சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட!

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian social activi Periyar E. V. Ramasamy's quotes

    சென்னை: தந்தை பெரியாரின் பெயரை கேட்டதுமே பகுத்தறிவுப் பகலவன், வெண்தாடி வேந்தர், தனது ஆணித்தரமான கருத்துகளால் பழமைவாதம் பேசிய எதிரிகளை தலைதெறிக்க ஓடவிட்டவர் என ரொம்ப சீரியசான ஒரு இமேஜ்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். ஆனா அந்த கோவக்கார கிழவர் ரொம்ப குசும்பு பிடிச்ச கிழவராகவும் இருந்தார் என்பது நிறைய பேருக்கு தெரியாது. அப்படி அவர் அல்லுசில்லு கிளப்பிய அதிரடி தருணங்களைதான் இப்போது சற்றே திரும்பிப் பார்க்கப் போகிறோம்.

    பெரியார் ஒருமுறை அண்ணாவை அழைத்துக்கொண்டு காசி, ஹரித்துவார் போன்ற வட நாட்டுப் பகுதிகளுக்கு போகிறார். அந்த நாட்களில் அண்ணாதான் அவருக்கு உதவியாளர், மொழிபெயர்ப்பாளர் எல்லாமே. அண்ணா வடமாநிலம் ஒன்றிற்கு செல்வது அதுதான் முதல்முறை. தம்பி, இங்கே ரொம்ப குளிரா இருக்கும், அதனால் கோட்டு போட்டுகிட்டாதான் குளிரை சமாளிக்க முடியும். வா, உனக்கு கோட் வாங்கித்தரேன்னு பெரியார் அண்ணாவை காசியில ஒரு ஏரியாவுக்கு கூட்டிட்டு போறார்.

    periyar and his humorous side

    சூப்பர், நமக்கு கோட் கிடைக்குப் போகுதுன்னு அண்ணாவும் ஆர்வமா கூட போறார். புதிய கடைகளை எல்லாம் தாண்டி, பழைய துணி விக்கிற ஒரு கடையில் போய் நின்னாரு பெரியார். இராணுவ வீரர்கள் பயன்படுத்திய கோட்டுகளை இரண்டாம் கட்ட விற்பனை செய்யும் கடை அது. அதை எடு, இதை எடு என்று பல கோட்டுகளை எடுத்து பரிசோதனை பண்ண ஆரம்பித்துவிட்டார் பெரியார். அண்ணாவுக்கோ தர்மசங்கடமாகிவிட்டது. சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.

    'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்

    பெரியாரிடம் எப்போதுமே அப்படி ஒரு பவ்யத்துடன் நடந்துகொள்வார் அண்ணா. எடுத்த கோட்டை போட்டுப் பார்த்தால், அண்ணாவுக்கு கால் முட்டி வரை வருது. காரணம், அண்ணாவின் உயரம். ஒரு கோட்டு கூட அவர் உயரத்துக்கு சரியா வரலை. கடைசியா ஒரு கோட்டை எடுத்த பெரியார், லேசா தொங்குது, இருந்தாலும் பரவாயில்லை கீழே கொஞ்சம் கத்தரித்து போட்டுக்கொள் என்று சொல்லிவிட்டார். அப்புறமா விலை பேசும் படலம் தொடங்கியது. பெரியாரின் சிக்கனம் ஊருக்கே தெரியும். கடைக்காரன் சொன்ன விலைக்கும், நம்ம ஆளு கேட்ட விலைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. அண்ணா பார்த்தார், இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்ததும் மெல்ல பெரியாரிடம், ஐயா, இந்த கோட்டு எதுவும் எனக்கு சரியா இல்லை. அதனால எனக்கு இப்போ கோட்டே வேண்டாம்னு சொல்லிட்டாரு.

