சசிகலாவை சந்தித்த பேரறிவாளன்.. ஜெயலலிதா செய்த விஷயங்களை நினைவுகூர்ந்து உருக்கம்!
சென்னை : 31 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகியுள்ள பேரறிவாளன், தனது தாயார் அற்புதம் அம்மாளுடன் சென்று சசிகலாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து, தனது விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார் பேரறிவாளன். அந்த வகையில் இன்று பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அவரது தியாகராய நகர் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். அவர்களிடம் பல்வேறு விஷயங்களை கேட்ட சசிகலா, ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை என தீர்ப்பு வந்தபோது சசிகலா, பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்று ஜெயலலிதா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். ஜெயலலிதா கடந்த 2014ஆம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.