பிரதமர் மோடியின் தமிழக நிகழ்ச்சி நிரல் இதுதான்.. முழு விவரம்..
சென்னை: நாளை மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு இரவு 10:25 மணியளவில் டெல்லி புறப்படுகிறார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெற உள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!
இதில் பங்கேற்பதற்காக நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்.

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடி ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகள்
திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஜனவரி 12ம் தேதி திறப்பு விழா நடைபெற இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க திட்டமிடப்பட்டது.

விரைவுச் சாலை
ஆனால், அப்போது கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 26 ஆம் தேதி சென்னை வரும் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் கலந்துகொள்ள உள்ளார். அதில், சென்னை - பெங்களூரு இடையேயான 4 வழி விரைவுச் சாலையின் 3 ஆம் கட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

சாலை, ரயில் திட்டங்கள்
அத்துடன் இந்த விழாவில் சென்னை மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் திட்டம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முதல் மதுரை வரையிலான ரயில் சேவை திட்டம் உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சி நிரல்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பிற்பகல் 3:55 மணியளவில் சென்னை புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாலை 5:05 மணியளவில் விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக 5:45 மணியளவில் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்ல உள்ளார். 7 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையத்துக்கு 7:35 மணியளவில் சென்றடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு டெல்லி விமான நிலையத்துக்கு 10:25 மணிக்கு சென்றடைய உள்ளார்.