சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. "மலேசியா" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்!

பாடகர் மலேசியா வாசுதேவன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வாசுதேவன் என்றால் தெரியாது... மலேசியா வாசுதேவன் என்றால்தான் பரிச்சயம்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்.. சாகாவரம் பெற்ற இந்த கலைஞனை நினைவுகூர்வதில் "ஒன் இந்தியா" தமிழ் பெருமை கொள்கிறது!!

"என்னய்யா இது.. பாலுக்கு உடம்பு சரியில்லையாமே.. இப்படி ஆயிடுச்சே" என்று பாரதிராஜா சொல்ல.. ஏன் புலம்பறே.. அமைதியா இரு" என்று சொல்லி பின்னாடி திரும்பினார் இளையராஜா.."வாசு.. டிராக் ஒன்னு பாடணும்.. சரியா பாடிடுடா.. அப்படி பாடிட்டா, இந்த பாட்டில இருந்து உனக்கு எல்லாமே வெற்றிதான்" என்று இளையராஜா சொன்னதுதான் மலேசியா வாசுதேவனின் ஏணிப்படியின் துவக்கப்புள்ளி!!
16 வயதினிலே படத்தின் "செவ்வந்திப் பூ முடிச்ச" பாட்டும் சரி... "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" பாடலும் சரி ரெண்டுமே ஹிட்... பாடல். ரெண்டுமே சூப்பர் ஹிட்... "குமாஸ்தா மகள்" என்ற படத்தில் ஏபி நாகராஜன் தான் மலேசியா வாசுதேவன் என்ற பெயரை சூட்டினார்.. ஆனால் உச்சிக்கு கொண்டுபோனது இளையராஜாதான்! எந்த குரல்வளத்துக்கு என்ன பாடலை தந்தால் சிறப்பாக இருக்கும் என்ற நுட்பமான, துல்லியமான ஞானத்தை பெற்றிருப்பவர் இளையராஜா.. அதனால்தான் ரக ரகமாய் பாட்டுக்களை மலேசியா வாசுதேவனுக்கு தொடர்ந்து வழங்கினார்.

 திருவிழா கச்சேரி

திருவிழா கச்சேரி

"கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ, இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததே.." போன்ற பாடல்கள் மலேசிய வாசுதேவனை வெகுசீக்கிரத்தில் அடையாளம் காட்டிவிட்டன... கமல், ரஜினி இருவருக்குமே மலேசியாவின் குரல் மிக பொருத்தமாக அமைந்தது... இன்றுவரை "பொதுவாக எம்மனசு தங்கம்" என்ற ஹீரோ என்ட்ரி பாடலுக்கு இணையில்லை... ரகளை, கூத்து, கச்சேரி, திருவிழா என்றாலே மலேசியா வாசுதேவனின் நினைவுக்கு தானாக ரசிகர்களுக்கு வந்து போகும்.

 மாயவித்தகர்

மாயவித்தகர்

அதேசமயம், "கோடை கால காற்றே", "அள்ளி தந்த பூமி அன்னையல்லவா" போன்ற பேஸ்வாய்ஸ் பாடல்களின் இன்னொரு எல்லையை தொட்டிருப்பார்.. 80'களின் காலகட்டத்தில் டீக்கடை பெஞ்சுகளைகூட தாளம் போட செய்தவர்.. சுருக்கமாக சொன்னால், இவர் பாடும் பாடலின் முதல் வரியை கேட்டால் போதும், மொத்தமாக நம்மை அந்த பாட்டுக்குள்ளேயே இழுத்து சென்று மறக்க செய்துவிடுவார்.. அந்த அளவுக்கு கட்டிப்போடும் மாயவித்தகர்.

 கச்சிதமாக பொருந்தியது

கச்சிதமாக பொருந்தியது

பொதுவாக நடிகர் திலகம் சிவாஜிக்கு டிஎம்எஸ்தான் ஆஸ்தான பாடகராக இருந்தார்.. பலர் அவருக்காக பாடியிருந்தாலும், "தேவனின் கோயிலிலே", ஒரு கூட்டுக்கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக" போன்ற மலேசியா வாசுதேவன் பாடல்கள் அபாரமாக பொருந்தியது. "முதல் மரியாதை"யில் எல்லா பாடல்களையுமே மலேசியாதான் பாடியிருந்தார்.. இனி தொடர்ந்து தனக்கான பாடல்களை மலேசியாதான் பாட வேண்டும் என்று சிவாஜி கணேசன் அறிவித்தாராம். நடிகர் திலகத்துக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் என்ற இருவேறு பரிமாணங்களுக்கும் ஒரே குரல் பொருத்தம் என்றால் அது மலேசியா வாசுதேவன் குரல்தான். அதேபோல, சீர்காழி கோவிந்தராஜனுக்கும் டிஎம்எஸ்ஸுக்கு பிறகு ஹைபிச் பாடல்களை வெகு அநாயசமாக பாடக்கூடியவர் என்றால் அது மலேசியா வாசுதேவன் மட்டும் என்று துணிந்தே சொல்லலாம்.