    periyar and his humorous side

    பின்னர் பெரியார் ஹரித்துவார் போயிருக்கிறார். கூடவே நம்ம அண்ணாவும் போறார். ஹரித்துவார் சாமியார்கள் அதிகம் வசிக்கும் பகுதி. நீண்ட வெள்ளை தாடியுடன், சால்வையை இரண்டாக மடித்து மேலே போட்டுக்கொண்டு பெரியார் நடந்துபோகிறார். கோட்டு கிடைக்காத அண்ணா, குளிரின் நடுக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக இறுக்கமாக கைகளை கட்டிக்கொண்டு பின்னாலேயே போகிறார். இதைப் பார்த்தவர்கள் யாரோ ஒரு புதுசாமியார் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார்களாம். பின்னால் ஒரு சிஷ்யர் இப்படி கைகளை பவ்யமாக கட்டிக்கொண்டே போகிறார் என்றால் அந்த சாமியார் எத்தனை சக்தி மிக்கவராக இருக்க வேண்டும் என்று நினைத்து, வரிசையாக வந்து பெரியாரின் காலில் பொத் பொத்தென்று விழுந்தார்களாம். அண்ணா முதலமைச்சரான பின்பு, ஒரு விழாவில் தந்தை பெரியாரை வைத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து சொன்னார்.

    பெரியார் போட்டுக்கொள்ளும் உடையில் மட்டுமல்ல, உண்ணும் உணவிலும் சிக்கனத்தை கடைபிடித்தவர். எங்காவது கூட்டம் முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பும்போது, ரொம்ப நேரம் ஆயிடுச்சி, வண்டியை எங்காவது நிறுத்துங்க சாப்பிடலாம் என்பாராம். ஐயா, சொல்றாரேன்னு எந்த பெரிய ஹோட்டல் முன்னாடியும் போய் வண்டியை நிறுத்திவிட முடியாது. எல்லா ஊரிலும் எந்த ரோட்டோர கடை நன்றாக இருக்கும் என்று பெரியாருக்கு தெரியும். அதோ அந்த மூலையில ஒரு அம்மா இட்லி சுட்டு வித்துகிட்டிருப்பாங்க, இட்லி, சட்னி எல்லாமே நல்லா இருக்கும். ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு அடுக்கு நிறைய வாங்கிக்கலாம். நாம எல்லோருமே சாப்பிட்டு முடிச்சிடலாம், அங்கே போங்க என்பாராம். அதுதான் பெரியார்.

    ஒருமுறை அண்ணாவை அழைத்துக்கொண்டு பம்பாய் (அப்போது மும்பை அல்ல) போனாராம் பெரியார். அங்கே எம்.என். ராய் என்பவரின் வீட்டில் விருந்து. யாராவது உணவில் மிச்சம் வைத்துவிட்டு எழுந்தால் உடனே பெரியார் கண்டிப்பார். அவரைப் பொறுத்தவரை, தேவையான அளவு மட்டும் வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும், உணவை வீணாக்க கூடாது. கடைசியாக தயிர்சாதம் வைத்திருக்கிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பெரியாருக்கு ஊறுகாய் தேவைப்பட்டிருக்கிறது. முதலில் வைத்த ஊறுகாயை ஏற்கனவே சாப்பிட்டுவிட்டார். இப்போது மீண்டும் வேண்டும். ஆனால் ஊறுகாய்க்கு ஆங்கிலத்தில் என்ன என்று அவருக்கு சட்டென ஞாபகம் வரவில்லை.

    ஊறுகாய், ஊறுகாய் என்று சொன்னால் ராய்க்கு புரியவில்லை. What? What? என்று அவர் மீண்டும் மீண்டும் கேட்க, இவர் ஊறுகாய், ஊறுகாய் என்று சொல்ல, அண்ணா இதை சற்று தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறார். பெரியார் அண்ணாவை உதவிக்கு அழைக்கலாம் என்று பார்த்தால், அவர் தூரத்தில் மும்முரமாக சாப்பிடுவது போல பாவ்லா செய்துகொண்டிருக்கிறார். பெரியார், பார்த்தார், இனி மொழி கைகொடுக்காது என்று புரிந்துகொண்டவர் சைகை பாஷைக்கு மாறிவிட்டார். எம்.என். ராயை பார்த்து நாக்கை வெளியில் நீட்டி, இலையில் இருந்து விரலில் தொட்டு நாக்கில் வைப்பதைப் போல சைகை செய்து புரியவைத்துவிட்டார். அதற்க்கெல்லாம் பெரியார் கூச்சப்படவே மாட்டார். எதிரில் இருப்பவருக்கு தன் கருத்தை எப்படியாவது புரியவைத்துவிடுவார்.

