடும்- கடைசி கட்டத்தில், எம்.டி.எம்.ஏ அறிக்கை எனும் பேரலையின் மூலம் மீண்டும் இவ்வழக்கையும் ஒரு நிரபராதியின் விடுதலையையும் ஆழ்கடலுக்குள் அமிழ்த்துகிறார் ஆளுநர்.

Perarivalan Enters 30th Year of Imprisonment

மாநில அரசின் விடுதலை முடிவில் தலையிட மாட்டோம் என கடந்த 2018 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தான் பேரறிவாளன் தான் விடுதலை செய்யப்படுவோம் என சற்று நம்பிக்கை கொண்டார். "இறுதிக் கட்டத்தை அடைந்தாயிற்று, ஆளுநர் ஒப்புதல் அளித்தால் விடுதலை ஆகிவிடலாம்" என அவர் நம்பிக்கையோடு இருந்த நிலையில், "இன்னும் வழக்கு முடியவில்லை, பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்க முடியும்" என்கிறார் ஆளுநர்.

ஏற்கனவே கடந்த ஜனவரி 14 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் எந்த முடிவும் எட்டப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தங்களுக்கு தெரியவில்லை என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக கூறியது. அதன் பின்னர்தான் பேரறிவாளனின் விடுதலை கோரும் மனு மீது தற்போதைய நிலையை தெரிவிக்குமாறு ஜனவரி 21, 2018 அன்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதுதான் உண்மை நிலை. இவ்வழக்கு தொடர்ந்து நகர முடியாத ஒரு முட்டுச் சந்தில் நிற்கிறது. ஏற்கனவே மரணித்துவிட்ட இவ்வழக்கிற்கு எழுவர் விடுதலையை நிறுத்தி வைப்பதன் மூலம் மட்டுமே அதற்கு உயிர் கொடுத்துவிடலாம் என முயல்வது அநீதியின் உச்சம்.

29 ஆண்டு சிறைவாசம் ஏற்கனவே எல்லோரையும் நடைபிணமாக்கிவிட்டது. பேரறிவாளனின் பெற்றோரின் முதுமையும் நோயும் தனிமையும் அவரை கடுமையாக அலைகழிக்கின்றன. பேரறிவாளன் தான் நிரபராதி என்ற அடிப்படையில் தான் விடுதலையைக் கோருகிறார். அதற்கான எல்லா சட்ட மற்றும் தர்க்க நியாயங்களும் அவருக்கு இருக்கின்றன. நியாயப்படி நீதிமன்றமே அவரது விடுதலையை அறிவித்து இவ்வளவு காலம் அவர் இழந்த வாழ்விற்கான இழப்பீட்டையும் வழங்கியிருக்க வேண்டும்!

இந்த கொடூர விளையாட்டு உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். பேரறிவாளனின் நியாயம் வெற்றிபெற்றாக வேண்டும். நீண்டகால சிறைவாசம், சிறையில் நன்னடத்தை, வயோதிக பெற்றோருக்கு ஒரே மகன், அவரது பொருளாதார மற்றும் சமூகப் பின்னணி, சிறையிலிருந்தபடியே அவர் முடித்த பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள், அவரது மற்றும் அவரது பெற்றோரின் உடல்நல பாதிப்புகள் அனைத்தும் அவருக்கு நீதிக்கான வெற்றியை ஈட்டித் தர வேண்டும்., அதாவது உடனடி விடுதலையை பெற்றுத் தர வேண்டும். கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்க தாமதம் காட்டியதை சுட்டிக் காட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை போல ஆளுநரின் கால தாமதத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அமைச்சரவையின் முடிவுக்கிணங்க உச்சநீதிமன்றமே பேரறிவாளன் விடுதலைக்கு உத்தரவிட வேண்டும்.

Perarivalan Enters 30th Year of Imprisonment

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கும் போது உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியுமா என்ற கேள்வி எழலாம். அதற்கொரு சிறந்த முன்னுதாரணம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு தமிழக அரசு நூற்றுக்கணக்கான ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ததில் முஸ்லிம் கைதிகளை கருத்தில் கொள்ளவில்லை. இதற்கு எதிராக நான்கு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில் உயர்நீதிமன்றம் அவர்களின் விடுதலைக்கு உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கடந்த ஜனவரி மாதம் தமிழக உள்துறை செயலர் எதிர் நிலோபர் நிஷா எனும் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றத்திற்கு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் அதிகாரம் இல்லை என்று சொல்லி அத்தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. ஆனால், நீண்ட சிறைவாசம் (17 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவானவர்கள்) மற்றும் கைதிகளின் நன்னடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தனது உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பிரிவு 142 ன் கீழ் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்தது. தனது தீர்ப்பில், ''இந்த மனுதாரரை இன்னொரு சுற்று வழக்கில் அலைகழிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு பொருத்தமான வழக்கு என்று நாங்கள் தெளிவாகக் கருதுகிறோம். எனவே, அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் எங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில், மனுதாரரின் விடுதலைக்கு உத்தரவிடுகிறோம்'' என்று குறிப்பிட்டனர் நீதிபதிகள்.

பேரறிவாளனின் 30 ஆண்டு கால அலைகழிப்பையும் உச்சநீதிமன்றம் இதே போன்ற நீதியுணர்வோடு உடனடியாக முடித்து வைக்க வேண்டும். பேரறிவாளன் நீதிக்கானப் போராட்டமே இறுதியில் வெற்றியடைய வேண்டும்.

கட்டுரையாளர் : ஜெயராணி

(தி வயர் இணையதளத்தில் வெளியான ஆங்கில மொழி பெயர்ப்பின் தமிழ் மூலம்)

English summary
Perarivalan Enters 30th Year of Imprisonment.The 30th year of his imprisonment on June 11, 2020, the judicial system still insists that he fight for his release. He was arrested a month before his 20th birthday and has been imprisoned ever since
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X