சிம்மக்குரல்

சிம்மக்குரல்

"வா வா வசந்தமே"... பாடலை கேட்டால் நிம்மதியின் வாசலுக்குள் நுழையலாம்.. 'ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு.. பாடல் கேட்டால் அண்ணன்கள் கண்ணில் தானாக நீர் வழியும்.. "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலில் ஜென்சியின் குரல் தனித்தன்மையாக தெரிந்தாலும், மலேசியாவன் சிம்மக்குரலிலும் சோகமும், ஏக்கமும் இழையோடியதை உணர முடிகிறது.. மலேசியா வாசுவதேன் எண்ணற்ற பாடல்களை பாடினாலும், அவர் மறைந்தபோது, ஒரு இசைநிகழ்ச்சியில் இந்த பாடலைதான் அவருக்காக சமர்ப்பித்து பாடினார் இளையராஜா!

 நடிப்பு

நடிப்பு

பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பையும் விட்டு வைக்கவில்லை.. கிட்டத்தட்ட 85 படங்களில் நடித்துவிட்டார்.. 4 படங்களுக்கு இசையும் அமைத்துவிட்டார்... இதெல்லாம் தமிழக மக்களுக்கு பெரும்பாலும் தெரிந்த செய்திதான்.. ஆனால், தெரியாத ஒரு பக்கம் உண்டு. அதுதான் அவரது ஈர மனசு.. ஆரம்ப காலத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் ஆல்பம் வெளிவர அடிப்படை காரணமாக இருந்ததே மலேசியா வாசுதேவன்தானாம்.. எத்தனையோ உதவிகளை முகம் தெரியாத நபருக்கு செய்துள்ளார்.

 ஆத்ம திருப்தி

ஆத்ம திருப்தி

அடிப்படையிலேயே மிகச்சிறந்த மனிதர்.. ஈகோ இல்லாதவர்.. எந்த உயரத்துக்கு சென்றாலும், தன்னிலை மறக்காதவர்.. முகஸ்துதி என்பது துளியும் இருக்காது.. ஒரு பேட்டியில் இவர் சொல்கிறார், "கனவோடுதான் இந்தியா வந்தேன்... ஆனால் ஏறத்தாழ 8 ஆயிரம் பாட்டு பாடிட்டேன்.. எவரெஸ்ட் சிகரெத்தின் மீது ஏறவில்லை என்ற குறை எனக்கு இல்லை... ஆனால் பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறை உள்ளது. அது போதும்..." என்ற ஆத்மதிருப்தி வார்த்தைகள்தான் எத்தனை பேருக்கு வெளிப்படும் என்று தெரியவில்லை!

 ஆளுமைகள்

ஆளுமைகள்

விதிவசத்தினால்... 1989ல் "நீ சிரித்தால் தீபாவளி"என்ற படத்தை தயாரித்து, தோல்வியை சந்தித்தார்.. வீடு வாசல் இழந்தார்.. உடல்நலம் குன்றியது... நாளடைவில் பக்கவாதம் தாக்கியது... படுத்த படுக்கையானார்.. ஆனால் அவரது மனம் மிக கூர்மையானதாகவே இருந்தது.. ஆரம்ப காலம் முதலே தனக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் முதல் திரையுலகில் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று மலேசியா வாசுதேவன் வருத்தப்பட்டதாககூட செய்திகள் வந்தன... பொதுவாக மிகச்சிறந்த ஆளுமைகளின் அருமை அவர் வசிக்கும் காலத்திலேயே உணரப்படுவதில்லை என்பதுதான் கசப்பான வரலாற்று உண்மை!!

ஆனால்... அழுத்தமான குரலில், இனம் புரியாத சோகத்துடன் இந்த மாயமந்திர குரலோன் பாடிய "பூங்காற்று திரும்புமா" என்ற பாடல் இன்னமும் ஏதோ ஒரு அர்த்தத்துடன் வலியுடன் ஒலிப்பது போலவே நமக்கு தோன்றுவது ஏனோ!!

English summary
playback singer Malaysia Vasudevan memorial day today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X