    இதேபோல ஒருமுறை நாகப்பட்டினம் விஜயராகலு என்பவரின் வீட்டிற்கு பெரியார் உணவு சாப்பிடச் சென்றார். அவர்கள் 15 பேருக்கு உணவு தயார் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் பெரியார் தன்னுடன் 25 பேரை அழைத்துகொண்டு போய்விட்டார். அதில் பட்டுக்கோட்டை அழகிரி மிகவும் மெதுவாகச் சாப்பிடும் இயல்புடையவர். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பச்சரிசிச் சோறு காலியாகிவிட்டது. எனவே, அழகிரிக்கு மோர் சாப்பாடு சாப்பிட்டபோது குறுவை அரிசிச் சோறு பரிமாறினர். சிவப்பு நிறத்தில் பெரிது பெரிதாக இருந்த சோற்றினைப் பார்த்ததும் அழகிரிக்கு கோபம் வந்துவிட்டது. சாப்பிட்ட கையை உதறிவிட்டு வேகமாக எழுந்தார். இதனைப் பார்த்த பெரியார், அப்பா அழகிரி, இதுவரை மல்லிகைப்பூ வந்துது, இப்போது ரோசாப்பூ வந்திருக்கு கோவப்படாம சாப்பிடு என்றாராம். அப்படியே அழகிரிக்கு இரண்டு சாத்துக்குடிப் பழம் கொடுங்கள். பசியும் தணியும் கோபமும் போய்விடும் என்றாராம்.

    காசு விஷயத்தில் தன் காசு என்றில்லை, யார் காசை வீணடித்தாலும் பெரியாருக்கு பிடிக்காது. ஒருமுறை ராஜா அண்ணாமலை செட்டியாரும், ஆர்.கே. சண்முகம் செட்டியாரும் தமிழிசை இயக்கம் தொடங்கி அதன் வளர்ச்சிக்காக எக்கச்சக்கமாக செலவு செய்துகொண்டிருந்தார்களாம். எதுக்கு இப்படி பணத்தை வீண் விரயம் செய்யனும் என்ற கேட்ட பெரியார், இதனை கண்டித்து கூட்டத்தில் பேசும்போது ஒரு கதை சொன்னாராம்.

    ஒரு வீட்டுல மருமகனுக்குப் பல் தேய்க்க சோம்பேறித்தனம். பல் தேய்க்கும்படி மருமகனிடம் சொல்ல மாமியாருக்கு வெட்கம். என்ன செய்யலாம்னு யோசிச்ச மாமியாருக்கு ஒரு யோசனை வந்திருக்கு. அதாவது கரும்பு மென்று தின்றால் பல் சுத்தமாகுமே என்று நினைத்து, மாப்பிள்ளை இந்த ஊர்க் கரும்பு ரொம்ப ருசியாக இருக்கும், ஒரு பணத்துக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி பணமும் கொடுத்து அனுப்பினார். ஆனா மாப்பிள்ளையோ பணத்தை வாங்கி எள்ளுப் புண்ணாக்கு வாங்கித் தின்றுவிட்டு பல்லை மேலும் கேவலமாக்கிட்டு வந்து நின்னாராம். மாமியாருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இந்த மாதிரி தான் இருக்கு தமிழ் இசைக்காக நீங்க பண்ற வேலைகள். தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்வு வந்தால் தமிழிசை தானாக வளர்ந்துட்டு போகுது என்றாராம் பெரியார்.

    இப்படி ஆயிரம் விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் பெரியார் பற்றி. ஒரு கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாக பதிய வைக்க எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லத் தெரிந்தவர் பெரியார். அதனால்தான் 141வது பிறந்தநாளிலும் அவரைப் பற்றி பக்கம் பக்கமாக பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறோம்.

    - கௌதம்

    English summary
    Periyar has too many shades in his character and here we see his humorous side.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X